மூளையில் அரிதான அறுவை சிகிச்சை; கோமா நோயாளிக்கு மறுவாழ்வளித்த தஞ்சை மருத்துவர்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Desk

Published : Jan 20, 2024, 12:03 PM IST

Thanjavur Meenakshi Hospital brain surgery

Brain Surgery: தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் மூளையில் அரிதான இரத்தக்குழாய் வெடிப்பை நுண் அறுவை சிகிச்சை செய்து கோமாவிலிருந்த 40 வயது பெண்ணுக்கு மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.

கோமா நோயாளிக்கு மறுவாழ்வளித்த தஞ்சை மருத்துவர்கள்

தஞ்சாவூர்: தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில், மூளையின் பின்பகுதியின் கீழ்புறத்தில் உள்ள இரத்தக்குழாயில் ஏற்பட்ட வீக்கத்தினால் கிழிசல் ஏற்பட்டு, அதன் மூலம் உருவான இரத்தக்கசிவை நிறுத்த நுண் அறுவை சிகிச்சை அடிப்படையில், கிளிப்பிங் செயல்முறையை மருத்துவ நிபுணர்கள் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.

இப்பாதிப்பு ஏற்படும் 90 சதவீதத்துக்கும் அதிகமான நோயாளிகள் உயிரிழக்கின்றனர் என்பதாலும், இந்த சிகிச்சைக்காக மூளையில் அணுக வேண்டிய இடம் மிக சிரமமானது என்பதாலும், இந்த நுண் அறுவை சிகிச்சை அரிதானது. இந்த நிலையில், முற்றிலுமாக நினைவிழந்த கோமா நிலையிலிருந்த 48 வயதான ஒரு பெண்ணுக்கு, அதிக சிக்கலான நுண் அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்துள்ளனர்.

கோமா நிலைக்குச் சென்றதற்கு பிறகு, இந்த நோயாளி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட பெண் நோயாளிக்கு செய்யப்பட்ட தொடக்கநிலை சோதனையில், மூளையில் இரத்தக்கசிவு இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, உடனடியாக செய்யபப்பட்ட நவீன ஆஞ்சியோ சோதனை, எந்த இடத்தில் இரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறது என்பதை காட்டியுள்ளது.

சிறு மூளைக்கும், மூளைத்தண்டிற்கும் இரத்தத்தை எடுத்துச் செல்கின்ற சிறுமூளையின் பின்புறத்தில், கீழ்பகுதியிலுள்ள தமனி வீங்கி, பின்னர் விரிவடைந்து அதில் கிழிசல் ஏற்பட்டிருந்துள்ளது. தமனி வீக்கம் அல்லது அழற்சி என்பது, ஒரு இரத்த நாளத்தில் ஏற்படும் வீக்கம் அல்லது பலவீனமடைந்த பகுதியைக் குறிக்கிறது.

பிஐசிஏ (PICA) அழற்சி என்பது, மூளையில் ஏற்படும் அனைத்து அழற்சிகளிலும் 3 சதவீதத்துக்கும் குறைவான பங்கினையே கொண்டிருப்பதால், இது ஒரு அரிதான பாதிப்பாக கருதப்படுகிறது. நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறையில் முதுநிலை நிபுணர் டாக்டர் அருண்குமார் தலைமையில், டாக்டர் அரிமாணிக்கம் உள்ளிட்ட மருத்துவர்கள் குழு, இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். சுமார் 5 மில்லி மீட்டர் நீளமுள்ள PICA அழற்சி பகுதியினை கிளிப் கொண்டு மூடி இரத்தக்கசிவு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நுண் அறுவை சிகிச்சை செயல்முறையின் போது, மண்டையோட்டின் மீது ஒரு சிறிய துளையிட்டு, வீக்க அழற்சி ஏற்பட்டுள்ள இரத்தக்குழாயின் திறப்பு பகுதி மீது ஒரு உலோக கிளிப்பை பொருத்தி, அதற்கு செல்லும் இரத்தப் போக்கை மருத்துவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். பாதிப்படைந்த இரத்தக்குழாயில் கிளிப் பொருத்தப்பட்டவுடன், அவ்வீக்கம் படிப்படியாக குறைந்து சிறிதாகி, அதன் பின்பு முற்றிலுமாக நீங்கிவிடும் சிகிச்சை இது எனக் கூறப்படுகிறது.

இது குறித்து டாக்டர் அருண்குமார் கூறும்போது, "சிறுமூளையிலுள்ள இரத்தநாளம் வீக்கமடைந்து கிழிவதனால், அது மூளையில் இரத்தக்கசிவை ஏற்படுத்தி, உயிருக்கு ஆபத்தான மருத்துவ அவசரநிலை நிகழ்வாக மாறுகிறது. சுற்றியுள்ள மூளைத் திசுக்களில் இரத்தம் சிந்தும்போது, நிரந்தரமான மூளைச்சேதத்தை அல்லது வலிப்புத்தாக்கம் மற்றும் கோமா போன்ற பிற சிக்கல்களை அது விளைவித்துவிடும்.

PICA அழற்சிகள் என்பவை மிக அரிதானவை. மூளையில் ஏற்படும் அழற்சிகள் அனைத்திலும், இதன் பங்கு 3 சதவீதத்திற்கும் குறைவானதே. இந்த நோயாளிக்கு வழங்கப்பட்ட சிகிச்சையைப் பொறுத்தவரை, 6 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் ஒரு கிளிப்பை பயன்படுத்தி இரத்தக்கசிவை தடுத்து நிறுத்தினோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தனியார் கோச்சிங் சென்டரில் இனி இதற்கெல்லாம் தடை.. மத்திய கல்வி அமைச்சகம் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.