ETV Bharat / state

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு கோயில் பூசாரிகள் ஆதரவு: சேலத்தில் நடந்த மாநாட்டில் அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 14, 2024, 10:46 AM IST

Tamil Nadu Priests Welfare Association: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளித்து, பரப்புரையில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு கோயில் பூசாரிகள் நலச் சங்கத்தில் தலைவர் வாசு அறிவித்துள்ளார்.

கோயில் பூசாரிகள் நலச் சங்கம் திமுகவுக்கு ஆதரவு
கோயில் பூசாரிகள் நலச் சங்கம் திமுகவுக்கு ஆதரவு

சேலம்: கோயில் பூசாரிகள் நலச் சங்கத்தின் 19வது ஆண்டு விழா மற்றும் மாவட்ட மாநாடு நேற்று (புதன்கிழமை) சேலத்தில் நடைபெற்றது. அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் வாசு தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், கோயில் பூசாரிகளின் ஓய்வூதியத்தை 4 ஆயிரமாக உயர்த்தியதற்கும், திருப்பணி மேற்கொள்வதற்கான நிதியை 4.5 லட்சமாக உயர்த்தியதற்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கோயில் பூசாரிகளின் நலச் சங்கத்தின் மாநில தலைவர் வாசு கூறுகையில், "கிராமப் பகுதியில் உள்ள கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால் தமிழக அரசின் இந்தத் திட்டத்தை முடக்க வேண்டும் என்கிற நோக்கில், மத்திய அரசு ஜிஎஸ்டி எனும் பெயரில் 18 சதவீதம் வரிப்பிடித்தம் செய்கிறது.

கோயில் திருப்பணிகள் மீதான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த பூசாரிகள் தொடர்ந்து வலியுறுத்தியும், மத்திய அரசு இதுவரை ஜிஎஸ்டியை ரத்து செய்யவில்லை. ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் பாதுகாவலர்கள் என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பாஜக அரசு, கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பூசாரிகளின் நலனுக்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

இதனால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு பாடம் புகட்டும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் பூசாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உள்ளோம். மேலும், திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எங்கள் சங்கத்தினர் பரப்புரையில் ஈடுபடுவார்கள்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "சேலம் மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறும் கிராமப்புற கோயில் பூசாரிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே மாதந்தோறும் 5ஆம் தேதிக்குள் ஓய்வூதியத்தை வழங்கி பூசாரிகளின் சிரமத்தை தமிழக அரசு போக்க வேண்டும்.

மேலும், ஒரு கால பூஜை நடக்கும் கோயில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும். அதேபோல் அவர்களுக்கும் ஓய்வூதியமும் வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள மாரியம்மன், காளியம்மன் போன்ற கோயில்களுக்கு ஆடி மாதத்தில் கூழ் வார்க்க அரிசி மற்றும் கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களை அரசு இலவசமாக வழங்க வேண்டும்" என்ற கோரிக்கைகளை முன்வைத்தார்.

இதையும் படிங்க: அதிமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் நிலை என்ன? - மன்சூர் அலிகான் அறிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.