ETV Bharat / state

கல்விக்கடன் பெற்றுத்தரும் இயக்கத்தில் நான்கு புதிய சாதனைகள் நிகழ்த்திய மதுரை.. எம்பி சு.வெங்கடேசன் கூறுவது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 4:46 PM IST

MP Su.Venkatesan about educational loan: மதுரையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எம்பி சு.வெங்கடேசன், மதுரை மாவட்டத்தில் கல்வி கடனுக்காக விண்ணப்பித்த மாணவர்களில் 79 சதவீதம் பேர் பயனடைந்துள்ளதாகவும், கல்விக்கடன் பெற்றுத் தரும் இயக்கத்தில் நான்கு புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

MP Su.Venkatesan about educational loan
எம்பி சு.வெங்கடேஷன்

மதுரை: மதுரையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், எம்பி சு.வெங்கடேசன் இன்று (பிப்.14) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "2023-2024ஆம் கல்வி ஆண்டில், மதுரை மாவட்டத்தில் மாணவர்களுக்கான கல்விக்கடன் 168 கோடி ரூபாய் வழங்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2023-2024ஆம் ஆண்டுக்கான கல்விக்கடன் வழங்க மாவட்ட நிர்வாகமும், வங்கி நிர்வாகமும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகமும் இணைந்து கூட்டாக விரிவான முயற்சியை மேற்கொண்டன.

கடந்த 24.11.2023 அன்று மாவட்டம் முழுமைக்குமான கல்விக்கடன் சிறப்பு முகாம், மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வங்கிகளுக்கான ஆய்வுக் கூட்டத்தில் கல்விக்கடன் பற்றி தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக, கடந்த ஆண்டு தரப்பட்ட 125 கோடி ரூபாய் என்ற இலக்கை கடந்து, இந்த ஆண்டு 168.28 கோடி ரூபாய் கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான கல்விக்கடன் கேட்டு 2 ஆயிரத்து 627 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவர்களில் 2 ஆயிரத்து 78 பேருக்கு 168.28 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களில் 79% பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்டுள்ள கல்விக்கடனில், தேசியமயமாக்கப்பட்ட 12 வங்கிகள் ஆயிரத்து 521 மாணவர்களுக்கு 150.69 கோடி ரூபாய் வழங்கியுள்ளன. 21 தனியார் வங்கிகள் 557 பேருக்கு 17.59 கோடி ரூபாய் வழங்கியுள்ளன. கனரா வங்கி 387 மாணவர்களுக்கு 44.5 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 378 மாணவர்களுக்கு 32.99 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. கூடுதல் முயற்சி எடுத்து, அதிக கல்விக்கடன் வழங்கியுள்ள இந்த இரண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பாராட்டுக்குரியவை.

கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் 74 சதவீதம் கடன் வழங்கியுள்ளன. கடந்த முறையை விட இந்த ஆண்டில் தனியார் வங்கிகள் 90 சதவீதத்துக்கும் அதிகமான விண்ணப்பங்களுக்கு கடன் வழங்கியுள்ளன. தனியார் வங்கிகளில் அதிகபட்சமாக ஆக்சிஸ் வங்கியில், கல்விக்கடன் 497 விண்ணப்பங்களில் 494 விண்ணப்பதாரர்களுக்கும் 12.37 கோடி ரூபாய் கல்விக்கடனாக வழங்கியுள்ளது.

இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் கல்விக்கடன் பெற்றுத் தரும் இயக்கத்தில் நான்கு புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது.

1. 150 கோடியைத் தாண்டி சாதனை

2. தமிழ்நாட்டில் கல்விக்கடன் வழங்கப்படும் மாவட்டத்தின் சராசரி 35 கோடி, அதில் மதுரை 168 கோடி.

3. மும்பையைப் போல கல்விக்கடன் ஒப்புதல் 80 சதவிகிதம்.

4. தனியார் வங்கிகள் முதன் முறையாக 90 சதவிகிதத்திற்கு மேல் கல்விக்கடன் வழங்கியுள்ளன.

இவை எல்லாம் இந்திய அளவில் மிகச்சிறந்த முன்னுதாரணம் ஆகும். இதற்காக தொடர்ந்து உழைத்த வங்கிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் எனது பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக அதிகத் தொகையை கல்விக்கடனாக வழங்கியுள்ள கனரா வங்கியின் சார்பில் துணைப்பொது மேலாளர் சுஜித் குமார் சாகு, ஸ்டேட் பேங்க ஆப் இந்தியாவின் சார்பில் துணை பொது மேலாளர் ஹரிணி, முதன்மை மேலாளர் ராம்பிரசாத், மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் அனில் மற்றும் சந்தான பாண்டியன் ஆகியோருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க: மாநிலங்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.