ETV Bharat / state

"செம்மரம் கடத்தியவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்! - madras high court

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 1, 2024, 8:47 PM IST

madras high court: பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளரும், செம்மர கடத்தல் வழக்கில் தொடர்புடையவருமான வெங்கடேஷ் என்பவர் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனுத் தாக்கல் செய்து இருந்த நிலையில், அதை மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

madras high court
madras high court

சென்னை: பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளராகவும், 49 செம்மர கடத்தல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபருமான வி .வெங்கடேஷ், தன்னுடைய உயிருக்கும் உடமைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தான் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வருவதாகவும், கல்வி சார்ந்த அறக்கட்டளை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே தன்னுடைய உறவினர் ஒருவரை முத்துசரவணன் என்பவர் படுகொலை செய்தார். இந்த வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு முத்துச்சரவணை காவல்துறை என்கவுண்டர் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த என்கவுண்டருக்கு தான் காரணம் என வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியதாகவும், இதன் காரணமாக தனக்கு கொலை மிரட்டல் வருவதால், தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது , காவல்துறை தரப்பில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் வெங்கடேஷ் மீது 10 குற்ற வழக்குகள், ஆந்திராவில் 49 வழக்குகள் பதிவு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவருடைய பெயரில் குற்றங்களுக்கான சரித்திரபதிவேடு உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இது மட்டுமல்லாமல் செம்மரக் கடத்தல் வழக்கு, துப்பாக்கி வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வது என பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர் என்பதால் இவருக்கு போலீஸ் பாதுகாப்பு தர முடியாது என கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை பதிவு செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், எந்த குற்றப்பின்னணியும் இல்லாமல் போலீஸ் பாதுகாப்பு கேட்டிருந்தால், அவருக்கு எந்த வித தயக்ககும் இல்லாமல் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருப்பேன் என தெரிவித்தார்.

வெங்கடேஷ்க்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தால் தவறான முன் உதாரணம் ஆகிவிடும் என்றும், இதேபோல் குற்றவாளிகள் பலரும் போலீஸ் பாதுகாப்பு கேட்கும் சூழல் உருவாகும் என தெரிவித்த நீதிபதி, அது நீதித் துறையின் மீதான நம்பிக்கையும் இழக்க வைக்கும் என்றார். மேலும், அவர் மீது செம்மர கடத்தல் வழக்குகளுக்கும் நிலுவையில் இருப்பதால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என தெரிவித்து அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: பாலியல் வன்கொடுமை: பாஜக மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா மீது போக்சோ வழக்குப்பதிவு! - Pocso Case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.