ETV Bharat / state

100 நிமிடங்களில் நடவடிக்கை.. சி-விஜில் ஆப் குறித்து சத்ய பிரதா சாகு தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 4:45 PM IST

Parliament Election 2024: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு டிஜிட்டல் முறையில் எந்த வகையிலும் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டாலும், அவை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Parliament Election 2024
நாடாளுமன்றத் தேர்தல் 2024

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 8) நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, இரு தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை, கடந்த காலங்களில் பதிவாகியுள்ள வாக்கு சதவீதங்கள், அதேபோல எந்தெந்த பகுதிகளில் வாக்குப்பதிவு எண்ணிக்கையானது குறைவாக உள்ளது, அதனை எவ்வாறு அதிகப்படுத்த வேண்டும், பதட்டமான வாக்குச்சாவடிகள், பிரச்னைக்குரிய இடங்கள் போன்ற பல்வேறு பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, “சிவிஜில் (cVIGIL), ESMS அப்ளிகேஷன் மூலம் புகார்கள் மீது நடவடிக்கை, நகரப் பகுதிகளில் வாக்குப்பதிவை அதிகப்படுத்துவதற்கு பல்வேறு முன்னேற்பாடுகள், அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் நடைபெறுகிறதா உள்ளிட்டவை குறித்து கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் எப்படி உள்ளது என்பது குறித்து நாங்கள் இன்று ஆலோசனை மேற்கொண்டோம். குறிப்பாக, கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்காளர் விவரங்கள் மற்றும் பதிவாகியுள்ள வாக்குப்பதிவுகள், அதேபோல வாக்குப்பதிவு இயந்திரத்தின் நிலை உள்ளிட்டவை குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், சட்ட விரோதமாக வாக்காளர்களுக்கு பணப் பரிமாற்றம் செய்பவர்களைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக, சிவிஜில் அப்ளிகேஷன் மூலம், எந்த ஒரு தனி நபரும் உரிய ஆதாரத்துடன் வீடியோ அல்லது புகைப்படத்துடன் புகாரைப் பதிவு செய்யும் பொழுது, 100 நிமிடங்களுக்குள் அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தற்பொழுது முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல காவல்துறை, வருவாய்த்துறை, வணிகவரித்துறை, வருமான வரித்துறை, வங்கிகள் உள்பட பல்வேறு துறையினருக்கும் அடங்கிய குழுவை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களுக்கு ESMS அப்ளிகேஷன் மூலம், புகார் அளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து உள்ளோம்.

கடந்த காலங்களில் பதிவாகியுள்ள வாக்கு எண்ணிக்கைகளின்படி, நகரப் பகுதிகளில் வாக்கு எண்ணிக்கையானது குறைவாக பதிவாகியுள்ளது. எனவே, அந்த பகுதிகளில் வாக்கு எண்ணிக்கையை அதிகரிப்பதற்குத் தேவையான அனைத்து விழிப்புணர்வு பணிகளையும் மேற்கொண்டுள்ளோம்.

மேலும், அந்த பகுதிகளில் அக்கறை செலுத்தி முழு வாக்குப்பதிவு நடைபெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஏற்படுத்த உள்ளோம். பதட்டமான வாக்குச்சாவடிகள் என தேர்தல் ஆணையத்திடம் ஒரு அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளது.

அதன்படி, அந்தந்த வாக்குச்சாவடிகள் அனைத்தும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு, அதிகாரிகள் அடங்கிய குழுவினர் தொடர் ஆய்வு மேற்கொள்வர். மேலும், பதிவாகிய வாக்குப்பெட்டிகளை வைப்பதற்கும், அந்த இடத்தைச் சுற்றிலும் பாதுகாப்புகள் போடுவதற்கும், தேவையான நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு அறிவுறுத்தி உள்ளோம்.

குறிப்பாக, போலி வாக்காளர்களைக் கண்டறிவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அது முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும். தேர்தல் பத்திரங்கள் குறித்து உச்ச நீதிமன்றமும், இந்தியத் தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், மாநில தேர்தல் ஆணையம் எதுவும் செய்ய முடியாது. எங்களுடைய பணிகளை நாங்கள் சிறப்பாகச் செய்து வருகிறோம்.

தற்பொழுது முதியவர்கள் தங்களது வாக்குப்பதிவுகளைச் செலுத்துவதற்கு 85 வயது நிர்ணயம் செய்துள்ளோம். அதைத் தாண்டி அவர்களின் இருப்பிடங்களுக்கேச் சென்று வீடியோ காட்சிகள் பதிவு செய்து, அவர்களுடைய வாக்கினை வாக்குப்பதிவு இயந்திரங்களில் செலுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

அதேபோல, அரசு காப்பகங்கள் மற்றும் தனியார் காப்பகங்களில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவு செலுத்துவதற்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளது. முறையாக அவர்கள் அனைவரும் வாக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பாக, வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்படும் டிஜிட்டல் முறையில் வாக்காளர்களுக்கு பணப்பரிமாற்றம் செய்யப்படுகிறதா என கண்காணிக்கப்படும். அதேபோல, சட்ட விரோதமாக அதிக அளவிலான பணம் டிஜிட்டல் முறையில் எந்த வகையில் பரிமாற்றம் செய்யப்பட்டாலும், அவை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

குறிப்பாக காவல்துறை, வருமானவரித்துறை, வணிகவரித்துறை, போக்குவரத்துத் துறை உள்பட அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினரும் தீவிர கண்காணிப்பு ஈடுபடுத்தப்படுவார்கள். ஏற்கனவே தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்காக துணை ராணுவத்தினர் கோவை வந்துள்ளனர். தொடர்ந்து வரும் நாட்களில் கூடுதலாக துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்கள் அனைவரும் விரைவில் வருவார்கள்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இரு தனித் தொகுதிகளில் தனிச் சின்னத்தில் களமிறங்கும் விசிக.. திருமாவளவன் கூறியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.