ETV Bharat / state

வண்டலூர் பூங்காவிலிருந்து தப்பிச் சென்று போக்கு காட்டிய அனுமன் குரங்குகள் பிடிபட்டது..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2024, 4:18 PM IST

Hanuman monkeys caught: வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பிச் சென்ற இரண்டு அனுமன் குரங்குகள் வண்டலூர் பூங்கா ஊழியர்களிடம் சிக்கியது.

வண்டலூர் பூங்காவிலிருந்து தப்பிச் சென்று போக்கு காட்டிய அனுமன் குரங்குகள் பிடிபட்டது
வண்டலூர் பூங்காவிலிருந்து தப்பிச் சென்று போக்கு காட்டிய அனுமன் குரங்குகள் பிடிபட்டது

வண்டலூர் பூங்காவிலிருந்து தப்பிச் சென்று போக்கு காட்டிய அனுமன் குரங்குகள் பிடிபட்டது

சென்னை: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் உயிரியல் பூங்காவிலிருந்து கடந்த மாதம் விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு 10 அனுமன் குரங்குகள் கொண்டுவரப்பட்டது. பின்னர் அந்த குரங்குகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்காகப் பூங்கா மருத்துவமனை அருகே உள்ள தனிமைப்படுத்தப்பட்ட கூண்டில் அடைத்து ஊழியர்கள் பராமரித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூண்டிலிருந்து 2 ஆண் அனுமன் குரங்குகள் தப்பி பூங்காவிற்குள் ஓடியது. பின்னர் தப்பி ஓடிய குரங்குகளை ஊழியர்கள் பூங்கா முழுவதும் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஊரப்பாக்கத்தில் ஒரு அனுமன் குரங்கு குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிவதாகப் பொதுமக்கள் வண்டலூர் பூங்கா நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து பூங்கா ஊழியர்கள் அப்பகுதியில் சுற்றி வந்த அனுமன் குரங்கை மயக்க ஊசி செலுத்தியும், கூண்டு வைத்துப் பிடிக்க முயற்சி செய்தனர்.

ஆனால் குரங்கைப் பிடிக்க முடியவில்லை. அதேபோல் தப்பிச் சென்ற மற்றொரு அனுமன் குரங்கு மண்ணிவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் தென்னை மரத்தில் இருப்பதாக நேற்று முன்தினம் அப்பகுதி பொதுமக்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குத் தகவல் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, அந்த வீட்டின் மொட்டை மாடியில் குரங்கைப் பிடிப்பதற்காகப் பூங்கா ஊழியர்கள் இரும்பு கூண்டை வைத்து அதில் கேரட், வாழைப் பழங்களை வைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மண்ணிவாக்கத்தில் ஒரு வீட்டின் மேல் இருந்த அனுமன் குரங்கு கூண்டில் வைக்கப்பட்டிருந்த கேரட்டை எடுப்பதற்காக மொட்டை மாடிக்கு வந்த போது அங்கு மறைந்திருந்த பூங்கா ஊழியர்கள் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி அனுமன் குரங்கைப் பிடித்தனர்.

பின்னர், அந்த குரங்கைப் பாதுகாப்பாக வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குக் கொண்டு வந்து விலங்குகள் புனர்வாழ்வு மையத்தில் தனியாக ஒரு கூண்டில் அடைத்து, பூங்கா மருத்துவர்கள் அதற்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஊரப்பாக்கம் பகுதியில் சுற்றி வந்த மற்றொரு ஆண் அனுமன் குரங்கு இன்று (பிப்.19) பூங்கா ஊழியர்கள் வைத்திருந்த கூண்டில் பழங்கள் எடுக்க வந்த போது சிக்கியது.

இதையும் படிங்க: இயந்திரக் கோளாறு காரணமாக அபுதாபி செல்லும் விமானம் ரத்து..பயணிகள் கடும் அவதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.