ETV Bharat / state

மறு உத்தரவு வரும் வரை நீர்நிலைகளுக்குச் செல்லக்கூடாது.. நெல்லை ஆட்சியர் எச்சரிக்கை! - Tirunelveli Rain

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 18, 2024, 9:35 PM IST

Tirunelveli Rain: ஏற்கனவே மணிமுத்தாறு அருவி, களக்காடு, தலையணை, மாஞ்சோலை நம்பி கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வனத்துறை தடை விதித்துள்ள நிலையில், மறு உத்தரவு வரை வரும் வரை எந்தவொரு நீர்நிலைகளுக்கும் செல்ல வேண்டாம் என நெல்லை ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

நெல்லையில் பெய்த மழை புகைப்படம்
நெல்லையில் பெய்த மழை புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: குமரிக் கடல் பகுதியில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நெல்லை மாவட்டத்திலும் சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், இன்று நெல்லை மாவட்டத்தின் ராதாபுரம், திசையன்விளை, பாபநாசம் போன்ற பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது.

முக்கியமாக, திசையன்விளை பகுதியில் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பலத்த காற்று வீசியதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். அதிகபட்சமாக பாபநாசத்தில் 27 மில்லி மீட்டர், ராதாபுரத்தில் 19 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மிதமான மழை நீடித்து வருகிறது.

அதேபோல், நெல்லை மாவட்டத்தில் பிரதான சுற்றுலாத் தலமான மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் பகுதி தொடர் மழையால் அழகின் உச்சத்திற்கு சென்றுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் மறு உத்தரவு வரும் வரை நீர்நிலைகளுக்குள் இறங்க வேண்டாம் என நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஏற்கனவே, மணிமுத்தாறு அருவி, களக்காடு, தலையணை, மாஞ்சோலை நம்பி கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இந்த தடை மறு உத்தரவு வரை வரும் வரை தொடரும். மேற்கு தொடர்ச்சி மலை ஆறுகள், அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம். பொதுமக்கள் தாமிரபரணி ஆறு, கடனா ஆறு, நம்பியாறு உள்ளிட்ட ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்குள் இறங்க வேண்டாம்.

கால்நடைகள், வாகனங்களையும் இறக்க வேண்டாம். கடற்கரை ஓரங்களில் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால், கடற்கரைகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள் அருகில் நிற்கக்கூடாது. பழுதடைந்த கட்டிடங்கள் அருகில் செல்லக்கூடாது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டாலோ, மின் வயர்கள் அறுந்து கிடந்தாலோ உடனடியாக மின்னகம் உதவி மையத்திற்கு (9498794987) தகவல் தெரிவிக்க வேண்டும். மாவட்ட பேரிடர் மேலாண்மை உதவி மையத்தை 1077 என்ற எண்ணிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் உதவி மையத்தை 101 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க என்ன செய்ய வேண்டும்? - Dengue Fever Cautions

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.