ETV Bharat / state

கோயிலில் ஆடல், பாடல் நிகழ்ச்சி: சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு! - Temple FUNCTION PERMISSION

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 8:48 PM IST

Madras High Court: தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி, கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் புகைப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் புகைப்படம் (Credit - ETV Bharat TamilNadu)

சென்னை: விழுப்புரம் மாவட்டம், மேல் மலையனூர் தாலுகா, பழைய மரக்காணம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு, மே 18 ம் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி, வளத்தி காவல் நிலையத்தில் விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

ஆனால், காவல்துறை நடைமுறைச் சட்டத்தைச் சுட்டிக்காட்டி, அந்த விண்ணப்பத்தை நிராகரித்து வளத்தி காவல் நிலையத்தினர் கடந்த ஏப்ரல் 29ம் தேதி உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து அந்த கிராமத்தைச் சேர்ந்த கேசவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன் விசாரணைக்கு வந்த போது, அரசுத்தரப்பு வழக்கறிஞர் பாஸ்கரன், மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததாக விளக்கம் அளித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது.

தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி, கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி, ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், சட்டத்துக்கு உட்பட்டு கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கவேண்டும் என, வளத்தி காவல் நிலையத்தினருக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரியுடன் தாக்கிய விவகாரம்; பின்னணி பாடகர் மீது வழக்குப்பதிவு! - Case Registered Against Velmurugan

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.