ETV Bharat / state

நிலத்தகராறில் தந்தையை திட்டியதால் மகன் எடுத்த விபரீத முடிவு.. திருப்பத்தூரில் சோகம்! - Tirupathur youth suicide issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 22, 2024, 3:15 PM IST

Tirupathur Youth Suicide: வாணியம்பாடி அருகே நிலத்தகராறில் தந்தையை அவதூறாகப் பேசியதால் மனமுடைந்த நிலையில் இருந்த பட்டதாரி இளைஞர், திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட பட்டதாரி இளைஞர்
தற்கொலை செய்து கொண்ட பட்டதாரி இளைஞர் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சியைச் சேர்ந்தவர் மணி - பேபி அம்மாள் தம்பதி. இவர்களுக்கு ரவிக்குமார், ராஜ்குமார், செல்வி, பழனி பாரதி ஆகிய பிள்ளைகள் உள்ளனர். மேலும், இவர்களுக்குச் சொந்தமாக சுமார் 36 சென்ட் நிலம் பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சி பகுதியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சம்பந்த மூர்த்தி என்பவர் போலி ஆவணங்கள் மூலம், அந்த இடத்தை அபகரித்து வைத்துக் கொண்டதாக கிராம நிர்வாக அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை புகார் அளித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங்களூரில் வசிக்கும் பழனி அவரது குடும்பத்தினருடன் புத்துக்கோயில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

அதையடுத்து இவர்களது சொந்த நிலத்திற்குச் சென்ற போது, அங்கு சம்பந்த மூர்த்திக்கும், பழனிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது இரு குடும்பத்தினருக்கும் இடையேயான வாக்குவாதமாக மாறியுள்ளது. பின்னர், இதுகுறித்து தகவலறிந்து வந்த அம்பலூர் போலீசார், இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

ஆனால், இந்த வாக்குவாதத்தின் போது கிராம மக்கள் மற்றும் போலீசார் முன்னிலையில், பழனியை சம்பந்த மூர்த்தி அவதூறாகப் பேசி ஒருமையில் திட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது தந்தையை திட்டியதாக பழனியின் மகன் ஜெயபிரகாஷ் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்த நிலையில், எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்த அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை தடுப்பு உதவி மையம் எண்
தற்கொலை தடுப்பு உதவி மையம் எண் (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், ஜெயபிரகாஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, குடும்பத்தினரிடம் ஜெயபிரகாஷின் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனை முடிந்து கிராமத்திற்கு கொண்டு வந்த ஜெயபிரகாஷ் சடலத்தை விவசாய நிலத்தில் வைத்து, போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்து வைத்துள்ள சம்பந்த மூர்த்தியை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சந்திரசேகர் தலைமையிலான வருவாய்த் துறையினர் மற்றும் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்தவரை கைது செய்ய வேண்டுமென்றும், அவர் இதே கிராமத்தில் இன்னும் 4 பேருடைய நிலத்தையும் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து வைத்துள்ளதாகவும், ஆகையால் சம்பந்த மூர்த்தி மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் மற்றும் போலீசார் உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு மக்கள் ஜெயப்பிரகாஷ் சடலத்தை தகனம் செய்தனர்.

இதையும் படிங்க: 4 ஆண்டுகளில் 240 கொலைகள்! கொலை நகரமாக மாறுகிறதா நெல்லை? - ஆர்டிஐ-யில் அதிர்ச்சி தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.