ETV Bharat / state

தமிழச்சி மற்றும் தமிழிசையை விமர்சித்த தமிழ்ச்செல்வி! - South Chennai NTK Candidate

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 1, 2024, 7:53 PM IST

South Chennai NTK Candidate: தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியின், திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோரின் செயல்பாடுகளை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தமிழ்ச்செல்வி பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.

South Chennai NTK Candidate Tamilselvi
South Chennai NTK Candidate Tamilselvi

South Chennai NTK Candidate Tamilselvi

சென்னை: வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலை 7 கட்டங்களாக நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில், தேர்தல் பிரச்சாரம் இன்னும் 17 நாட்கள் செய்ய முடியும் என்ற நிலையில் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு வேட்டை நடத்தி வருகின்றனர். நாம் தமிழர் கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் இந்த முறை தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படாமல், புதிதாக மைக் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், புதிதாக வழங்கப்பட்ட மைக் சின்னத்தை வாக்காளர்களிடம் கொண்டு சேர்த்தும் அவர்களின் குறைகளைக் கேட்டும் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்ச்செல்வி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்த தமிழ்ச்செல்வி தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் ஈடிவி பாரத்துக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார்.

பேட்டியின்போது, தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோரை எதிர்த்துப் போட்டியிடுவது குறித்துக் கேட்டபோது, பதிலளித்த தமிழ்ச்செல்வி, "தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன் தனிப்பட்ட வாழ்க்கையில் எனக்கு நல்ல தோழிதான். ஆனால், அரசியலில் கொள்கை அடிப்படையில் தான் அது குறித்துப் பேச வேண்டும்.

திமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் மக்களுக்கான கட்சிகள் அல்ல. தற்போது திமுக ஆளுங்கட்சியாக உள்ளது. சமீபத்தில் மிக்ஜாம் புயலின் பொழுது, வரலாறு காணாத அளவில் மழை பெய்து மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தனர். அப்போது, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தமிழச்சி தங்கபாண்டியன், மக்களை நேரில் வந்து சந்தித்திருக்கலாம்.

கழுத்தளவு தண்ணீர் இருக்கும் பொழுது, மக்களுக்குத் தேவை மூன்று நாட்கள் உணவுதான். அதனைக் கொடுத்தால் மட்டுமே அவர்கள் உயிர் வாழ முடியும். ஆனால், அவர்களுக்கு உணவளிக்கக்கூட நேரில் வராத நிலையைப் பார்க்கும் பொழுது இது என்ன ஆட்சி என்ற எண்ணம் தான் தோன்றியது.

தமிழிசை செளந்தரராஜனை பொறுத்தவரையில், மாநில ஆளுநராக இருந்து விட்டு தற்போது தேர்தலில் போட்டியிட வந்துள்ளார். இவர்கள் எல்லாம் மக்களுக்குத்தான் எதிரி என்றால், மானிட குலத்திற்கே எதிரியாக இருப்பது பாஜக. அவர்கள் நிற்பது எங்களுக்குப் பெரிய எதிர்ப்பாகக் கருதவில்லை. நாங்கள் மக்களை நம்பி களத்தில் இருக்கிறோம் அதனால் எங்களுக்குப் பெரிய வெற்றி கிடைக்கும்" என்று தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக மழைநீர் வடிகால் அமைப்பு குறித்துக் கேட்டபோது, "சமீபத்தில் பெய்தது வரலாறு காணாத மழை என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், தென் சென்னையில் கடந்த 8 ஆண்டுகளாக திமுக-தான் ஆட்சி செய்துள்ளது. தொடர்ந்து ஆட்சியில் இருப்பவர்கள் வரலாறு காணாத மழை என கூறக்கூடாது.

நவம்பர் மாதம் தொடர்ந்து மழை வருகிறது என்பது எல்லாருக்கும் தெரிந்தது. இவர்களிடம் நீண்ட கால திட்டம் எதுவும் இல்லை என்பது தெரிகிறது. இவர்களிடம் நீண்ட காலத் திட்டம் இல்லாமல் இருப்பதுடன் மக்களை ஓட்டுக்கானவர்கள் மட்டுமே என்று கருதுகின்றனர்" என்று பதிலளித்தார்.

இதனை அடுத்து தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கான திட்டங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் 675 உயிரினங்கள் வாழ்கின்றன அந்த நிலத்தில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் நடைபாதை வைத்துள்ளனர். அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் செய்வதற்கு ஏற்ற பகுதி அல்ல பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்ற பகுதி அங்கு பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்தால் மட்டுமே சதுப்புநிலமாக தொடர்ந்து இருக்கும்.

பள்ளிக்கரணை சதுப்புநிலம் சென்னையினுடைய மொத்த மழை நீரையும் உள்வாங்கக் கூடிய அமைப்பைக் கொண்டது. நடைபாதை அமைத்து மின்விளக்கு வைக்கப்பட்டதால் உயிரினங்கள் அங்கு வராமல் இருப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும், பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதானால், அதனை நிறுத்தி வைத்துள்ளனர். பள்ளிக்கரணை சதுப்புநிலம் நீர் ஆதாரங்களை உள்வாங்கக் கூடிய பகுதி என்ற தெளிவும் மக்களைப் பற்றிய எந்த வித அக்கறையும் இவர்களுக்கு இல்லை.

ஒரு நாட்டிற்குத் தலைவர் என்றால், ஏரி, குளங்கள், நீர்நிலைகள் எவ்வாறு இருக்கின்றன என்பதைத் தான் விவாதிக்க வேண்டும். ஆனால் 60 ஆண்டுக்கால திராவிட ஆட்சியில் இது போன்ற விவாதங்கள் எதுவும் நடைபெற்றதாகவே தெரியவில்லை.

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள போக்குவரத்து சீர்கேட்டைச் சரி செய்யத் திட்டமிட்டுள்ளோம். சோழிங்கநல்லூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் (கிளஸ்டர்) மென்பொருள் தொகுப்பு கூட்டப்பட வேண்டும். நவீன மீன் அங்காடி கொண்டு வருவோம் என கூறினார்கள் அதுவும் கொண்டுவரப்படவில்லை.

சோழிங்கநல்லூரில் மத்திய அரசின் மருத்துவமனை அமைக்கப்படும் என கூறினார்கள் அதுவும் அமைக்கப்படவில்லை. அப்பகுதியில் இருப்பவர்கள் ராஜீவ்காந்தி மருத்துவமனைக்குத் தான் வர வேண்டும். தனியார் மருத்துவமனைகள் இருக்கின்றன. அரசு மருத்துவமனை கொண்டுவரப்படவில்லை.

அவர்கள் பல்வேறு திட்டங்களைக் கூறினார்கள் ஆனால் கொண்டு வரவில்லை நாங்கள் மக்கள் நலன் சார்ந்து சிந்திப்பதால் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வருவோம். தியாகராய நகரில் உள்ள பேருந்து நிலையத்தை மாற்றி விரிவாக்கம் செய்ய வேண்டும்.

தற்போது தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் முக்கியமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் அங்கே கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். திட்டமிடாத நிலையில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தைக் கொண்டு சென்றுள்ளனர். அதனை மீண்டும் கொண்டு வருவதற்கு வாய்ப்பு உள்ளதா என்பதையும் பார்த்து மீண்டும் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்தார்.

மக்கள் ஆதரவு மற்றும் வெற்றிவாய்ப்பு குறித்த கேள்விக்கு, "நாம் தமிழர் கட்சிக்குரிய சின்னத்தை எடுத்ததால் மக்கள், சின்னம் என்ன என கேட்கின்றனர். மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கத் தயாராக உள்ளனர். அவர்கள் தெளிவாக வாக்களிப்பதையும், பிற கட்சிகள் மக்கள் நலம் சார்ந்து எதுவும் செய்யவில்லை என்பதிலும் தெளிவாக உள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மாற்றி மாற்றி ஓட்டளித்தாலும் ஏதும் நடக்கவில்லை என்பதைத் தனது கருத்தின் மூலம் புரியவைத்துள்ளார். அதனால் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது வாக்குப் பதிவின் போது அதனை வெளிப்படுத்துவார்கள்" என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க: பிரச்சாரத்திற்கு புது ரக சேலை; வேட்பாளர் செருப்பை கையில் தூக்கிய உதவியாளர்.. சர்ச்சையில் சிக்கிய நயினார் நாகேந்திரன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.