ETV Bharat / state

தூத்துக்குடி வரும் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்: காங்கிரஸ் மீனவர் அணி அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2024, 11:43 AM IST

PM Modi Thoothukudi visit: தூத்துக்குடிக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக நாளை (பிப்.28) கருப்புக் கொடி போராட்டம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் மீனவர் அணி சார்பில் நடத்தப்படும் என கட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் மீனவர் அணி
கருப்புக் கொடி போராட்டம்

தூத்துக்குடி: தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இதுவரை 400 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 ஆயிரத்து 179 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், தற்போது வரை 150 படகுகள், மீனவர்களிடம் ஒப்படைக்கப்படாமல் இலங்கை நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ளது.

இதனையடுத்து, கடந்த 2016 ஆம் ஆண்டு, இருநாட்டுக்கு இடையே கூட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு, மீனவர்கள் கைது தொடர்பாக உடனடி தீர்வு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனை பாஜக அரசு சரிவர வழிமுறைப் படுத்தப்படவில்லை.

மீனவர்கள் கைது: இந்நிலையில், கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று, கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு விசைப்படகுகளை, இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்தாத என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, 2 விசைப்படகுகளையும், அதில் இருந்த 23 மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட 23 மீனவர்களில் 20 மீனவர்களை மட்டும் விடுதலை செய்து, விசைப்படகுகளின் ஓட்டுநர்கள் இரண்டு பேருக்கு தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், 2வது முறையாக எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் தமிழகம் வருகை: இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று (பிப்.27) தமிழகம் வர உள்ளார். திருப்பூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தரும் மோடி, திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வருகிற என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார்.

பின்னர், பிப்ரவரி 28 ஆம் தேதி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். குறிப்பாக, குலசேகரப்பட்டினத்தில் 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவதற்கானத் திட்டப் பணிகளுக்கு மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார்.

கருப்புக் கொடி போராட்டம்: இந்நிலையில், தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் கைதியாக இருப்பது மற்றும் மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு அகபரித்துள்ளதை கண்டித்தும், மீனவர்களை மீட்க தவறிய மத்திய அரசை கண்டித்தும், தூத்துக்குடிக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் மீனவர் அணி சார்பில், பெரியதாழை கடற்கரை கிராமத்தில், நாளை கருப்புக் கொடி போராட்டம், கட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் என்று ஒன்றுபட்ட தூத்துக்குடி காங்கிரஸ் மீனவர் அணி தலைவர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நெல்லை வரும் பிரதமர் மோடி நெல்லையப்பர் ஆவரா? - இந்து முன்னணியினர் உள்ளிட்டோர் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.