ETV Bharat / state

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற நபர்.. மருத்துவமனையில் கவலைக்கிடம்! - suicide attempt in collectorate

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 9:16 PM IST

Suicide attempt in Tirunelveli Collector Office: நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவக கோப்புப்படம்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவக கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அடுத்த மருதகுளத்தை சேர்ந்தவர் சங்கரசுப்பு (35) . இவர் தனது குடும்பத்தில் நிலவிய சொத்து பிரச்சினை குறித்து மூன்றடைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருப்பினும் தனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, இன்று (திங்கட்கிழமை) நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தார்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். அதனைக் கண்ட பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரை மீட்டனர். அதனைத் தொடர்ந்து, சங்கரசுப்புவை சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தற்கொலைக்கு முயன்ற சங்கரசுப்புவை மீட்க சென்றபோது உதவி காவல் ஆய்வாளர் அப்துல் ஹமீது என்பவரும் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் சங்கரசுப்பு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த 2017ஆம் கந்து வட்டி காரணமாக இசக்கி முத்து என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அதன் பிறகு, பலமுறை மக்கள் தற்கொலை செய்ய முயற்சி செய்த போது போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி, பாதுகாத்தனர். இந்நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தற்போது மீண்டும் ஒருவர் தற்கொலைக்கு முயன்று, படுகாயம் அடைந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலையைக் கைவிடுக: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் 104 என்கிற எண்ணுக்கு அழையுங்கள் அல்லது சிநேகா உதவி எண்ணுக்கு (044-24640050) அழையுங்கள். மேலும், இணைய வழித் தொடர்புக்கு (022-25521111) என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும், மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள help@snehaindia.org எனும் மின்னஞ்சல் முகவரியிலும், நேரில் தொடர்புகொள்ள சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம் சென்னை - 600028 என்கிற முகவரிக்கு நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க: ஜெயக்குமார் மரண வழக்கு.. காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.