ETV Bharat / state

தண்ணீரை வீணாக்குவதைத் தடுக்க வேண்டும்.. சேலம் மேக்னசைட் நிறுவனத்திற்கு எதிராகக் கிராம மக்கள் மனு! - TN Magnesite Water Issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 9:26 PM IST

Updated : May 10, 2024, 9:53 PM IST

Salem Magnesite Water Issue: சேலத்தில் உள்ள தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்திற்குச் சொந்தமான சுரங்கத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றி வீணாக்குவதைத் தடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர் அருள் தலைமையில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மேக்னசைட் நிறுவனத்திற்கு எதிராக மனு அளித்த புகைப்படம்
மேக்னசைட் நிறுவனத்திற்கு எதிராக மனு அளித்த புகைப்படம் (Credit: ETV Bharat Tamilnadu)

சேலம் எம்எல்ஏ அருள் பேட்டி (Credit: ETV Bharat Tamilnadu)

சேலம்: சேலம் மாவட்டம் மாமங்கம் பகுதியில் தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மேக்னசைட் எனப்படும் வெள்ளைக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கம் உள்ளது. நீண்டகாலமாகச் செயல்பாட்டில் இல்லாத சுரங்கத்தை மீண்டும் திறக்க மேக்னசைட் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஏற்கெனவே வெட்டி எடுக்கப்பட்ட சுரங்கத்தின் பள்ளத்தில் பல லட்சம் மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த தண்ணீர் தேக்கம்பட்டி, மூங்கில்பாடி, வெள்ளைக் கல்பட்டி, கொல்லப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகள் உட்பட்ட 100க்கும் மேற்பட்ட சிறு கிராமங்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இச்சுரங்கத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுவரும் அதே வேளையில். சுரங்கத்தில் இருந்து உயர் அழுத்த ராட்சச குழாய்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றி வனப்பகுதிக்குக் கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேக்னசைட் நிறுவனத்தின் இந்த திட்டம் கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் தற்போது வீணாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருள் தலைமையில் திரண்ட கிராம மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் தேவியுடன் இன்று கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில், "சுரங்கத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றினால் குடிநீர் பஞ்சம் ஏற்படுவதோடு விவசாயம் கால்நடைகளுக்குத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாழாகிவிடும்" என்றும் தெரித்துள்ளனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் தேவி தண்ணீர் வெளியேற்றாமல் சுரங்கத்தைச் செயல்படுத்த வேண்டும் என்ற உத்தரவைத் திருப்பிக் கொள்ள உறுதியளித்தார். மேலும், சட்டப்பேரவை உறுப்பினர் அருளுடன், பாமக மாநகர் மாவட்ட தலைவர் கதிர் ராசரத்தினம், சேலம் நாடாளுமன்ற பாமக வேட்பாளர் அண்ணாதுரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: புரோடின் சப்ளிமெண்டுகளை உட்கொள்ள வேண்டாம்: ஐசிஎம்ஆர் கூறுவது என்ன? - Do Not Take Protein Supplements

Last Updated : May 10, 2024, 9:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.