ETV Bharat / state

நாச்சியப்பன் பாத்திரக்கடை கப்பு போல் ஆன வானதிக்கு வழங்கிய ஐ.எஸ்.ஓ தரச்சான்று.. சர்ச்சையில் சிக்கியது ஏன்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 7:46 PM IST

Updated : Feb 24, 2024, 7:53 PM IST

Vanathi Office ISO Certificate Issue: கோவை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் வழங்கிய நிறுவனத்தின் பெயரில் மதுரையில் சாக்கடை நீர் செல்லும் கிருதுமால் நதிக்குக் குடிநீர் விநியோகத்திற்காக ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் சமூக வலைத்தளத்தின் மூலம் வானதி சீனிவாசனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

கோயம்புத்தூர்: கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பாஜகவின் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன். இவரது தொகுதி அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் கிடைத்துள்ளதாக போட்டோக்கள் மற்றும் அறிக்கையைத் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் சில நாட்களுக்கு முன்னர் பகிர்ந்து இருந்தார்.

தமிழகத்தில் இதுபோன்ற ஒரு குறிப்பிடத்தக்கச் சாதனையைப் புரிந்துள்ள முதல் எம்.எல்.ஏ என்ற முறையிலும், பாஜகவின் தேசிய மகளிர் பிரிவு தலைவி என்ற முறையிலும் இதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், 2011ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த போது பிரதமர் மோடியின் அலுவலகத்திற்கும் ஐ.எஸ்.ஓ தரச்சான்று கிடைத்தது என்றும், அதே போன்று ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெற்றதன் மூலம், எங்களது பணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றும் பதிவிட்டிருந்தார்.

மேலும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அலுவலகம், மக்களுக்கு அளித்து வரும் சேவை மற்றும் அதன் செயல்பாட்டில் உள்ள சர்வதேசத் தரத்தை, இந்த சான்றளிப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் இந்தச் சாதனையைச் சபாநாயகர் அப்பாவுவிடம் காட்டி மகிழ்ச்சி அடைந்தேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

அதேபோல, திமுக மாணவர் அணித் தலைவர் ராஜிவ்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் "கோவில்'' திரைப்படத்தில் நடிகர் வடிவேல் நாச்சியப்பன் பாத்திரக் கடையில் கப் வாங்கியது போல் 5000 ரூபாய் கொடுத்து வானதி சீனிவாசன் தனது அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஓ சான்றிதழ் வாங்கியுள்ளதாகக் கிண்டலாகப் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், மதுரையில் வைகை நதியின் கிளை நதியான கிருதுமால் நதியில் சாக்கடை நீர் சென்று கொண்டிருக்கும் நிலையில், குடிநீர் விநியோகத்திற்கு ஏற்றது என அந்த நதிக்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்று தரப்பட்டுள்ளது போன்ற சான்றிதழ் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

mla-vanathi-srinivasan-coimbatore-south-constituency-assembly-member-office-iso-certification-viral-at-social-media
வானதி சீனிவாசனின் கோவை தெற்கு எம்.எல்.ஏ அலுவலகத்தின் ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் விவகாரம்.. நடப்பது என்ன?

க்யூ.ஆர்.டி என்ற டெல்லியைச் சேர்ந்த சான்றிதழ் வழங்கும் தன்னாட்சி பெற்ற நிறுவனத்திடமிருந்து கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் கிருதுமால் நிதிக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஐ.எஸ்.ஓ நிறுவனம் ரூ.1000 சான்றிதழ் கட்டணத் தொகை செலுத்தினால் ஐ.எஸ்.ஓ தரச் சான்று பெற முடியும் என சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், கிருதுமால் நதிக்கு வழங்கப்பட்ட ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்று வழங்கப்பட்டதையும் பதிவு செய்து கிண்டல் செய்து வருகின்றனர். இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனிடம் கருத்து கேட்க முயன்ற போது அவர் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை.

இதையும் படிங்க: தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கிய 'AI' - ஜெயலலிதாவின் குரலில் ஈபிஎஸ் வெளியிட்ட ஆடியோ!

Last Updated : Feb 24, 2024, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.