தமிழகத்தில் காவல் நிலைய மரணங்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தாதா? - ஹென்றி திபேன் சரமாரி கேள்வி - Custodial death in Tamil Nadu

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 9:30 AM IST

People's Watch director Hendry Deepan

Henri Tiphagne: தமிழகத்தில் கடந்த 12 நாட்களில் 4 பேர் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன், காவல் நிலைய மரணங்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை: தமிழகத்தில் கடந்த 12 நாட்களில் 4 பேர் காவல் நிலையத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்து, அதற்கு மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, "2024 ஏப்ரல் 05 முதல் 16 வரை நிகழ்ந்த இரண்டு நீதிமன்றக் காவல் மரணம் மற்றும் இரண்டு போலீஸ் காவல் மரணம் உள்ளிட்ட நான்கு காவல் மரண வழக்குகளை ஆய்வு செய்ததில் மக்கள் கண்காணிப்பகம் அதிர்ச்சியடைந்துள்ளது.

காவல் நிலைய மரணங்கள்: மதுரை மாநகர காவலில் வைக்கப்பட்ட கார்த்திக் என்ற இட்லி கார்த்திக் காவல் நிலையத்தில் கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு மரணமடைந்தார். மேலும், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 15-ஆவது வார்டு கவுன்சிலரான SST சாந்தகுமார் என்பவர் ஆவடி காவல் ஆணையர் சரக எல்லைக்குட்பட்ட செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் மரணமடைந்துள்ளார்.

அதேபோல், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட சிவகாசியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்துள்ளார்.

மேலும், ஏப்ரல் 10ஆம் தேதி நடந்த சித்திரவதை வழக்கில், விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட ராசா, வீட்டிற்கு சென்றவுடன் உயிரிழந்தார். இந்த நான்கு வழக்குகளில், விழுப்புரத்தில் உள்ள வழக்கைத் தவிர மற்ற மூன்று வழக்குகள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Cr.P.C) பிரிவு 176 (1) (அ)இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் சாந்தகுமார் வழக்கில் மட்டும் ஒரு காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்குகள் அனைத்தும் தேர்தல் பிரச்சார காலத்தில் நடந்துள்ளன. மதுரையில் கார்த்திக் மற்றும் செவவாய்பேட்டை காவல் நிலையத்தில் மரணமடைந்த சாந்தகுமார் ஆகியோரது வழக்குகளில் அரசு இதுவரை குறைந்தபட்ச இழப்பீடுகளைக்கூட அறிவிக்கவில்லை.

இந்நிலையில் மக்கள் கண்காணிப்பகம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன் வைக்கிறது. அவை,

  • சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினைப் பின்பற்றி, இந்த வழக்குகளின் புலன் விசாரணையை உடனடியாக குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CB-CID) மாற்ற தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
  • தேர்தல் நடத்தை விதிகளைக் கருத்தில் கொண்டு, இந்த இரண்டு காவல் சித்திரவதை மரணங்களில் தொடர்புடைய காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். மேலும் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரைகளை அரசு பெறவேண்டும்.
  • இந்த நான்கு சம்பவங்களிலும் தொடர்புடைய அனைத்து காவலர்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
  • இந்நான்கு வழக்குகளையும் தவறாமல் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் (NHRC) தெரிவிக்க வேண்டும்.

கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடந்த 4 காவல்நிலைய மரணங்கள் தமிழக காவல்துறைக்கு மிகவும் இழுக்கு ஏற்படுத்தும் நிகழ்வுகளாகும். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சார்பில் அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் கண்காணிப்பகம் மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என ஹென்றி திபேன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "ஓட்டு போடுவதற்காவது வண்டி அனுப்புங்க".. தேர்தல் பிரச்சாரத்தையே அறியாத திருநெல்வேலி காணி பழங்குடியினர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.