ETV Bharat / state

ஈசிஆர் ரோடு விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்ட மரங்கள் மறுநடவு.. துளிர்விட்டு அரும்பிய மரங்கள்! - Reforestation in chennai

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 11:34 AM IST

Reforestation Replanted trees in chennai: சாலை விரிவாக்கத்திற்காக சென்னை ஈசிஆரில் இருந்து அகற்றப்பட்ட மரங்கள், சென்னை ராமன்தாங்கல் ஏரிக்கரையில் மறுநடவு செய்யப்பட்ட நிலையில், மீண்டும் துளிர்விடத் தொடங்கியுள்ளன.

Reforestation Replanted trees in Chennai
மறுநடவு செய்யப்பட்ட மரங்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை நீலாங்கரை முதல் அக்கரை வரையில் ஆறு வழித்தடமாக சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகளில் நெடுஞ்சாலைத்துறையின் சென்னை பெருநகர வளர்ச்சி திட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளுக்கு இடையூறாக இருந்த வளரும் தன்மையுடைய மரங்களை பாதுகாப்பாக வேறு இடத்தில் மறுநடவு செய்வதற்கும், மற்ற மரங்களை வெட்டி அகற்ற சென்னை மாவட்ட பசுமைக்குழுவிடம் ஒப்புதல் கோரப்பட்டது. மாவட்ட பசுமைக் குழுவின் ஒப்புதல் கிடைத்த பிறகு மரங்களை மறுநடவு செய்தனர்.

அவ்வாறு மறுநடவு செய்யப்பட்ட மரங்கள் மீண்டும் துளிர்க்கத் தொடங்கியுள்ளன. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில், கடந்த ஆண்டு ஜூலை 12-ல் நடைபெற்ற மாவட்ட பசுமைக் குழு கூட்டத்தில் 97 மரங்களை மறுநடவு செய்வதற்கும், இடையூராக உள்ள 758 மரங்களை வெட்டி அகற்றுவதற்கும் உத்தரவு வழங்கப்பட்டது.

இதற்கு ஈடாக 1:10 என்ற விகிதத்தில் 7 ஆயிரத்து 580 புதிய மரக்கன்றுகளை நடவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நீலாங்கரை முதல் அக்கரை வரை உள்ள பகுதியில் 758 மரங்களை அகற்றுவதற்கு ஏலம் விடப்பட்டு, அவை அகற்றப்பட்டு வருகிறது. இங்கு வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக 7 ஆயிரத்து 580 புதிய மரக்கன்றுகளை நடவு செய்வதற்கு தேவைப்படும் 3.26 கோடி ரூபாயை வனத்துறைக்கு செலுத்துமாறு சென்னை மாவட்ட வன அலுவலரிடம் இருந்து கோரிக்கை வந்தது.

இதையடுத்து, மாவட்ட வனத்துறைக்கு இடைக்கால தொகையாக 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. மீதமுள்ள தொகையை விரைவில் செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாவட்ட பசுமைக் குழுவின் உத்தரவுக்கு ஏற்ப நீலாங்கரை முதல் அக்கரை வரை உள்ள 97 மரங்கள், கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்டு சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள ராமன் தாங்கல் ஏரிக்கரையில் மறுநடவு செய்யப்பட்டது.

மறுநடவுப் பணிகளை இந்திய அளவில் மறுநடவு செய்வதில் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற கோயம்புத்தூரைச் சேர்ந்த 'கிரீன் கேர்' (Green Care) சையத், நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து மறுநடவு பணிகளை மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து, கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த 97 மரங்கள் வேருடன் அகற்றப்பட்டு, தாய் மண்ணுடன் சேர்த்து வேண்டிய உரங்களை இட்டு மறுநடவு செய்யப்பட்டது.

அவ்வாறு மறுநடவு செய்யப்பட்ட மரங்களுக்கு தினமும் தேவையான அளவு நீர் ஊற்றி பராமரிக்கப்பட்டு வருகிறது. சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக உள்ள தவிர்க்க முடியாத மரங்களை மட்டுமே பசுமைக் குழுவின் உத்தரவின் அடிப்படையில் அகற்றப்படுகிறது. ராமன் தாங்கலில் மறுநடவு செய்யப்பட்ட மரங்கள் நன்றாக வளரத் தொடங்கிவிட்டன” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2 மாதத்தில் காணாமல் போன 70 குழந்தைகள் மீட்பு.. சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் தகவல் - Child Abduction Case In Chennai

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.