ETV Bharat / state

தலைமைச் செயலாளரின் எச்சரிக்கையை மீறி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் - ஆசிரியர்கள் வேதனை! - TN SCHOOL EDUCATION DEPARTMENT

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 4:44 PM IST

Updated : May 13, 2024, 5:48 PM IST

govt school special class: 10,11,12 வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத்தேர்வை எழுதுவதற்கான சிறப்பு வகுப்புகள், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் எச்சரிக்கையை மீறி துவங்கி உள்ளன.

Student File Shot
Student File Shot (Credit to ETV Bharat Tamil Nadu)

சென்னை: கோடை காலத்தில் நடப்பாண்டில் வழக்கத்தைவிட அதிகளவில் வெப்பம் நிலவிவரும் நிலையில், 10,11,12ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத்தேர்வினை எழுதுவதற்கான சிறப்பு வகுப்புகளை பள்ளிகள் நடத்தி வருகின்றன.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து 12 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 6 ந் தேதியும், 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 10ம் தேதியும் வெளியிடப்பட்டன. 11 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.

இந்த நிலையில் பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள், வரும் ஆண்டிலேயே உயர்கல்வியில் சேரும் வகையில் துணைத் தேர்வு அரசுத் தேர்வுத்துறையால் நடத்தப்படுகிறது. 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள் ஜூன் 24 ந் தேதி முதல் ஜூலை 1 ந் தேதி வரையிலும், 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 2 ந் தேதி முதல் 9 ந் தேதி வரையிலும் இத்தேர்வுகள் நடைபெறுகிறது.

அடுத்ததாக 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 2 ந் தேதி முதல் 8 ந் தேதி வரையிலும் துணைத்தேர்வுகள் நடைபெற உள்ளன. பள்ளிகளில் படித்து தேர்வில் வெற்றிப்பெறாத மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்துவதற்கு பயிற்சி அளிக்க வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையில் தமிழகத்தில் வரும் 16ம் தேதிக்குப் பிறகு கடுமையான வெப்பம் நிலவும் என்பதால் பள்ளிகளில் மாணவர்களுக்கு எவ்விதமான பயிற்சிகளோ, சிறப்பு வகுப்புகளோ நடத்தக்கூடாது என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார். பள்ளிக்கல்வித் துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த உத்தரவுகளை மீறி, தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று முதல் சிறப்பு வகுப்புகள் நடைபெறுகின்றன. 10, 12 வகுப்புகளில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக, இன்று முதல், துணைத்தேர்வு துவங்குவதற்கு முதல் நாள் வரை சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என ஏற்கனவே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் இந்த உத்தரவுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அமல்படுத்தியுள்ளனர். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் உத்தரவை பள்ளி கல்வித்துறையே மீறுவது முற்றிலும் முரண்பாடாக அமைந்திருக்கிறது என்று ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சிறப்பு வகுப்புகள் குறித்து பல்வேறு அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாட்ஸ் அப் மூலம் ஆடியோ செய்தியும் அனுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க:சிபிஎஸ்இ + 2 தேர்வு முடிவுகள் வெளியானது... தேர்ச்சி சதவீதம் எவ்வளவு? - CBSE 12TH RESULT 2024

Last Updated : May 13, 2024, 5:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.