ETV Bharat / state

சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்.. உதயநிதி, செந்தில் பாலாஜி வழக்கை மேற்கோள் காட்டிய அரசுத் தரப்பு! - Savukku Shankar Police Custody

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 8:10 PM IST

Court allows one day police custody for savukku shankar: சவுக்கு சங்கரை விசாரிப்பதற்காக ஏழு நாட்கள் போலீஸ் கஸ்டடி கேட்கப்பட்டிருந்த நிலையில், ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சவுக்கு சங்கர் மற்றும் அவரது வழக்கறிஞர் புகைப்படம்
சவுக்கு சங்கர் மற்றும் அவரது வழக்கறிஞர் புகைப்படம் (Credits to ETV Bharat Tamil Nadu)

வழக்கறிஞர் முல்லை சுரேஷ் பேட்டி (Credits to ETV Bharat Tamil Nadu)

திருச்சி: பெண் காவலர்கள் குறித்து நேர்காணலில் அவதூறு கருத்துக்களை பேசியதாக யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, திருச்சி நீதிமன்றம் இன்று (மே 16) அனுமதியளித்துள்ளது.

தமிழக காவல்துறையில் உள்ள பெண் காவலர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் நேர்காணல் கொடுத்ததாக யூடியூபர் சவுக்கு சங்கரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனியில் வைத்து கைது செய்து, கோவை சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, நேற்று (மே 15) சவுக்கு சங்கர் கோவை சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு, திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயபிரதா, வழக்கை மே 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து, சவுக்கு சங்கர் திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து இன்று காலை லால்குடி சிறையில் இருந்த சவுக்கு சங்கரை, காவல்துறையினர் திருச்சி நீதிமன்றத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வந்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.

அப்போது சவுக்கு சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு இடத்தில் பேசியதற்காக பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு செய்வது எப்படி? என கேட்டபோது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் அதற்கு பதிலளிக்கும் வகையில், உதயநிதி சனாதானத்தை குறித்து பேசிய போது, அவர் மேல் பல்வேறு மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதை சுட்டிக்காட்டினார்.

இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ஒரே வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் எடுத்துக் கூறினார். அதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், “சவுக்கு சங்கரை விசாரிப்பதற்காக ஏழு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க வேண்டும். சவுக்கு சங்கர் தனியார் யூடியூப் சேனலில் பெண் காவலர்களையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது.

இந்த வீடியோவால் காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமுதாயத்தில் இருக்கக்கூடிய பெண்களுக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல், பெண்களைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறாக கருத்துகளை தெரிவித்தது சட்டப்படி குற்றம்.

மேலும், சவுக்கு சங்கருக்கு எதிர் தரப்பினர் போலீஸ் கஸ்டடி வழங்கக்கூடாது என்று தெரிவித்து வருகிறார்கள். ஆனால், செந்தில் பாலாஜி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின் அவருக்கு மருத்துவ சிகிச்சையும் வழங்கப்பட்டது. இருந்த போதிலும், அந்த வழக்கில் சில உண்மைகளைக் கண்டறிவதற்காக அவர் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கப்பட்டார்.

அது போலவே இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஆதரவாக யார் செயல்படுகிறார்? இவர் இதுபோன்று தவறான கருத்துக்களை வெளியிடுவதற்கு பின்புலமாக யார் இருக்கிறார்கள்? எதற்காக அவதூறுகளை பரப்ப வேண்டும் என்ற கோணங்களில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்.

அதேநேரம், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தனியார் யூடியூப் சேனல் உரிமையாளரும், ஆசிரியருமான பெலிக்ஸ் ஜெரால்டின் வீடு மற்றும் அலுவலகத்தை சோதனை செய்ததில் சில முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், சவுக்கு சங்கரை விசாரணை செய்ய போலீஸ் கஸ்டடி வழங்க வேண்டும்” என நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து சவுக்கு சங்கரின் வழக்கறிஞர், “தனியார் யூடியூப் சேனலில் சவுக்கு சங்கர் பேசிய வீடியோ இனிமேல் அழிக்க முடியாது. அதற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. பின்பு கோவை நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணை செய்து, அவருக்கு நீதிமன்றக்காவல் வழங்கியுள்ளது.

அதேநேரம், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தனியார் யூடியூப் சேனல் உரிமையாளரும், ஆசிரியருமான பெலிக்ஸ் ஜெரால்டின் வீடு மற்றும் அலுவலங்களில் சோதனை செய்து சில ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் இந்த வழக்கில் எதற்காக போலீஸ் கஸ்டடி வழங்க வேண்டும்?

தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் பேர் சவுக்கு சங்கர் மீது புகார் தெரிவித்து இருந்தால், ஒரு லட்சம் முறை நீதிமன்றத்தில் ஆஜராக முடியுமா? ஆகையால், தமிழ்நாடு முழுவதும் கொடுக்கப்பட்டுள்ள புகார்களை ஒரே வழக்காக எடுத்துக் கொண்டு தவறுகள் இருக்கும் பட்சத்தில், நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும். ஆகையால், சவுக்கு சங்கருக்கு போலீஸ் கஸ்டடி வழங்கக்கூடாது.

ஏற்கனவே சவுக்கு சங்கரின் உடல்நிலை சரியில்லை, கை உடைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நேற்று வாகனத்தில் வரும் போதே அவர் பெண் காவலர்களால் தாக்கப்பட்டுள்ளார். இதையும் தாண்டி போலீஸ் கஸ்டடிக்கு அனுமதித்தால், சவுக்கு சங்கரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஆகையால் கஸ்டடி வழங்கக்கூடாது” என நீதிபதியிடம் முறையிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயபிரதா, 7 நாள் காவல் கஸ்டடி கேட்டிருந்த நிலையில், ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் எனவும், அதேநேரம், நாளை மாலை 4 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் கூறி, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் முல்லை சுரேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மாவட்ட காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் கோடிலிங்கம், 7 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தது.

கோவையில் இருந்து திருச்சி வரும் பொழுது தாக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, அதற்கான உண்மைத்தன்மை அறியும் வரை போலீஸ் காவலில் வழங்கக் கூடாது எனவும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் என்றும் சவுக்கு சங்கர் தெரிவித்ததன் பேரில் நாங்கள் ஆட்சேபனை தெரிவித்தோம்.

தொடர்ந்து நீதிபதி இருதரப்பு வாதங்களை கேட்டறிந்து, இன்று 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை ஒரு நாள் போலீஸ் காவலில் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மேலும், அவரை மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ அல்லது எந்த வித காயமும் ஏற்படுத்தக் கூடாது எனவும், தேவையான மருத்துவ உதவிகள் செய்து கொடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இப்போது என்ன நிலையில் அழைத்துச் செல்லப்படுகிறாரோ, அதே நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து, அவரது உடல் நலம் குறித்து அறிக்கை பெற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், 24 மணி நேரத்திற்குள் வழக்கறிஞர்கள் 3 முறை அவரைச் சென்று பார்வையிடலாம் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று அவரை கோவையில் இருந்து அழைத்து வரும் போது தாக்கப்பட்டது குறித்த மருத்துவப் பரிசோதனை அறிக்கை இதுவரை எங்களுக்கு வழங்கப்படவில்லை. அது கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கைது நடவடிக்கை.. பெலிக்ஸ் ஜெரால்ட் முன்ஜாமீன் மனு தள்ளுபடி! - FELIX GERALD BAIL DISMISSED

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.