ETV Bharat / state

"திமுகவிற்குத் தமிழக விவசாயிகளின் நலனை விட அரசியல் நலனே முக்கியம்" - பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 3:31 PM IST

MLA Vanathi srinivasan Statement: மேகதாதுவில் அணைக் கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளை, தமிழக முதலமைச்சர் முறியடிக்க வேண்டும் என்று கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

MLA Vanathi srinivasan
MLA வானதி சீனிவாசன் அறிக்கை

கோயம்புத்தூர்: பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கர்நாடக மாநில சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசிய அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, "காவிரியாற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்துள்ளோம். முறையான அனுமதி பெற்று விரைவில் அணையின் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவோம்" என்று அறிவித்துள்ளார்.

MLA Vanathi srinivasan
MLA வானதி சீனிவாசன் அறிக்கை

சென்னை மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும் இடையே 1924-ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, காவிரியாறு பாயும் தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் காவிரியாற்றின் குறுக்கே கர்நாடகம் எந்த அணையையும் கட்ட முடியாது. இதைக் காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி காவிரியாற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவோம் என்று கர்நாடக சட்டப்பேரவையிலேயே அம்மாநில முதலமைச்சர் அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மேகதாதுவில் அணை இல்லாத போதே, நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வறட்சியான காலங்களில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்கக் கர்நாடகம் மறுத்து வருகிறது. இத்தகைய சூழலில், மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு இப்போது கிடைக்கும் குறைந்த அளவு தண்ணீரும் கிடைக்காமல் போய்விடும். விவசாயத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களுக்குக் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி நீரே உள்ளது.

எனவே, மேகதாதுவில் அணைக் கட்டும் கர்நாடகத்தின் முயற்சியை முறியடிக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதால், தமிழக நலன்களைக் காற்றில் பறக்கவிட்டு கண்டனம் கூட தெரிவிக்காமல் 'மேகதாதுவில் அணை கட்ட முடியாது' என்று வழக்கமான பல்லவியைப் பாடி இருக்கிறார் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

திமுக அரசுக்கும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் தமிழக விவசாயிகள் நலன், தமிழக மக்களின் குடிநீர்த் தேவையை விட அரசியல் நலனே முக்கியமானதாக இருக்கிறது. கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டித்தால் சோனியாவும், ராகுலும், பிரியங்காவும் கோபித்துக் கொள்வார்கள் என்பதால் தமிழக நலன்களைக் காவு கொடுக்கவும் திமுக தயாராகிவிட்டது. இதனால்தான், மேகதாது அணை விவகாரத்தில் மென்மையான போக்கை திமுக அரசு கையாண்டு வருகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல், தற்போதைய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக சிவகுமாரும் பதவியேற்ற போது பெங்களூருக்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர்கள் உடனான தனது நெருக்கத்தை, அரசியல் நலன்களுக்காக மட்டும் பயன்படுத்தாமல் தமிழகத்தின் நலன்களுக்காகவும் பயன்படுத்தி மேகதாதுவில் அணைக் கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முறியடிக்க வேண்டும். இதற்குச் சட்ட ரீதியான தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: யார் இந்த செல்வப்பெருந்தகை? - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக உயர்ந்தது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.