ETV Bharat / state

"இட ஒதுக்கீடு போராட்டத்துக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்" - ராமதாஸ் பேட்டி! - PMK Ramadoss

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 7:30 PM IST

PMK Ramadoss: இட ஒதுக்கீடு தொடர்பான போராட்டத்திற்கு விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

PMK Ramadoss
பாமக நிறுவனர் ராமதாஸ் புகைப்படம் (credits - ETV Bharat Tamil nadu)

பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு (credits - ETV Bharat Tamil nadu)

விழுப்புரம்: தமிழக அரசு நினைத்திருந்தால் ஒரு மாதத்தில் இட ஒதுக்கீடு வழங்கி இருக்கலாம். ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் தமிழக அரசு வழங்கவில்லை. எனவே, இட ஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் நடத்தப்படும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்ததாவது, “சமூகநீதி பற்றி சில கட்சிகள் பேசினாலும் சமூக நீதி குறித்து தொடர்ந்து விடாமல் பேசிவருவது பாமக தான். சமூக நீதி விவகாரத்தில் செய்த தவறுகளை திமுக திருத்தி அமைக்க வேண்டும்.

நான்காவது கட்டமாகத் தேர்தல் ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை பாமக வலியுறுத்தி வருகிற நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. அதனை மத்திய அரசு தான் செய்ய வேண்டுமெனத் தமிழக அரசு கூறி வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு பீகார், ஆந்திரா, கர்நாடகாவில் நடத்தப்பட்டு தெலங்கானாவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

தமிழக அரசு நினைத்திருந்தால் ஒரு மாதத்தில் இட ஒதுக்கீடு வழங்கி இருக்கலாம். ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் இட ஒதுக்கீடு தமிழக அரசு வழங்கவில்லை. அன்புமணி ராமதாஸ், ஜிகே மணி இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தி மனு அளித்தும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காததால் மக்களின் நலன் கருதி இட ஒதுக்கீடு தொடர்பாகப் போராட்டம் நடத்தப்படும். இதற்கான தேதி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும். மேகதாதுவில் அணை கட்டுவோம் என அம்மாநில அரசு கூறுவது கண்டிக்கத்தக்கது. அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் அமைதி காத்து வருகிறார்.

கர்நாடகம் தண்ணீர் தராத நிலையில் குறுவை சாகுபடி செய்யத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் மாற்றுச் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். 8 மணி நேரம் கூட மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கவில்லை. செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகள் நனைந்தது குறித்து அதிகாரிகள் மீது விசாரணை செய்ய வேண்டும். அனைத்து நெல் ஒழுங்கு விற்பனைக் கூடத்தில் 10 ஆயிரம் மூட்டைகள் வைக்கும் அளவிற்கு குடோன் அமைக்க வேண்டும்.

திருவாரூர், திருவள்ளுவர், விழுப்புரம் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் தனிநபர் வருமானம் குறைந்து காணப்படுகிறது. தனிநபர் வருமானம் வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் பல வருடங்களாகக் குறைந்து உள்ளது. அதனால் இந்த மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைத்து தனிநபர் வருமானத்தைப் பெருக்கலாம். ஆனால் இதனை அதிமுகவும், திமுகவும் செய்யவில்லை.

மரம் வளர்ப்பினை மாபெரும் இயக்கமாக மாற்ற வேண்டும். அரிமா சங்கம், வனத்துறை இணைந்து மரம் வளர்ப்பினை மாபெரும் இயக்கமாக மாற்ற வேண்டும். தமிழகத்தில் தெருவுக்குத் தெரு கஞ்சா, போதைப் பொருள்கள் கிடைப்பதால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கஞ்சா புகைத்துவிட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தமிழக அரசு நினைத்தால் ஒருவாரத்தில் கட்டுப்படுத்தலாம். காவல் துறைக்குத் தெரிந்தே கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திராவிலிருந்து கஞ்சா வருவதால் ஆந்திராவிற்கே சென்று கஞ்சா தோட்டங்களை போலீசார் அழிக்கலாம் அதனைச் செய்யவில்லை.

தமிழகத்தில் வெப்பத்தினால் இதுவரைக்கும் மூன்று, நான்கு பேர் ஸ்ட்ரோக் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். மின் தடை இல்லாமல் மின்சாரம் வழங்கவேண்டும். நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் உயிரிழப்பில் காவல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

இஸ்லாமியர்களுக்கு எதிராகத் தேர்தல் பிரசாரத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக மோடி பேசுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு விதமாகப் பேசுவார்கள் என்றார். அப்போது மாநில அமைப்புச் செயலாளர் அன்பழகன், மாவட்டச் செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது... தேர்ச்சி சதவீதம் எவ்வளவு? - CBSE 10TH RESULT 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.