ETV Bharat / state

“மோடி கடவுளிடமே செட்டிலாகட்டும்” - ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு! - RS BHARATHI about Modi

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 4:29 PM IST

RS Bharathi: சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆர்.எஸ் பாரதி, பிரமதர் மோடியை கடவுள் அனுப்பி வைத்தார் என்றால் அவர் கடவுளிடமே செட்டிலாகட்டும் என்றும், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எதையும் சொல்லலாம் என்று பேசுவது பித்தலாட்டம் எனவும் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.

RS Bharathi, Modi
ஆர்.எஸ். பாரதி, மோடி (Credits - ETV Bharat Tamil Nadu)

ஆர்.எஸ். பாரதி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மோடி ஒரு கேலிக்கூத்தான மனிதராகி விட்டார். அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள 21ஆம் நூற்றாண்டில் இருந்து கொண்டு, பயாலஜிக்கலாக நான் பிறக்கவில்லை. கடவுள் தான் அனுப்பி வைத்தார் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அவரை எப்படி விமர்சிப்பது என்றே தெரியவில்லை.

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எதையும் சொல்லலாம் என்று பேசுவது, ஒரு பித்தலாட்டம் என்பதை அரசியல் தெரிந்தவர்கள் அறிவார்கள். இந்திய ஒருமைப்பாட்டில் அக்கறையுடன் இருக்க வேண்டிய பிரதமர் மோடி, ஒடிசாவுக்குச் சென்று தமிழர்களை அவமானப்படுத்தும் வகையில் பேசுகிறார். பூரி ஜெகந்நாதர் கோயிலின் கஜானா சாவி தமிழ்நாட்டிற்குச் சென்று விட்டது என்கிறார். தமிழர்களை திருடன் என்கிறார்.

வி.கே.பாண்டியன் தமிழகத்திற்கு பெயர் தேடிக் கொடுக்கிறார். அவரை பார்த்து விமர்சனம் செய்வது ஏற்க முடியாது. தமிழகத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியாக இருப்பவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான். அவர்களை நாங்கள் யாராவது விமர்சித்துள்ளோமா? வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு செல்லும்போது தமிழகத்தைச் சேர்ந்த ராஜாஜியிடம் தான் கஜானா சாவியைக் கொடுத்தார்கள். இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கும் போது தமிழரை தான் வெள்ளையர்கள் நம்பினார்கள்.

இவர் கடவுளின் அவதாரம் என முதலில் கூறினார். இப்போது கடவுள் தான் தன்னை அனுப்பி வைத்தார் என்று கூறுகிறார். அப்படி என்றால் அவர் கடவுளிடமே செட்டிலாகட்டும். இந்திய நாட்டு மக்கள் அவருக்கு விடை கொடுக்கப் போகிறார்கள். ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு கடவுள் பணியை பிரதமர் மோடி செய்யட்டும்.

தேர்தல் ஆணையத்திடம் பிரதமர் மோடியின் மீது புகார் கொடுத்தால், அவரை விசாரிக்காமல் பாஜகவின் தலைமைக்கு விளக்கம் கேட்பது தேர்தல் ஆணையத்தின் மீது அரசியல் கட்சிக்கு நம்பிக்கை இல்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறது. தேர்தல் ஆணையம் முழுக்க, முழுக்க மோடிக்கும், பாஜகவுக்கும் சாதகமாக செயல்படுவது இதிலிருந்து தெரிகிறது. ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு தேர்தல் ஆணையம் இதையெல்லாம் நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டி இருக்கும்.

ஒடிசாவில் ஒரு ஆம்பளை கூட இல்லையா என்று அமித்ஷா கேட்கிறார். குஜராத்தில் பிறந்த மோடி உத்தரப்பிரதேசத்தில் போட்டியிடுகிறார் இதை அந்த மக்கள் கேட்க ஆரம்பித்திருப்பார்கள் என்றால் என்னவாகும்? ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் இவர்களது பேச்சால், தேர்தலுக்குப் பிறகு நாடு பிளவுபட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: “திரித்து பேசி அரசியல் ஆதாயம் தேடுகிறார் மு.க.ஸ்டாலின்”.. தமிழிசை செளந்தரராஜன் பதிலடி! - Tamilisai Soundararajan

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.