ETV Bharat / state

பூனம் பாண்டே செய்த பொய்ச் செய்தி மோசடி: 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு எச்சரிக்கை மணியா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2024, 8:54 PM IST

Updated : Feb 5, 2024, 8:54 PM IST

“பிரபல நடிகை மரணம்” கேட்பதற்கு அதிர்ச்சியாகவும், கவனம் ஈர்க்கக்கூடியதாகவும் இருக்கலாம். ஆனால் இது அந்த நடிகையே கிளப்பிவிட்ட பொய்ச்செய்தி என்பது தெரியவரும் போது, அவர் மீது மட்டுமல்ல இந்த செய்தியை கொண்டு போய் சேர்த்த ஊடகங்கள் மீதான நன்மதிப்பும் சமூகத்தில் பாதிக்கப்படலாம். மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா பொதுத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் இந்த நேரத்தில் இதனை மற்றுமொரு செய்தியாக கடந்து சென்று விட முடியாது எனவும், உலக பொருளாதார மன்றத்தின் தரவுகள் அடிப்படையில் இதன் ஆபத்துக்கள் குறித்தும் எச்சரிக்கிறார் உண்மை சரிபார்ப்பு வல்லுநர் முரளி கிருஷ்ணன் சின்னதுரை. இது தொடர்பாக ஈடிவி பாரத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கரநாராயணன் சுடலைக்கு அவர் அளித்த நேர்காணலை காணாலாம்.

Etv Bharat
Etv Bharat

கேள்வி 1: பிரபலத்தின் மரணம் என்ற பரபரப்புடன் நடிகை பூனம் பாண்டே பரப்பிய வதந்தியை உண்மை சரிபார்ப்பு நிபுணராக நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள்?

பதில்: முதலில் இந்த செய்தி அவருடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் இருந்தது. இது தொடர்பாக வேறு எங்கும் தகவல் கிடைக்கவில்லை. இன்ஸ்டாகிராம் பக்க தகவலை உறுதீப்படுத்தும் வகையில் எந்த மருத்துவச் சான்றும் கிடைக்கவில்லை. 3 நாட்களுக்கு முன்பாக மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவப்பு கம்பளத்தில் திடமாக நடந்து வந்தவர் புற்று நோயால் இறந்துவிட்டார் என்ற செய்தியே நம்பத்தகுந்ததாக இல்லை.

ஆனால் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியானதன் காரணமாக பல்வேறு செய்தி ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. சந்தேகத்திற்கான முகாந்திரம் இருந்த போதிலும், உண்மை சரிபார்ப்பு என்பது ஆவணங்கள், ஆதாரங்கள் அடிப்படையிலேயே இயங்கக்கூடியது. இறப்பை உறுதிப்படுத்து மருத்துவ அறிக்கை மற்றும் இறந்தவரின் உடல் எங்கிருக்கிறது என்பது தெரியாத காரணத்தால் உண்மையை சரிபார்ப்பதே சவாலாக இருந்த்து.

கேள்வி 2: சந்தேகம் அல்லது நம்பகத்தன்மையற்ற சூழல் நிலவும் போது, இந்த பொய்ச் செய்திக்கு எதிரான நடவடிக்கை அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தாமதம் ஏற்படுவது ஏன்?

பதில்: பூனம் பாண்டே மரணம் என்ற பொய்யான தகவல் அவருடையை அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிப்ரவரி 2ஆம் தேதி காலையில் வெளியிடப்பட்டது. ஆனால் இது தொடர்பாக அவரை சார்ந்த நபர்களை உடனடியாக தொடர்பு கொள்ள இயலவில்லை. அவரது நெருங்கிய நண்பரான முனாஃபர் ஃபரூகி என்பவரும் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்ததாகவும், துக்கத்தை தாள முடியவில்லை என தமது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Murali Krishnan Chinnadurai
Murali Krishnan Chinnadurai

முனாஃபரின் பதிவு 2.13 மணிக்கு வெளியானது. 4 மணி வரையிலும் மேலதிக ஆதாரங்கள் கிடைக்காததால் தேசிய அளவிலான உண்மை சரிபார்ப்பு நிபுணர்களின் குழுவில் செய்தியின் நம்பகத்தன்மை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. மும்பையைச் சேர்ந்த உண்மை சரிபார்ப்பு வல்லுநர், தகவலை உறுதி செய்வதற்காக பல்வேறு கட்டங்களில், பூனம் பாண்டேவுக்கு நெருக்கமான பல்வேறு நபர்களிடம் தொடர்பு கொண்டு அதன் மூலம் , “மரணம் என்ற தகவல் உண்மை இல்லை.

இது பரபரப்பு விளம்பரத்திற்கானது” என்று அன்று மாலையே உறுதி செய்தார். ஆனாலும், சான்றுகள் அடிப்படையில் நிறுவுவதற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்காமல் இருந்ததால் அதனை பொய்ச்செய்தி என்று அதிகாரப்பூர்வமாக மறுக்க இயலவில்லை. இந்த மாதிரியான பொய்ச்செய்திகளை POST TRUTH என கூறலாம். அதாவது சம்பந்தப்பட்ட நபரோ, அவரது குடும்பத்தினரோ மறுக்காத வரையிலும் இதனை பொய் என்று நிறுவுவது கடினமானது.

கேள்வி 3: பொய்ச்செய்தி என்ற போதிலும் இதன் நோக்கம் கருப்பை வாய் புற்று நோய் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகதான் என்று பூனம் பாண்டே கூறுகிறார். இதனை நேர்மறையாக எடுத்துக் கொள்ள முடியாதது ஏன்?

பதில்: நேர்மறையாக அறவே கருத முடியாது என்பது தான் என்னுடைய பதில். நோக்கம் எதுவாக இருந்தாலும் இந்த யுக்தியே அடிப்படையில் தவறானது. காரணம் என்னவென்றால், இந்த வகையான புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வருவோரின் நம்பிக்கையை மரணம் என்கிற ஒற்றை பொய்ச்செய்தியே தகர்த்து விடுகிறது.

இந்த உளவியல் போரின் தாக்கத்திலிருந்து பாதிக்கப்பட்டவரும், அவரின் நெருங்கிய நபர்களும் மீண்டு வருவது அவ்வளவு எளிதானதல்ல. விழிப்புணர்வு நோக்கமாக இருந்தால், நேர்மையான வழியைத் தான் தேர்வு செய்ய வேண்டுமே தவிர, திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட பொய் பரப்புரையை மேற்கொள்வது தீர்வாக அமையாது. இது நேரடி பலனைக் காட்டிலும் பக்கவிளைவுகளைத் தான் பொதுச்சூழலில் ஏற்படுத்தும் என்பது எனது கருத்து. இன்னும் சொல்லப்போனால் இது மோசமான முன்னுதாரணமாகவும் உள்ளது.

Murali Krishnan Chinnadurai
Murali Krishnan Chinnadurai

கேள்வி 4: பொய்பரப்புரை என்ற பதத்தை பயன் படுத்துகிறீர்கள், பொய் செய்திக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? பொய்ச் செய்தி எந்த கணத்தில் பொய் பரப்புரையாக உருவமெடுக்கிறது.

பதில்: பொய்ச்செய்தி (Disinformation) என்பது ஒரு தனிநபர் தெரிந்தே பரப்பக்கூடிய தவறான தகவலாகும். பொய் பரப்புரை (Disinformation Campaign) என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக கட்டமைக்கப்பட்ட பொய்யை உருவாக்கி அதனை பரப்புவதற்காகவே ஒரு உள்கட்டமைப்பை உருவாக்கி செயல்படுத்துவது ஆகும்.

இதனை தொடர்பு படுத்துவதற்காக பூனம் பாண்டே விவகாரத்தில் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்திலிருந்து புனையப்பட்ட பொய்ச்செய்தி, ஒரு நாளுக்குள்ளாக நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களில், பல்வேறு அமைப்புகளில் பெரிய மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது. இன்னும் கூர்ந்து பார்க்க வேண்டுமானால் போலிச் செய்தியை உண்மை என நம்பி வெளியிடும் நிலைக்கு ஊடகங்கள் தள்ளப்பட்டிருக்கின்றன.

எக்ஸ் வலைத்தளம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் , அன்றைய #poonampandeydeath என்ற Hashtag-ல் பார்த்தோமானால் ஒரே மாதிரியான வார்த்தை கோர்வை கொண்ட பல ட்வீட்கள், பல்வேறு நபர்களால் வெளியிடப்படுவதை பார்க்க நேர்ந்தது. இரங்கல் சொல்பவர்கள் ஒரே சொற்றொடர்களை எதேச்சையாக பயன்படுத்தியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதிலிருந்தே தெரிகிறது, இந்த பொய்பரப்புரையின் வீரியத்தை அதிகரிப்பதற்கான தொழில் நுட்ப மற்றும் மனித கட்டமைப்புகளை முன்கூட்டியே திட்டமிட்டு ஏற்படுத்தியிருக்கின்றனர். இதனால் தான் செயற்கையான தன்னெழுச்சி மிக்க ட்வீட்களை பார்க்க முடிந்தது. இந்த பொய் பரப்புரையை உண்மை என நம்பிய பலரும், பகிர்ந்து தங்களின் இரங்கலை தெரிவித்துவந்தனர். இதனை கடுமையான குற்றமாக கருதி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேள்வி 5: நோக்கம் சரியாக இருக்கும் போது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உங்களின் கோரிக்கை அதீதமானதாக தோன்றுகிறதே? இது போன்ற பொய் பரப்புகளை அலட்சியப்படுத்தி அவர்களுக்கு தேவையான விளம்பரம் எனும் ஆக்சிஜனை வழங்காமல் கடந்து செல்ல முடியாதா?

பதில்: அலட்சியப்படுத்தி கடந்து செல்வது சரியான யுக்தி, பல்வேறு சமயங்களில் அதுவே சாலச்சிறந்த்து. ஆனால், இந்த விஷயத்தில் நாம் அப்படி கருத முடியாது, உலக பொருளாதார மன்றம், தனது 2024ம் ஆண்டிற்கான குளோபல் ரிஸ்க் ரிப்போர்ட் எனும் ஆபத்து ஆய்வறிக்கையை அண்மையில் சமர்ப்பித்தது.

இதில் பொய்ச்செய்தி மற்றும் போலிச்செய்தி, சமூகத்தில் சீர்குலைவை ஏற்படுத்துவதில் முதன்மை காரணியாக இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில், இவ்வாண்டு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 50 விழுக்காட்டுக்கு மேலான நாடுகள் பொதுத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கின்றன.

எனவே இந்த ஆண்டு உலக தேர்தல் ஆண்டு என கூறும் அளவிற்கு முக்கியத்துவம் பெறுகிறது. இச்சூழலில், போலிச்செய்திகளும், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் ஆழ்பொய்ச்செய்திகளும் (Deepfake) ஆபத்து விளைவிக்கும் இடத்தில் முதலாவது காரணியாக உள்ளன. இந்த ஆபத்தில் அதிகம் சிக்குவதற்கு அபாயமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, இந்த நிகழ்வினை ஒரு உதாரணமாக எடுத்துக் கொண்டு , தேர்தலில் மக்களை மடைமாற்றம் செய்வதற்காக அரசியல் கட்சியினர் திட்டமிட்ட பொய்பரப்புரைகளில் ஈடுபடக் கூடும், இது போன்ற சம்பவங்களை எதிர்காலத்தில் தடுப்பதற்கு, பூனம் பாண்டே மீது எடுக்கப்படும் நடவடிக்கை எச்சரிக்கையாக இருக்கும். இல்லை எனில் இது மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகவே இருக்கும்.

Mis Information and Dis information Chart
Mis Information and Dis information Chart

கேள்வி 6: தேர்தல் வந்தே விட்டது, இது போன்ற பொய்ச்செய்திகளில் எப்படி விழிப்புடன் இருப்பது?

பதில்: செய்தி நிறுவனங்கள், தங்களுக்கு கிடைக்கப் பெறும் செய்தியை பல்வேறு கட்டங்களில் உறுதி செய்ய வேண்டும். செய்தி பதிப்பிக்கப்படும் முன்பு அதற்கான ஆதாரங்களை கை வசம் வைத்திருக்க வேண்டும். இணைய பயன்பாட்டாளர்கள், தங்களுக்கு இணையத்தில் கிடைக்கும் தகவல் அனைத்தும் உண்மை என நம்பக்கூடாது.

ஆதாரங்கள் ஏதேனும் இணைக்கப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும். அதீத உணர்ச்சி கொந்தளிப்பை ஏற்படுத்தும் எதையும் உடனடியாக பகிரவோ , நம்பவோ கூடாது. இவ்வாறு செயல்பட்டால் பொய்ச்செய்தி பரப்புரைகளிலிருந்து நம்மையும், நம் சமூகத்தையும் பாதுகாத்திட முடியும்.

இதையும் படிங்க : “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்” - அரசியல் கட்சி துவக்கத்திற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு விஜய் நன்றி!

Last Updated :Feb 5, 2024, 8:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.