ETV Bharat / state

ரேசன் கடையில் விரல் ரேகை சரிபார்க்காதவர்களின் பெயர்கள் குடும்ப அட்டையில் இருந்து நீக்கமா? தமிழக அரசு விளக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 11:03 PM IST

Ration card fingerprint : நியாய விலைக் கடைகளில் விரல் ரேகை சரி பார்ப்பை பிப்ரவரி மாத இறுதிக்குள் மேற்கொள்ள வேண்டும், இல்லையெனில் பெயர்கள் நீக்கம் செய்யப்படும் என்று சில நாளிதழ்களில் செய்தி வெளியாகி இருந்த நிலையில் இதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கமா
குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கமா

சென்னை: நியாய விலைக் கடைகளில் விரல் ரேகை சரி பார்ப்பு தொடர்பாக சில நாளிதழ்களில் வெளியான செய்தி குறித்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிப்ரவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சில நாளேடுகளில், நியாய விலைக் கடைகளில் இன்றியமையாப் பண்டங்கள் பெறும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் சுயவிவரங்களை ஒரு வெள்ளைத்தாளில் அளிப்பதுடன் விரல் ரேகை சரிபார்ப்பை இம்மாத (பிப்ரவரி) இறுதிக்குள் மேற்கொள்ள வேண்டுமென்றும், அவ்வாறு மேற்கொள்ளாதவர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்படும் என்றும், இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்றும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ன் படி, பொது விநியோகத் திட்ட தரவுகளில் ஏற்கனவே பதியப்பட்ட முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் விவரங்களைச் சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்துப் பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறின்றி இப்பணியினைச் செய்திட அறிவுறுத்தப்பட்டு அவர்கள் ஓய்வாக இருக்கும் போதோ அல்லது பொருள்கள் வாங்க கடைக்கு வரும்போதோ கைவிரல் ரேகைப் பதிவு மூலம் புதுப்பிக்கக் கூறப்பட்டு அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல்ரேகை சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருகிறது.

இதுவரை 63% குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. மீதியுள்ள அட்டைதாரர்களுக்கும் சரிபார்க்கும் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது. குடும்ப அட்டைதாரர்கள் அவரவர்கள் வசதிக்கேற்ப விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

அவ்வாறு இயலவில்லையெனில், இதற்கென தனி முகாம்கள் நடத்தவும், தேவைப்படின் வீட்டிற்கே சென்று புதுப்பித்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும். சில நாளிதழ்களில் குறிப்பிட்டிருப்பது போல் குடும்ப அட்டைகள் ஏதும் இரத்து செய்யப்படமாட்டாது என்றும், கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்களும் நீக்கப்படாது என்றும், வெள்ளைத்தாளில் சுய விவரங்கள் ஏதும் தரவேண்டியதுமில்லை என்பதால், இதுகுறித்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை" என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அபுதாபியில் இந்து கோயில்; கும்பாபிஷேகத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.