ETV Bharat / state

ஒகேனக்கல்லில் புதிய புனல்மின் நிலையம் கொண்டுவர வாய்ப்புள்ளதா? - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 12:39 PM IST

Updated : Feb 14, 2024, 8:30 AM IST

Minister Thangam Thennarasu speech TN Assembly 2024
அமைச்சர் தங்கம் தென்னரசு

TN Assembly 2024: ஒகேனக்கல்லில் புதிய புனல்மின் நிலையம் கொண்டுவர வாய்ப்புள்ளதா? என பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு இதற்கு கர்நாடக அரசு இசைவு தெரிவிக்கவில்லை எனவும், அம்மாநில அரசே இதுபோன்ற திட்டங்களை செய்ய தயாராக இருப்பதாக கூறியநிலையில், இத்திட்டங்களில் தமிழ்நாடு அரசின் ஒத்திசைவு தேவையென ஒன்றிய அரசிற்கு வலியுறுத்தியுள்ளோம் எனப் பதிலளித்துள்ளார்.

சென்னை: இந்தாண்டிற்கான முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை 2024-2025 கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று (பிப்.13) தொடங்கியது. வினா எண் 6-ல் பேசிய நிதி மற்றும் மனிதவளம் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 'ஒகேனக்கல் நீர் மின் திட்டம் (120 மெகாவாட்) ஒன்றிய அரசிற்குட்பட்ட தேசிய நீர்மின் கழகத்தின் மூலம் உத்தேசிக்கப்பட்ட காவிரி நீர் மின் திட்டத்திற்கு உட்பட்டதாகும். இத்திட்டத்திற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி தெரிவித்த நிலையில், சம்பந்தப்பட்ட கர்நாடக அரசு இசைவு தெரிவிக்கவில்லை' என்றார்.

அப்போது பேசிய பாமக எம் எல் ஏ ஜி.கே.மணி, சம்சாரம் இல்லாமல் மனிதன் வாழலாம். ஆனால், மின்சாரம் இல்லாமல் வாழமுடியாது. தாயின் கருவறையிலிருந்து நாளுக்கு நாள் மின்சாரம் பயன்பாடு உயர்ந்து வருகிறது. குறிப்பாக, 2022-ல் தமிழ்நாட்டில் மின்நுகர்வோர் 3 கோடியே 24 லட்சத்து 65 ஆயிரம் பேர், 2023-ல் 3 கோடியே 31 லட்சத்து 16 ஆயிரம் பேர் என மின்சாரத்தின் பயன்பாடும் அதனைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவ்வேளையில் தமிழ்நாட்டின் மின் உற்பத்திக்குத் தேவைப்படும் 17 ஆயிரம் மெகாவாடிற்குப் பதிலாக, 14,915 மெகாவாட்டாக உள்ளது.

மீதியிருப்பதை வெளியில் வாங்கிக்கொண்டாலும் கூட, இந்த மின் உற்பத்தி என்பது நீர் மின் நிலையங்களான குந்தா, காடம்பாறை, மேட்டூர் உள்ளிட்ட பெரிய அணைகள், சிறிய அணைகள் என 47 அணைகள் மூலம் 2,320 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக, அனல் மின் நிலையங்களை விட நீர் மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்வது பொருத்தமானதாக இருக்கும்.இதனடிப்படையில், பென்னாகரம் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழைநீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுத்து அங்கு நீர்மின் நிலையங்கள் அமைக்கத் தமிழ்நாடு அரசு முன்வருமா? எனக் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, மின்சாரத்தேவையைப் பொறுத்த வரையில், பல திட்டங்கள் உள்ளன. பெருமளவில் சோலார், காற்றாலைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய திட்டங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருகிறது. புனல் மின் திட்டங்களுக்குத் தமிழ்நாடு அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. குறிப்பாக, குந்தா நீரேற்று திட்டம், கொள்ளிமலை நீரேற்று திட்டம் நடைமுறையில் உள்ளன. சமீபத்தில் எடுத்தக் கொள்கை முடிவில், மேல் பவானி நீலகிரி, சாண்டிநல்லா நீலகிரி, ஸ்ரீகூர் நீலகிரி இம்மூன்று திட்டங்களும் என்டிபிசி மூலமாக செய்வதற்கு அரசு ஒப்புதல் கிடைத்துள்ளது.

பிபிபி மாடல் (Public Private Participation) மூலம் 13.12.2023 தேதியிட்ட அரசாணை எண் 106-ன் படி கொள்கை ரீதியிலான முடிவு எடுத்து மேல் பவானி நீலகிரி, சாண்டிநல்லா நீலகிரி, கோதையாறு, மணலாறு, ஆழியாறு, வெள்ளிமலை, பாலாறு, மஞ்சளாறு, சில்லஹல்லா, சாத்தாறு, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இத்திட்டங்களை அமைக்க அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல, புதிய புனல்மின் திட்டங்களைக் கொண்டுவர நிறையத் திட்டங்களுக்கு அரசு ஆவண செய்து வருகிறது என்று பதிலளித்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய பாமக எம் எல் ஏ ஜி.கே.மணி, புனல் மின் நிலையங்கள் மூலமாக உற்பத்தி குறைவு, சுற்றுச்சூழல் பாதிக்காத நிலையில் 47 நிலையங்கள் உள்ளன. அதோடு புதிய திட்டங்களுக்கும் அனுமதி கிடைத்துள்ளதை வரவேற்கிறோம். குறிப்பாக, ஒகேனக்கல் என்பது கர்நாடக மாநில எல்லையில் இருப்பதோடு, மாநில பிரச்னையாக இருப்பினும் இது தேசிய மின்கழகத்தின் மூலமாக மின் தட்டுப்பாட்டைத் தடுக்க வாய்ப்பாக இது அமையும். இதற்காக கருணாநிதியின் முந்தைய ஆட்சியில், இதை நான் முன்வைத்தேன்.

அப்போது மத்திய அமைச்சராக இருந்த குமாரமங்கலம் ராஜுவிடம் கோரிக்கை வைத்து பரிசீலனை செய்யப்பட்டது. இருந்தாலும், அது நிலுவையிலுள்ளதால், தமிழ்நாடு அரசு அல்லது தேசிய மின் கழகத்தின் மூலம் கர்நாடக அரசு, தமிழ்நாடு அரசு, மத்திய அரசு என முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டுமெனவும் இதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்கப்படுமா? எனக் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இது தொடர்பாக முத்தரப்பு ஒப்பந்தத்திற்கான வரைவு தமிழ்நாடு சார்பில் அனுப்பியிருந்தோம். இதற்கு கர்நாடக அரசு இசைவு தெரிவிக்கவில்லை. மேற்குறிப்பிட்ட திட்டங்களோடு கூடுதல் திட்டங்களை நாங்களாகவே செய்ய விரும்புவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இதற்குத் தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டது. இதுபோன்ற திட்டங்களில் தமிழ்நாடு அரசின் ஒத்திசைவு தேவையென ஒன்றிய அரசிற்கு வலியுறுத்தியுள்ளோம். இரு மாநில எல்லையில் அமைந்துள்ள இப்பகுதியில் இத்திட்டத்திற்கு ஏற்ற சூழல் வரும் போது கட்டாயம் இதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆளுநர் சட்டப்பேரவை வீடியோ வெளியிட்ட விவகாரம்; காங்கிரஸ் தரப்பில் அவை உரிமை மீறல் தீர்மானம்!

Last Updated :Feb 14, 2024, 8:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.