ETV Bharat / state

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீர் கோளாறு.. மூன்றரை மணி நேர தாமதத்தால் பயணிகள் அவதி! - Singapore Airlines

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 22, 2024, 3:39 PM IST

Updated : May 22, 2024, 4:21 PM IST

Singapore Airlines passenger flight delay: சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் தாமதமாக சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் புகைப்படம்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் புகைப்படம் (credits to ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னையில் இருந்து இரவு சிங்கப்பூர் செல்லவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் நேற்று (மே 22) இயந்திரக் கோளாறு ஏற்பட்டதையடுத்து விமானம் மூன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

சிங்கப்பூர்-சென்னை-சிங்கப்பூர் இடையே இயக்கப்படும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தினமும் இரவு 10 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துவிட்டு, அதன் பின் இரவு 11.15 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் செல்லும். இந்த விமானத்தில் சிங்கப்பூர் செல்லும் பயணிகள் மட்டுமின்றி, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் பயணிகளும் அதிக அளவில் பயணிப்பதால், இந்த விமானத்தில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும்.

அதேபோல், நேற்று (மே 21) இரவு சிங்கப்பூரில் இருந்து அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு 5 நிமிடம் முன்னதாகவே இரவு 9.55 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துவிட்டது. அந்த விமானம் மீண்டும் இரவு 11.15 மணிக்கு,சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் செல்லவிருந்தது. அந்த விமானத்தில் சிங்கப்பூர் செல்வதற்காக சுமார் 320 பயணிகள் காத்திருந்தனர். விமானம் வந்ததும் பயணிகள் விமானத்தில் ஏறத் தயாராகியுள்ளனர்.

பயணிகளை விமானத்தில் ஏற்றுவதற்கு முன்னதாக, விமானி விமானத்தின் இயந்திரங்களை சரிபார்த்த போது, தொழில்நுட்பக் கோளாறு இருப்பது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து விமானி, பயணிகளை விமானத்தில் ஏற்றாமல், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்துக்குள் ஏறி தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனால் பயணிகள் ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் விமானம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு இன்று (மே 22) அதிகாலையில் சரி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏற்றப்பட்டனர்.

இந்நிலையில் விமானம் சென்னையிலிருந்து மூன்றரை மணி நேரம் தாமதமாக, இன்று அதிகாலை 2.47 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மூன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால், பயணிகள் சென்னை விமான நிலையத்தில் அவதிப்பட்டனர்.

இதற்கிடையே, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று, நேற்று (மே 21) லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றபோது, விமானம் நடு வானில் திடீரென குலுங்கியது. இதில் ஒரு பயணி உயிரிழந்ததோடு, சில பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்டது. இந்த சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதை அடுத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், விமானத்தில் மிகச்சிறிய அளவில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டாலும், உடனடியாக அதை சரி செய்த பின்பு விமானத்தை இயக்க வேண்டும் என்று அனைத்து விமானிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை அடுத்து தான், சென்னை- சிங்கப்பூர் இடையேயான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று இரவு சிங்கப்பூருக்கு புறப்பட வேண்டிய நிலையில், தொழில்நுட்பக் கோளாறை சரி செய்த பின், தாமதமாக புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இதனால்தான் வளர்ப்பு நாய்கள் கூட மனிதர்களை கடிக்கிறதா, நாய் கடியிலிருந்து தப்பிக்க வழிகள் என்ன? - மருத்துவர் கூறும் விளக்கம்! - Reasons For Dog Bite

Last Updated : May 22, 2024, 4:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.