ETV Bharat / state

அரசுப் பள்ளிகளில் காய்கறி தோட்டம்.. வழிகாட்டுதல்களை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை! - guidelines for school opening

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2024, 5:32 PM IST

GUIDELINES FOR SCHOOL OPENING: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை இயக்ககம் புகைப்படம்
பள்ளிக்கல்வித் துறை இயக்ககம் புகைப்படம் (Credits -ETV Bharat Tamil Nadu)

சென்னை: அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காய்கறித் தோட்டம் மாணவர்களால் ஏற்படுத்தப்பட்டு, அதில் விளையும் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் ஆகியவற்றை பள்ளிகளில் சத்துணவில் பயன்படுத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

2024 - 2025 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி மற்றும் தொடக்க கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர். இந்த வழிகாட்டுதல்களை பள்ளித் தலைமையாசிரியர் தவறாமல் பின்பற்றிதேவையான நடவடிக்கை மேற்காெள்ள வேண்டும்.

  1. மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி திறந்த முதல் நாள் அன்றே நடத்தப்பட வேண்டும்.
  2. தொடக்கப் பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கை முழுமையாக உள்ளதை உறுதி செய்ய ஆசிரியர்கள் முழுமுயற்சி மேற்கொள்ள வேண்டும்.
  3. பள்ளி செல்லும் வயதுடைய அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.
  4. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் 9ஆம் வகுப்பு சேர்வதை உறுதி செய்திட வேண்டும்.
  5. இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து பள்ளி வயது குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  6. அரசு, அரசு நிதியுதவி பெறும் உயர், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் பகுதி நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கான 2024-25ஆம் கல்வியாண்டிற்குரிய பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம், நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும்.
  7. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்த நேரத்திற்கு வழங்கப்படுவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
  8. நூல் வாசிப்பு, நுண்கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும், தேசிய, மாநில அளவிலும் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த ஆண்டும் இந்தச் செயல்பாடுகளில் மாணவர்கள் அனைவரும் பங்கேற்பதை உறுதி செய்தல் வேண்டும்.

ஹேக்கிங் (hacking) தொடர்பான பயிற்சி: மாறிவரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்ப அறிவு மற்றும் கணினி மொழி மீதான ஆர்வத்தை ஏற்படுத்த கணினி நிரல் மன்றங்கள் மற்றும் எதிர்கால தொழில்நுட்பமான எந்திரனியலைக் கற்றுக் கொள்ள எந்திரனியல் மன்றங்கள்(Mechanical forums) பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மேலும், இணைய பாதுகாப்பு மற்றும் எத்திக்கல் ஹேக்கிங்(Ethical Hacking)தொடர்பான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

காய்கறித் தோட்டம் (Vegetable garden): அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காய்கறித் தோட்டம் மாணவர்களால் ஏற்படுத்தப்பட்டு, அதில் விளையும் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் பள்ளிகளில் சத்துணவில் பயன்படுத்தப்பட வேண்டும். இத்திட்டம் சுற்றுச்சூழல் மன்றம் மூலமாக செயல்படுத்தப்பட வேண்டும்.

கல்வி இணைச் செயல்பாடுகள் (Co curricular Activities): மன்ற செயல்பாடுகளைப் பள்ளிகளில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை சிறப்பாகச் செயல்படுத்த ஏதுவாக மாதிரி கால அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் தங்கள் தேவை மற்றும் சூழ்நிலைக்கேற்ப வாரத்தின் ஏதாவது ஒரு நாளில் கடைசி இரு பாடவேளைகளில் இச்செயல்பாடுகளைத் திட்டமிடலாம்.

இச்செயல்பாடுகள் அனைத்தும் அவற்றிற்கென ஒதுக்கப்பட்டுள்ள பாட வேளைகளில் அனைத்து மாணவர்களுக்கும் நடத்தப்படுதல் வேண்டும். ஒவ்வொரு மாணவரும் அவரது விருப்பத்திற்கேற்ப அனைத்து செயல்பாடுகளிலும் பங்கேற்க ஊக்கப்படுத்த வேண்டும். இலக்கிய மன்றத்தில் சிறந்து விளங்கும் 15 மாணவர்கள் வெளிநாடு கல்வி சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்படுவர். விநாடி வினா போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறும் சுமார் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.

திரைப்படங்கள்: ஒவ்வொரு பள்ளியிலும் மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் சிறார் திரைப்படங்கள் திரையிடப்படும். இத்திரைப்படங்கள் மாணவர்களுடைய முன்னேற்றத்திற்காகப் பயன்படுகிறது. திரையிடப்பட வேண்டிய படங்கள் அடங்கிய குறுந்தகடுகள் ஒவ்வொரு பருவத்தின் தொடக்கத்திலும், பள்ளிகளுக்கு வழங்கப்படும். திரைப்படக் காட்டி (Projector) இல்லாத பள்ளிகள் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக வாடகைக்குப் பெற்று திரையிட வேண்டும்.

கலைத் திருவிழா: கலைத் திருவிழா நடத்துவது தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன. பள்ளி அளவில் ஒவ்வொரு மாதமும் சிறந்து விளங்கும் மாணவர்களை, ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை, மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கச் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் ஆண்டுக்கொருமுறை மாநில அளவில் நடைபெறும் கலைத் திருவிழாவில் பங்கேற்பர். மாநில அளவில் வெற்றி பெறும் சுமார் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.

மேற்கூறிய கல்வி சாராச் செயல்பாடுகள் தவிர, செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப் பணி திட்டம், சாரண சாரணியர், செஞ்சுருள் சங்கம் மற்றும் பள்ளி உடல்நல மன்றம் போன்றவற்றிற்கான செயல்பாடுகளை பள்ளி வேலை நாட்களில் காலை, மாலை நேரங்களில் விருப்பமுள்ள மாணவர்களைக் கொண்டு திட்டமிடலாம்” இவ்வாறு என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மலைக்கிராமத்தில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டர்கள்.. பதறிய பொதுமக்கள்! - Helicopters In Tiruvannamalai

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.