ETV Bharat / state

“பல குடும்பங்களின் பாவச் செயலில் ஈடுபடாதீர்கள்”.. போதைப்பொருளுக்கு எதிராக தஞ்சை கிராமத்தின் முன்னெடுப்பு! - Drugs Banned Village in Thanjavur

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 18, 2024, 3:30 PM IST

The Drugs Sales Banned Village: தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பொன்னாப்பூர் கிராமத்தில், போதைப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றி கிராமம் முழுவதும் நோட்டீஸ் அச்சிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது, அக்கிராமத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

A notice affixed prohibiting drugs
போதைப் பொருட்களுக்கு தடை விதித்து ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ் மற்றும் கிராம இளைஞர்கள் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

போதைப் பொருட்களுக்கு தடை விதித்து ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ் தொடர்பான வீடியோ (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், கீழ்வேங்கைநாடு பகுதியில் உள்ள பொன்னாப்பூர் கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி, தங்களது கிராமத்தில் மது உள்ளிட்ட எந்தவித போதைப் பொருட்களும் பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது என தீர்மானம் நிறைவேற்றி முடிவெடுத்துள்ளனர்.

அந்த தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில், நோட்டீஸ் அச்சிட்டு பேருந்து நிறுத்தம், மளிகை கடைகள், அங்கன்வாடி மையம், ஊராட்சி மன்ற அலுவலகம் என ஊர் முழுவதும் சுவர் விளம்பரம் செய்தும், வீடு வீடாகச் சென்று நோட்டீஸ் வழங்கியும் அப்பகுதி இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த நோட்டீஸில், "கீழ்வேங்கை நாடு, பொன்னாப்பூர் கிழக்கு கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எந்தவித போதைப் பொருட்களும் விற்கக்கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ளது. மீறி விற்றாலோ, விற்பனைக்கு துணை போனாலோ அது இந்த கிராமத்திற்கு செய்யும் துரோகம். ஆகவே, பல குடும்பங்களின் பாவச் செயலில் ஈடுபடாதீர்கள், இவன் பொன்னாப்பூர் கீழ்ப்பாதி இளைஞர்கள்" என்று அச்சிட்டுள்ளனர்.

இது குறித்து பொன்னாப்பூர் கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்த தீபன் என்ற இளைஞர் பேசுகையில், "எங்கள் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, எங்களது கிராமப் பகுதியில் எந்த விதமான போதைப் பொருட்களும் விற்பனை செய்யக் கூடாது என்று முடிவு செய்துள்ளோம்.

மேலும், இது குறித்து கிராமம் முழுவதுமாக சுவர் விளம்பரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம். இந்த முடிவுக்கு எங்கள் கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவரும் நூறு சதவீதம் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுமட்டுமல்லாது, சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பொதுமக்களும் வரவேற்பு அளித்து, அவர்களது கிராமத்திலும் இதேபோல செயல்படுத்த உள்ளதாக தெரிவிக்கின்றனர்" என்று கூறினார்.

இதையும் படிங்க: நெல்லை மக்களை அச்சுறுத்திய சிறுத்தை... கூண்டில் வசமாக சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.