ETV Bharat / state

கோவை கார் வெடிப்பு; கைது செய்யப்பட்ட மூவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை! - Coimbatore Car Blast update

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 23, 2024, 3:12 PM IST

Coimbatore car blast: கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கோயம்புத்தூர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

coimbatore car blast
coimbatore car blast

கோயம்புத்தூர்: கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக, கார் ஒன்று வெடித்துச் சிதறிய சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் (NIA) விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூவரை இன்று என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவை அழைத்து வந்துள்ளனர்.

கோவையில் கடந்த 2022ஆம் ஆண்டு டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் வீதியில், கார் ஒன்று வெடித்துச் சிதறியதில், ஜி.எம் நகரைச் சார்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இதையடுத்து, ஜமேசா முபின் வீட்டில் காவல்துறையினர் நடத்திய சோதனையில், ஐஎஸ்ஐஎஸ் (ISIS) தொடர்புடைய சில சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கார் வெடிப்பு தொடர்பாக காவல் துறையினர் நடத்திய புலன் விசாரணை முடிக்கப்பட்டு, பின்னர், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் இவ்வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, என்.ஐ.ஏ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் 5 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 11 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், மேலும், இருவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த நிலையில், கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது உசேன், ஜமேசா உமரி, இர்சாரி உள்ளிட்ட மூவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் காவலில் எடுத்து கோவை அழைத்து வந்தனர்.

கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த கோட்டை ஈஸ்வரன் கோயில் வீதிக்கு இன்று காலை நேரில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், போத்தனூர் இஸ்லாமிக் தொழில்நுட்ப நிறுவனம், குனியமுத்தூர் அரபிக் கல்லூரி, ஆசாத் நகர் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திச் சென்றனர். என்.ஐ.ஏ அதிகாரி விக்னேஷ் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ அதிரடி கைது! - TENKASI VAO ARREST

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.