ETV Bharat / state

ஜக்கி வாசுதேவுக்கு அவசர அறுவை சிகிச்சை.. மருத்துவமனை பெட்டில் இருந்தே வீடியோ வெளியிட்ட சத்குரு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 9:09 PM IST

Brain Surgery For Sadhguru: சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதையடுத்து, டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

Brain Surgery For Sadhguru
Brain Surgery For Sadhguru

டெல்லி: கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை அருகே உள்ள ஈஷா யோகா மையத்தின் நிறுவனரும், ஈஷா அறக்கட்டளையின் தலைவருமான சத்குரு ஜக்கி வாசுதேவ், பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஆன்மீகம் சார்ந்த வகுப்புகளை எடுத்து வருகிறார். மேலும், அவருக்கு சமீப காலமாகவே ஒற்றைத் தலைவலி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த மார்ச் 14ஆம் தேதி அவருக்கு கடுமையான தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்டதோடு, அவரது உடல்நிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அவரது பாதுகாவலர்கள் அவரை உடனடியாக டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவரை சோதித்துப் பார்த்த போது, மூளையில் உள்ள ஒரு பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். மூளை நரம்பியல் நிபுணர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து, மூளையில் இருந்த ரத்தக்கசிவை சரி செய்துள்ளனர்.

இதனை அடுத்து, வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்த ஜக்கி வாசுதேவ், தற்போது வெண்டிலேட்டர் அகற்றப்பட்டு, விரைவாக குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தொழிலதிபர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் சத்குரு ஜக்கி வாசுதேவ் விரைவில் குணமடைய தங்களது பிரார்த்தனைகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இது குறித்து, அப்பல்லோ மருத்துவர் வினித் சூரி கூறுகையில், "கடந்த 4 வாரங்களாக சத்குரு கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையிலும், மகா சிவராத்திரி மற்றும் டெல்லியில் நடந்த மற்ற கூட்டங்களிலும் அவர் முழுமையாக பங்கேற்றார். சில நாட்களுக்கு முன்பு சத்குரு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, தற்போது அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். மேலும், சத்குருவின் உடல் நிலையில் முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது. மிகவும் சவாலான சூழ்நிலைகளைக் கூட எவ்வாறு அழகாக சமாளிக்க முடியும் என்பதை சத்குரு நிரூபித்துக் காட்டியுள்ளார்'' என தெரிவித்துள்ளார்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

மேலும் இது குறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ், தனது 'X' வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், "டெல்லி அப்போலோ மருத்துவமனையின் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், எனது மண்டை ஓட்டை வெட்டி, எதாவது உள்ளதா என்று பார்த்தனர். ஆனால், எதுவும் இல்லை என்று கண்டறிந்து, தையல் போட்டு மூடிவிட்டனர். மூளைக்கு எந்த ஆபத்தும் இல்லை" என்று சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.

இதையும் படிங்க: திமுக பிரமுகர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.