ETV Bharat / state

தமிழக சட்டப்பேரவையில் எதிரொலித்த கிளாம்பாக்கம் விவகாரம்.. முதலமைச்சரின் பதில் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 1:58 PM IST

எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் முகஸ்டாலின்

Kilambakkam Bus Terminus issue: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய வசதிகள் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டதற்கு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அமைச்சர் சேகர் பாபு பதில் அளித்துள்ளார்.

சென்னை: இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை 2024-2025 கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று (பிப்.13) தொடங்கியது. இதில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு, ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ என்று பெயர் வைத்ததால் எதிர்கட்சிகள் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

கூட்டத்தில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகள் முடியும் வரை மக்கள் அவதிப்படாமல் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.

இதற்கு, “கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. கோயம்பேடு பேருந்து நிலையம் அமைக்கப்படும் போதும், இது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டது. பின்னாளில் அனைத்தும் சரி செய்யப்பட்டது. பேருந்தில் பயணித்த பயணிகள் எந்த ஒரு குறையும் கூறவில்லை. பேருந்தில் பயணிக்காதவர்கள்தான் குறை கூறுகின்றனர்.

கோயம்பேட்டில் இயங்கி வந்த 80 சதவிகிதம் பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது. 20 சதவிகித பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது” என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்தார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பிரச்னை தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது, “2013ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சியில், பேரவையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்திற்கு 2018ஆம் ஆண்டு டெண்டர் போடப்பட்டது. 2019ஆம் ஆண்டு ஒப்பந்தப்புள்ளி நிறைவு செய்யப்பட்டு பணி தொடங்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, நிறுத்தப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய வசதிகள் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பரப்பளவு 33 ஏக்கர். புதிதாக கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பரப்பளவு 86 ஏக்கர். 2002ஆம் ஆண்டு திறக்கப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையம், 7 ஆண்டுகளுக்குப் பிறகு பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டதிலிருந்து இன்று வரை 45 நாட்களில், 2 ஆயிரத்து 450 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

வசதிகள்: கிளாம்பக்கம் பேருந்து நிலையத்தில், 3 இடங்களில் 300க்கும் மேற்பட்ட பேருந்து ஓட்டுநர்கள் தங்குவதற்கு ஏற்பாடு, 3 உணவகங்கள், மருத்துவமனைகள் மற்றும் 47 கடைகள் செயல்பாட்டில் உள்ளன. மேலும், ரூ.6 கோடி செலவில் பூங்கா, ரூ.11 கோடி செலவில் 14 ஏக்கர் பரப்பில் கால நிலைப் பூங்கா, ரூ.11 கோடி செலவில் ஆயிரத்து 700 மீட்டர் அளவில் மழைநீர் கால்வாய், ரூ.6 கோடி செலவில் நுழைவு வாயில், டிராலி வசதி, வயதானவர்களுக்காக 12 பேட்டரி கார்கள், நடைமேடை, மின் தூக்கி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், கிளாம்பாக்கத்திற்கு ரூ.60 கோடி செலவில் புதிய நடை மேம்பாலம், ரயில் நிலையம் அமைப்பதற்கு ரூ.20 கோடி ரயில்வே துறைக்கு ஒப்படைக்கப்பட்டு, பணிகள் துவக்கப்பட்டு 6 மாத காலத்தில் நிறவடைய உள்ளது. மெட்ரோ ரயில் அமைப்பதற்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பயணிகள் இதுவரை கழிப்பறை, குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்று புகார் கூறவில்லை. இரவு 12 முதல் காலை 4 மணி வரை பயணிகளுக்கு பேருந்து பற்றாக்குறை என்பதால், சில ஊடங்கங்களால் திட்டமிட்டு பரப்புகின்ற பிரச்னையே தவிர, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 100 சதவிகிதம் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

புதிதாக திறக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் சிறு சிறு பிரச்னைகள் உள்ளதால், அதை வரும் காலங்களில் சரி செய்யப்படும். பிரதமர் திருச்சியில் திறந்து வைத்த விமான நிலையம் இன்று வரை முழு பயன்பாட்டிற்கு வரவில்லை. கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று பெயர் வைத்ததால் எதிர்கட்சிகள் பிரச்னை ஏற்படுத்துகின்றனர்” என்று குற்றம்சாட்டினார்.

அப்பொழுது பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள சிறு, சிறு குறைபாடுகளை சரி செய்த பின் பேருந்து நிலையம் திறந்திருந்தால் நன்றாக இருக்கும். ஆனால், அங்குள்ள பிரச்னையால் மக்கள் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதெல்லாம் நாளிதழில் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தியாக வந்தது. பயணிகளுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாமல், பயணம் சிறப்பாக அமைய ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. விரைந்து பேருந்து நிலையம் திறந்ததால் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இரண்டு, மூன்று ஆண்டுகாலம் கரோனா நோய் தொற்றுலிருந்து, மக்களை பாதுகாக்கும் பணியை அதிமுக அரசு சிறப்பாக செய்தது. அந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையும் முன்னதாக ஆட்சி மாற்றம் வந்துவிட்டது. எனவே, மக்களுக்கு எந்தவித சிரமமுமின்றி பேருந்து நிலையம் திறக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கிறோம்” என்றார்.

இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சிறு சிறு பிரச்னைகள் மட்டுமல்லாமல், பெரிய பிரச்னைகளும் தீர்த்து வைத்துள்ளோம். எதிர்கட்சியைச் சேர்ந்தவர்களை நேரடியாக அழைத்துச் சென்று பேருந்து நிலையத்தைக் காண்பிக்கிறோம். என்ன பிரச்னை உள்ளது என்று கூறட்டும். இன்னும் பிரச்சினைகள் இருந்தால் கொண்டு வாருங்கள், அதையும் நாங்கள் தீர்த்து வைக்கிறோம்” என்றார்.

இதையும் படிங்க: ஒகேனக்கல்லில் புதிய புனல்மின் நிலையம் கொண்டுவர வாய்ப்புள்ளதா? - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.