பல் பிடுங்கிய விவகாரம்; எஸ்சி, எஸ்டி வழக்கில் இருந்து அதிகாரிகளை காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 1:29 PM IST

tn government try to protect police officers from sc st atrocity act Henri Tiphagne accused

ASP Balveer Singh: அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினர் மீது முறையாக வழக்குகள் பதிவு செய்யவில்லை என்றும், எஸ்.சி, எஸ்.டி பிரிவின் கீழ் வழக்கு பதியக் கூடாது என்பதற்காக எஸ்.சி, எஸ்.டி இல்லாத காவல்துறையினர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என ஹென்றி திபேன் கூறியுள்ளார்.

அமுதா ஐஏஎஸ் அறிக்கையை வெளியிட்ட ஹென்றி திபேன்

மதுரை: அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில், கடந்த 2023ஆம் ஆண்டு அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக பணிபுரிந்த பல்வீர்சிங், விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடர்பாக அமுதா ஐஏஎஸ் நேரடி விசாரணை மேற்கொண்டார். அமுதா ஐஏஎஸ் தலைமைச் செயலாளரிடம் தாக்கல் செய்த 33 பக்க இடைக்கால உயர்மட்ட விசாரணை அறிக்கையின் நகல், நீதிமன்ற ஆணைப்படி பாதிக்கப்பட்டவர்களிடம் வழங்கப்பட்டது. இதனையடுத்து, விசாரணை அறிக்கையினை மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி திபேன் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பாதிக்கப்பட்ட நபர்கள் மீடியாவிடம் பேசக் கூடாது என பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயினை அரசு வழக்கறிஞர் திருமலைக்குமார் வழங்கி உள்ளார். குற்றச்சாட்டில் உள்ள காவல்துறையினர் மீது முறையாக வழக்குகள் பதிவு செய்யவில்லை. எஸ்.சி, எஸ்.டி பிரிவின் கீழ் வழக்கு பதியக் கூடாது என்பதற்காக எஸ்.சி, எஸ்.டி இல்லாத காவல்துறையினர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அறிக்கையில் காவல்துறையினர், அரசு மருத்துவர், அரசு வழக்கறிஞர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேர்மையாக விசாரணை செய்து அமுதா ஐஏஎஸ் இடைக்கால விசாரணை அறிக்கை தாக்கல் செய்து உள்ளார். உயர் நீதிமன்றத்தில் அறிக்கை வேண்டும் என மனுத் தாக்கல் செய்த நிலையில், அமுதா ஐஏஎஸ் விசாரணை அறிக்கையின் இடைக்கால அறிக்கையை கொடுத்துள்ளனர்.

கடந்த 19.4.2023ஆம் தேதி அன்று நடைபெற்ற இடைக்கால அறிக்கையை வழங்கியுள்ளனர். இன்னும் முழுமையான அறிக்கைகளை வழங்கவில்லை. அமுதா ஐஏஎஸ் தனது அறிக்கையில் சில பரிந்துரைகளை கொடுத்து உள்ளார். தமிழக அரசு தலைமையிலான சிபிசிஐடி காவல்துறையினர், கீழ்த்தரமான தரக்குறைவான விசாரணை முறைகளை பயன்படுத்தியுள்ளனர். முதலமைச்சர் கீழுள்ள உள்துறை செயலாளர் தலைமையிலான காவல்துறை ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக உள்ளது? பல்வீர்சிங் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இதனை பயன்படுத்தி மீண்டும் அவர் பதவி பெற்றுள்ளார்.

உயர் காவல்துறை அதிகாரிக்கு ஆதரவாக உள்துறை அலுவலகம் செயல்படுகிறது. அமுதா ஐஏஎஸ் அறிக்கை என்பது இடைக்கால அறிக்கையாக மட்டுமே வந்துள்ளது. இதனை ஏன் ரகசியமாக வைத்திருந்தார்கள் என்பதை அறிக்கை வெளிக்கொண்டு வந்துள்ளது. சிசிடிவி காட்சிகள் இருந்தும் அது அழிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அழுத்தம் காரணமாக, இடைக்கால அறிக்கையை மட்டுமே கொடுத்துள்ளனர்.

பல்வீர் சிங்கை பாதுகாக்கும் முயற்சி நடைபெற்றது. சாத்தான்குளம் சம்பவத்திற்கு இணையாக கொடூர சம்பவம் அம்பாசமுத்திரம் சம்பவம். முதலமைச்சரின் செயலாளர்கள் அமுதா ஐஏஎஸ் அறிக்கையை படித்தார்களா? இந்த அரசு சமூக நீதி அரசு என்றால், வெளிப்படைத்தன்மை வேண்டும். மறைத்து வைத்திருப்பது அரசுக்கு சரியாக இருக்காது. இந்த அறிக்கையில் அரசு வழக்கறிஞர், அரசு மருத்துவர் தொடங்கி ஏராளமானோருக்கு தொடர்பு உள்ளதால், அந்த அறிக்கையை தர மறுத்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "குடியரசு தினத்தில் மாவட்ட ஆட்சியர் விருதுகளுக்கு அரசாணை இல்லை" ஆர்டிஐ மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.