''திருக்குறளை ஏ.ஐ மூலம் உலகின் அனைத்து மொழிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும்'' - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விருப்பம்!
கற்றல், கற்பித்தல் ஆகியவற்றை அடுத்த மாற்றத்திற்கு கொண்டு செல்லக்கூடிய பரிந்துரையை தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைப்பதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.

Published : September 21, 2025 at 6:20 PM IST
சென்னை: திருக்குறளை இந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஏ.ஐ மூலமாக உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விருப்பம் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் இரண்டு நாள் 'தட்சிண பாரத் உச்சி மாநாடு' இன்றுடன் முடிகிறது. இந்த உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஐஐடி இயக்குனர் காமகோடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
30 சதவீதம் மாணவர்கள் உயர்க்கல்வியை தொடர்வதில்லை
இந்நிகழ்ச்சியில் தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசும்போது, ''இந்தியாவில் 30 கோடி மாணவர்கள் இருக்கின்றனர். 12 ஆம் வகுப்பு படிக்கும் 30 சதவீத மாணவர்கள் உயர்கல்வியை தொடர்வதில்லை. அனைத்து மாணவர்களும் கல்லூரிகளில் சேர்வதில்லை. தேசிய கல்விக்கொள்கையின் ஒவ்வொரு பரிந்துரையும் முழுவதுமாக ஏற்கும் வகையில் உள்ளது.
பள்ளிக்கல்வியில் அடிப்படை மாற்றத்தினை கொண்டு வர வேண்டியுள்ளது. நமக்கு சான்றிதழ் வேண்டும். தேசியக் கல்வி கொள்கைத் திறன் அடிப்படையில் கல்வியை ஊக்குவிக்கிறது. திறன் கல்வியின் ஒரு பகுதி. விளையாட்டு, இசை, தனித்திறன் பெற்றவர்களையும் அங்கீகரிக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
தென்காசிக்கும், காசிக்கும் இடையே ஒரு ஒற்றுமை உள்ளது
நான் ஒடிசாவை சேர்ந்தவன். என் தாய்மொழி ஒடியா. இப்போது ஏ.ஐ பயன்பாட்டில் முக்கியமானது மொழிபெயர்ப்பு தான். நான் ஆங்கிலத்தில் பேசினாலும் எனக்கு ஒடியாவில் சிந்திக்க முடியும்.
நாம் ஆங்கிலத்தை கற்கலாம். ஹீப்ரு, ஜெர்மன், பிரெஞ்ச் என எந்த மொழியையும் கற்கலாம். நான் தமிழை கற்க ஆசைப்படுகிறேன். தமிழ் சங்க இலக்கிய காலத்தில் இருந்து இப்போது வரை அதே துடிப்புடன் உள்ளது. இன்னும் சிறப்பாக செயல்படுகிறது. மொழி முக்கியத்துவமானது.
நம் நாடு பல்வேறு கலாச்சாரம், நாகரீகம் நிறைந்தது. தமிழ்நாட்டின் தென்காசிக்கும், காசிக்கும் இடையே 2000 கிமீ தொலைவு உள்ளது. ஆனால் இரண்டிற்கும் ஒற்றுமை உள்ளது. காமக்கோடி வெறும் பேராசிரியர் மட்டுமல்ல. சிறந்த நிர்வாகி.
20 ஆண்டுகளில் 100 சதவீதம் கல்வியறிவு மேம்படுத்த திட்டம்
இன்று காலை பி.எஸ் டேட்டா சயின்ஸ் மாணவனை சந்தித்தேன். கடந்த 2023க்கு முன்பாக இது இல்லை. தற்போது மூன்றாவது ஆண்டு மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஒரு சாதாரண கிராமத்தில் கல்லூரியில் படிக்கும் மாணவன், ஒரே நேரத்தில் சென்னை ஐஐடியில் படித்து, அவர் கல்லூரியில் ஒரு டிகிரியும், சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ் டிகிரியையும் பெற முடியும். இதை தான் தேசிய கல்விக்கொள்கை சொல்கிறது.
செல்போன் பயன்படுத்த தெரிய கூடியவர்களுக்கு அவர்களுடைய கையெழுத்து போட தெரிவதில்லை. கல்வி அறிவு பெற்றவர்கள் எண்ணிக்கையை அடுத்த 20 ஆண்டுகளில் 100% கல்வியறிவை மேம்படுத்தப்பட்ட நாடாக கொடுக்க வேண்டும். இதற்கு தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைத்துள்ள திட்டம் தான் கிரெடிட் பிரேம் ஒர்க்.
இளைஞர்கள் ஏ.ஐ என்ற புலியின் மேல் அமர்ந்து சவாரி
நம் நாட்டில் 30 கோடி மாணவர்கள் இருக்கிறார்கள். 45 கோடி உழைக்கும் வர்க்கத்தினர் இருக்கிறார்கள். ஏ.ஐ, செமிகண்டக்டர், மெக்கட்ரானிக்ஸ் ஆகியவை எதிர்காலத்தில் மிகப்பெரிய துறையாக இருக்கும். இதற்கு ஏற்றார் போல நம் இளைஞர்களை சிறப்பாக உருவாக்க வேண்டும்.
கற்றல், கற்பித்தல் ஆகியவற்றை அடுத்த மாற்றத்திற்கு கொண்டு செல்லக்கூடிய பரிந்துரையை தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைத்துள்ளது. தேசிய கல்வி கொள்கை மாணவர்கள் தொழில் முனைவோராக மாற்றுவதை உருவாக்குகிறது. இளைஞர்கள் ஏ.ஐ என்ற புலியின் மேல் அமர்ந்து சவாரி செய்வார்கள்.
திருக்குறள் இந்திய மொழிகள் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் ஏ.ஐ மூலமாக உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும். இன்று சராசரியாக ஒரு நான்கு மாணவர்களை சோதித்தால் 40 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். 60% அந்த தரத்திற்கும் குறைவாக இருக்கின்றார்கள்.
வாசுதேவ குடும்பமாக தேசியக் கல்விக் கொள்கை
தேசிய கல்விக்கொள்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்கள் 100 கற்றல் திறனை உறுதி செய்ய வழிவகுக்கும். தேசியக் கல்விக் கொள்கை வாசுதேவ குடும்பமாக உலகில் இருக்கக்கூடிய அனைத்து சிறந்ததையும் நம் இளைஞர்களுக்கு கொடுக்கும் வகையில் உள்ளது.
ஒரே நாடு, ஒரே கல்விக் கொள்கை இருக்கிறது. கல்வி, நட்பு, கலாச்சாரம், கவிதை, பல்வேறு மொழிகள் என இருக்கலாம். நம்முடைய இலக்கு ஒன்று தான். நாம் அனைவரும் ஒன்று. இது ஒரே நாடு. ஒரே கலாச்சாரம், தேசிய கல்விக் கொள்கை அனைத்தும் மூன்றையும் ஒன்றிணைத்தது. நமக்காக வேறு யாரும் பேச தேவையில்லை. நாமே உருவாக்கலாம். நிறைய ஸ்டீவ் ஜாப்ஸ் நம் நாட்டில் இருக்கிறார்கள்" என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார்.
மேலும், ''சிறந்த விஞ்ஞானிகளும், அறிஞர்களும் ஏன் வெளிநாட்டுக்கு செல்கின்றார்கள்?'' என்ற ஒரு மாணவரின் கேள்விக்கு, ''நீங்கள் செல்ல வேண்டாம். இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூட ஒருமுறை சொன்னார். சந்திராயன் முழுக்க வேலை செய்தது ஐஐடி அல்லாதவர்கள் தான். அனைத்தும் குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து வரவில்லை. சவால்கள் இருக்கின்றன. சமூகத்தில் நாம் முன்வந்து இணைய வேண்டும்" என்றார்.

