ETV Bharat / state

ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த போராட்டம் - பறந்தது தலைமை செயலரின் உத்தரவு! என்ன நடவடிக்கை தெரியுமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 7:43 AM IST

Jactto-Geo: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களின் விபரங்களை அனைத்து துறை செயலாளர்களும் அரசுக்கு அனுப்ப தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Shiv das meena
சிவ்தாஸ் மீனா

சென்னை: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வருகின்ற 15ஆம் தேதி வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அனைத்து துறை செயலாளர்களும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அதில்,"அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது விதி 20, 22 மற்றும் 22ஏ பிரிவின் கீழ் குற்றம். தமிழக அரசின் விதிப்படி, அரசின் செயல்பாட்டை பாதிக்கக்கூடிய எந்தவித வேலைநிறுத்தம் ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் அரசு ஊழியர்கள் ஈடுபடக்கூடாது அல்லது ஈடுபடுவதாக பயமுறுத்தக் கூடாது. அது விதிமுறைகளை மீறியதாகும்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட தேதியில், மருத்துவக் காரணங்கள் தவிர்த்து வேறு எந்த விதமான விடுப்பும் எடுக்கக் கூடாது. அதனை துறை தலைவர்கள் அனுமதிக்கவும் கூடாது.

வரும் 15ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். எனவே அன்றைய தினம் துறையில் உள்ள பணியாளர்கள் வருகை குறித்து காலை 10.15 மணிக்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமன்றி, வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களின் விபரங்களை அனைத்து துறை செயலாளர்கள் அனுப்ப வேண்டும்" என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும், சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு, உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 30ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அனைத்து மாவட்டங்களில் வரும் 15ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். பிப்ரவரி 26ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதற்கான பணியில் ஈடுபட்டு உள்ளதாக அறிவித்து உள்ளனர்.

அதன்பின், நேற்று(பிப்.13) அமைச்சர்களுடன் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் ஆலோசிக்க வேண்டும் என அமைச்சர்கள் கூறினர். இதுகுறித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக அரசு வருவாயைப் பெருக்கி நிதி நிலைமையைச் சீர்செய்து உயர்த்திடத் தேவையான நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறோம்.

விரைவில் நிதி நிலைமை சீர் அடைந்தவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி நிலைமைக்கு ஏற்ப அரசு பரிசீலிக்கும். இதனைக் கருத்தில் கொண்டு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிட வேண்டும் என அறிக்கை வெளியிட்டு கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பவானி ஆற்றில் காசுக்காக கொலை..? இயக்குநர் பாக்கியராஜின் கருத்துக்கு கோவை போலீசாரின் பதில் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.