ETV Bharat / state

தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு; வினோஜ் பி செல்வம் நேரில் ஆஜராக உத்தரவு! - Vinoj P Selvam Defamation Case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 3:53 PM IST

Vinoj P Selvam Defamation Case: தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில், மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் ஜூன் 6ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Photo by Dayanidhi Maran and Vinoj P Selvam
தயாநிதி மாறன் மற்றும் வினோஜ் பி செல்வம் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் எதுவும் பயன்படுத்தவில்லை என மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் தனது 'X' தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனை அடுத்து, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வினோஜ் பி செல்வம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதை எதிர்த்து, வினோஜ் பி செல்வம் மீது தயாநிதி மாறன் அவதூறு வழக்கு ஒன்றை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "தொகுதி மக்களிடையே தனக்கு உள்ள நற்பெயரைக் கெடுக்கும் வகையில், சமூக வலைத்தளத்தில் பாஜக வேட்பாளர் பதிவிட்டுள்ளார். உண்மைக்குப் புறம்பாக அரசியல் உள்நோக்கத்துடன் எந்த ஆய்வையும் மேற்கொள்ளாமல், அவதூறு பரப்பும் வகையில் இந்த தகவல் பதிவிடப்பட்டுள்ளது.

மத்திய சென்னை தொகுதிக்கான நிதியில் 95 சதவீதத்திற்கும் மேல் தொகுதி மக்களுக்கு பல்வேறு திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதை எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் பொய்யான தகவல்களை பதிவிட்டுள்ளார்.

இது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499, 500-இன் கீழ் கிரிமினல் குற்றமாகும். எனவே, வினோஜ் பி செல்வம் மீது குற்றவியல் அவதூறு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று தயாநிதி மாறன் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு, இன்று (மே 14) எழும்பூர் 13வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி எம்.தர்மபிரபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வினோஜ் பி செல்வம் தரப்பில் வழக்கறிஞர் வி.சந்திரசேகரன் ஆஜராகி, வினோஜ் பி செல்வம் வர முடியாத நிலையில் இருப்பதால், இன்று (மே 14) விசாரணைக்கு ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்தார்.

இதற்கு தயாநிதி மாறன் தரப்பு வழக்கறிஞர் விமல் மோகன் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். இதன் தொடர்ச்சியாக, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, விசாரணையை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும், அன்றைய தினம் வினோஜ் பி செல்வம் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஜாமீன் கேட்ட சவுக்கு சங்கர்... நீதிமன்றத்தின் முடிவு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.