ETV Bharat / state

தமிழக வெற்றி கழகம் கூட்டணியில் இறங்குமா? திராவிட கட்சிகளுக்கு இணையான போட்டியா? - செய்தித் தொடர்பாளர் அளித்த பிரத்யேக தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 6:01 PM IST

TVK Vijay: நடிகர் விஜயின் கட்சிப்பணிகள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் வருங்கால நிலைகள் குறித்து, அக்கட்சியின் தற்காலிக செய்தித் தொடர்பாளர் ராம்குமார் ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

தவெக-வின் தற்காலிக செய்தித் தொடர்பாளர் ராம்குமார்
தவெக-வின் தற்காலிக செய்தித் தொடர்பாளர் ராம்குமார்

தவெக-வின் தற்காலிக செய்தித் தொடர்பாளர் ராம்குமார்

சென்னை: அரசியல் களம் காணும் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் தற்காலிக செய்தித் தொடர்பாளர் ராம்குமார், ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அதில், தேர்தல் களங்கள் தீவிரமாகும் சூழலில் நடிகர் விஜயின் அரசியல் பயணம் எவ்வாறு அமையும் என்று கேட்கப்பட்டதற்கு, "எந்த சூழலிலும் எங்கள் தலைவரின் கட்சி வெற்றி முகத்தில் மட்டுமே இருக்கும். எங்களது கட்சிப் பெயரிலே வெற்றி என்பதை அடையாளப்படுத்திதான் 'தமிழக வெற்றி கழகம்' என அறிவித்திருக்கிறோம். இதுவே எங்களின் வெற்றி.

பல முன்னணி தலைகள் அச்சப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், எங்கள் தலைவர் அரசியல் களம் புகுந்துள்ளது ஒரு ரசிகராக மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதையே எங்களின் முதல் வெற்றியாகக் கருதுகிறோம். தமிழக மக்களின் தேவைகளுக்கும், உரிமைகளுக்கும் கூடுதல் பொறுப்புகளோடு நாங்கள் பணியாற்ற உள்ளோம்" என்றார்.

மக்கள் சேவையே மகேஷன் சேவை: தொடர்ந்து, நடிகர் விஜய் அரசியல் களம் புகும் முன்பே சில உதவிகளை செய்து வந்தார். தற்போது இந்த சேவை தொடருமா அல்லது வேறு ஏதேனும் திட்டங்கள் உள்ளதா என்று கேட்டதற்கு, "கட்டாய முறையில் இன்னும் அதிகளவில் மக்கள் பணிகள் தொடரும். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதைப் போல, மக்கள் சேவைக்காக மட்டுமே தமிழக வெற்றி கழகம் முழு மூச்சாக இயங்கும்.

நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் நாங்கள் போட்டியிடப் போவதும் இல்லை, எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவதுமில்லை. எங்களின் ஒரே இலக்கு 2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலே. தனித்துப் போட்டியிடுவது குறித்து எங்கள் தலைவர் வரும்காலங்களில் அறிவிப்பார். 2026 தேர்தலுக்காக நாங்கள் முற்றிலும் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் அரசியல் களம் காண காரணம்? சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் திடீரென முழுநேர அரசியல் களம் காண்பதற்கான முக்கியக் காரணம், மக்கள் சேவை மட்டுமே. தனக்கென்று அந்தஸ்து, புகழ் அனைத்தையும் வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கான நன்றியைத் தெரிவிப்பதற்கே தமிழக வெற்றி கழகம்.

சுயநலமாக செயல்படும் பல நடிகர்கள் மத்தியில், பொதுநலத்துடன் தன்னை வளர்த்த தமிழ் மக்களுக்கு சேவை செய்யவும், அவர்களின் வறுமையைத் தீர்க்கவே அரசியல் களம் கண்டுள்ளார். தனிமனித உரிமைகளை காப்பதற்கே அரசு. அந்தப் பயணத்திற்கு அதிகாரம் அதிகளவில் தேவைப்படுகிறது. அந்த அதிகாரத்தை அரசியல் மூலம் பெற்று, ஆட்சி அமைத்து மக்களுக்கு சேவை செய்வார்.

50 ஆண்டு திராவிடக் கட்சிகளின் மத்தியில் பொதுமக்களின் ஆதரவை சம்பாதிப்பாரா விஜய்? மக்களின் ஆதரவு என்பது எங்கள் தலைவருக்கு கட்டாயமாக உண்டு. என்னதான் அரசியலும், சினிமாவும் தனிச்சிறப்புகளைக் கொண்டிருந்தாலும், இரண்டிலும் மக்களின் ஆதரவின்றி எதற்கும் சாத்தியமில்லை. மக்கள் ஆதரவு அதிகளவில் இருப்பதனால்தான் கட்சி துவங்கப்பட்டுள்ளது.

மூன்றாவதாக ஒரு கட்சியை வளரவிடாமல் தவிர்த்து வருவது, இரு திராவிடக் கட்சிகளின் சாதனை. அதனை நாங்கள் தகர்த்தெறிவோம். 50 ஆண்டுகளில் திராவிடக் கட்சிகள் செய்யத் தவறியதை நாங்கள் நிறைவேற்றுவோம். 2026 தேர்தலில் எங்கள் ஆதரவை நாங்கள் நிலைநாட்டுவோம்.

இன்று பொதுமக்கள் அனைவரும் தலைவரின் அரசியல் வருகையை தன்னிச்சையாக கொண்டாடி வருகின்றனர். இதுவே எங்களின் வெற்றி. பொதுக்கூட்டங்கள், மக்கள் மன்ற நிர்வாகிகள் என தேர்தல் வெற்றிக்கான யூகங்கள் அனைத்தும் இனி வரும் காலங்களில் தீர்மானிக்கப்படும். எங்கள் கட்சியின் வெற்றிக்காக அனைத்து விதத்திலும் நாங்கள் போராடுவோம்.

சினிமாவில் இருந்து விலகும் விஜய்: ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று இல்லாமல், முழு மூச்சாக மக்களுக்கான பொதுசேவைகளில் மட்டும்தான் இனி எங்கள் தலைவர் கவனம் செலுத்துவார். சினிமாவில் அவர் காணும் உச்சம் என்பது அலாதியானது. ஆனால், தற்போது அதனை விட்டு விலகுவதாக அறிவிப்பதற்கான காரணம், மக்கள் சேவை மட்டுமே.

இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் மீது சுமத்தப்படும் குற்றங்கள் வயதானதற்குப் பின்னர் அரசியல் வருகின்றனர் என்பதே. ஆனால் ஒருவர், தான் உச்சம் காணும் நேரத்தில் அரசியல் வருகின்றார் என்றால், அது அவர் பணம் சம்பாதிப்பதற்கோ, பதவி ஆசைக்கோ இல்லை. அவரின் ஒரே நோக்கம் மக்களுக்கான சேவை மட்டுமே.

கூட்டணிக்கு நோ சொல்லும் தமிழக வெற்றி கழகம்: ஆரம்பத்தில் தனித்துப் போட்டி என்று வந்து பின்னர் கூட்டணியாக பல கட்சிகள் மாறிய நிலையில், தமிழக வெற்றி கழகம் எவ்வாறு செயல்படும் என கேட்கப்பட்டதற்கு, "மக்கள் ஆதரவற்ற கட்சிகளே முதலில் தனித்து என்று பிதற்றிவிட்டு, பின்னர் கூட்டணி நிழலில் சாய்வர். ஆனால் எங்கள் கட்சிக்கு மக்களின் ஆதரவு அதிகளவில் நிறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற கடைசி உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் தலைவரின் முகத்தைக் காட்டாமலே நாங்கள் 300 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். பின்வரும் காலங்களில் எங்களுடன் யார் கூட்டணிக்கு வந்தாலும் இணைக்கத் தயார். ஆனால் இவை அனைத்தையும் எங்கள் தலைவரே முடிவெடுப்பார். ஊழலில் திளைத்திருக்கும் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எங்கள் தலைவர் 2026 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார்" என்றார்.

இதையும் படிங்க: சினிமாவுக்கு குட்பை? கட்சி தொடங்கியபின் விஜயின் முடிவு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.