ETV Bharat / state

செல்போன் திருட்டு போனதால் தகராறு; மது போதையில் நண்பனை அடித்து கொலை செய்த நபர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 12:55 PM IST

Erode murder: சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றுப் பாலத்தின் அடியில் பனியன் கம்பெனி தொழிலாளியை தலையில் மது பாட்டிலால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலை செய்த நண்பர் போலீசில் சரணடைந்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சத்தியமூர்த்தி
சத்தியமூர்த்தி

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஆற்றுப் பாலத்தை ஒட்டி தற்போது புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வரும் நிலையில் புதிய பாலத்தின் அடியில், ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு நபர் தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சத்தியமங்கலம் டி.எஸ்.பி சரவணன் தலைமையிலான போலீசார், தலையில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இறந்த நபர் நம்பியூர் அருகே உள்ள இருகாலூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் (எ) ரங்கசாமி (வயது 36) என்பதும், இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் கட்டிங் மாஸ்டராக வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் ரங்கசாமி, அடிக்கடி சத்தியமங்கலத்திற்கு வந்து நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது வழக்கம் என்பதும், பவானி ஆற்று பாலத்தின் அடியில் மது அருந்திவிட்டு குடிபோதையில் நண்பருடன் தகராறு ஏற்பட்டதில் ரங்கசாமியின் தலையில் மது பாட்டில் மற்றும் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனிடையே ரங்கசாமியை அடித்து கொலை செய்ததாக கோபி நல்லகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (24) என்பவர், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்து, ரங்கசாமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

சத்தியமூர்த்தி, ரங்கசாமியும் நண்பர்கள் எனவும், இருவரும் சேர்ந்து மது அருந்துவது வழக்கம் எனவும், ரங்கசாமியின் செல்போன் தொலைந்து போனதால் நேற்று இரவு (பிப்.6) மது அருந்திய போது செல்போன் குறித்து இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவரும் சண்டையிட்டதில், ஆத்திரம் அடைந்த சத்தியமூர்த்தி, ரங்கசாமியின் தலையில் மது பாட்டில் மற்றும் கல்லால் அடித்து கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து போலீசார் சத்தியமூர்த்தியை சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: புதிய பேருந்து நிறுத்த கட்டுமான பணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம மக்கள்! காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.