ETV Bharat / state

“அவதூறுகளைப் பரப்புவதில் பாஜகவும் அதிமுகவும் சளைத்தவையல்ல” - மு.க.ஸ்டாலின்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 6:32 PM IST

MK Stalin: ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிப்பதை நினைவுபடுத்துங்கள் எனவும், நம்மைத் திசைதிருப்ப அவதூறுகளைப் பரப்புவதில் பாஜகவும் அதிமுகவும் சளைத்தவையல்ல எனவும் திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

MK Stalin letter to DMK workers
MK Stalin letter to DMK workers

சென்னை: திமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான அண்ணாவின் 55வது நினைவு நாள் நாளை (பிப்.03) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்காகச் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “அயாராது உழைத்து, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுமைக்கான வெற்றி வியூகத்தை வகுக்க வேண்டிய பொறுப்பு நிறைந்த இடத்தில் இருக்கிறது, திராவிட முன்னேற்றக் கழகம். பாசிச பாஜக ஆட்சியின் சர்வாதிகார, ஜனநாயக விரோத போக்கிற்கு முடிவுகட்ட வேண்டிய உறுதியுடன் இருக்கிறோம்.

மக்கள் தாங்கள் விரும்பிய மொழியில் பேசுவதை, விரும்பிய தொழிலைச் செய்வதை, விரும்பிய உடையை உடுத்துவதை, விரும்பிய உணவை உண்பதை, விரும்பிய அரசைத் தேர்ந்தெடுப்பதை உறுதி செய்வதற்கும், இவற்றுக்கு அடிப்படையான மாநில உரிமைகளை கட்டிக் காப்பதற்கும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து, தேர்தல் களப் பணிகளை முன்கூட்டியே தொடங்கி, மிகுந்த உற்சாகத்தோடு அதனை முன்னெடுத்துச் செல்கிறது திமுக.

சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம் என்பதுதான் திமுகவின் தேர்தல் வாக்குறுதி. அக்கவுண்ட்டில் ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்றோ, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்றோ, விவசாயிகளின் வருமானத்தை மும்மடங்காக்குவோம் என்றோ வாக்குறுதி அளித்துவிட்டு, எல்லாமே ஜும்லா என்று ஏமாற்றுகின்ற பாஜக போலவோ, அதன் கள்ளக்கூட்டணியான அதிமுக போல திமுகவின் நாடாளுமனறத் தேர்தல் வாக்குறுதிகள் இருக்காது.

தினமும் 4 தொகுதிகள் வீதம், இதுவரை 22 நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் ஒவ்வொன்றும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டமாக மட்டுமில்லாமல், திமுகவினர் சுட்டிக்காட்டும் பிரச்னைகளுக்கும், அவர்களின் கோரிக்கைகளுக்கும் உடனுக்குடன் தீர்வு காணும் கூட்டமாகவும் இருப்பது திமுக நிர்வாகிகளை மிகுந்த உற்சாகத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது என்பதை அறிகிறேன்.

“வெல்லும் சனநாயகம்” மாநாட்டில் நான் குறிப்பிட்டதுபோல, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக பூஜ்ஜியம்தான். அதிமுகவை வைத்து பாஜக எத்தகைய நாடகத்தை நடத்தினாலும் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது என்பது உறுதி.

மக்களிடம் செல் என்றார் அண்ணா. உங்களில் ஒருவனான நான் அதை வழிமொழிவதுடன், ‘மக்களிடம் செல். மக்களிடம் சொல்’ என்று ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கிறேன். இரண்டரை ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சொல்லுங்கள். ஒவ்வொரு குடும்பமும் திமுக ஆட்சியின் சாதனைகளால் பெற்றிருக்கும் பயன்களை உணர்த்துங்கள்.

ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிப்பதை நினைவுபடுத்துங்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிடவும் கூடுதலான உழைப்பை வழங்கி, கூடுதலான வாக்கு வித்தியாசத்தில், கடந்த முறை மிச்சம் வைத்த ஒற்றைத் தொகுதியையும் சேர்த்து நாற்பதுக்கு நாற்பது என்ற முழு வெற்றியை உறுதி செய்யுங்கள்.

அந்த இலக்கை திமுக நிச்சயம் அடைந்துவிடும் என்கிற நம்பிக்கை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவுடனான சந்திப்பின்போது நிர்வாகிகள் காட்டும் உற்சாகத்திலேயே நன்கு புலப்படுகிறது. அந்த உற்சாகம், தேர்தல் களப்பணிகளிலும் குன்றாமல், குறையாமல் வெளிப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

நம்மைத் திசைதிருப்ப அவதூறுகளைப் பரப்புவதில் பாஜகவும் அதிமுகவும் சளைத்தவையல்ல. பொய் வழக்குகளின் பேரில் தங்களை எதிர்க்கும் ஜனநாயக சக்திகள் மீது மிரட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒன்றே ஒன்றிய பாஜக அரசின் பத்தாண்டு கால சாதனையாக இருப்பதால், திமுகவை மிரட்டிப் பார்க்கும் வகையிலான ஊடகப் பரபரப்புக்கான செயல்பாடுகள் இருக்கும். எதற்கும் அஞ்சாத இயக்கம்தான் திமுக என்பதைக் களத்தில் ஆற்றும் பணிகள் மூலமாக அவர்களுக்குப் புரிய வைப்போம்.

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை பாஜக அரசு தாக்கல் செய்திருக்கிறது. அதிலும்கூட தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளது. முழுமையான பட்ஜெட்டை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்தியா கூட்டணி அரசு தாக்கல் செய்யும். அதற்கேற்ற வகையில் வெற்றி பெறுவோம் என அண்ணா நினைவு நாளில் சூளுரைப்போம்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழக வெற்றி கழகம் கூட்டணியில் இறங்குமா? திராவிட கட்சிகளுக்கு இணையான போட்டியா? - செய்தித் தொடர்பாளர் அளித்த பிரத்யேக தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.