ETV Bharat / state

எப்படி இருக்கிறார் சின்னப்பிள்ளை? சாதனை தமிழச்சியின் இன்றைய நிலை என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 8:00 AM IST

Updated : Mar 9, 2024, 11:41 AM IST

International Women's Day: சமூக முன்னேற்றத்திற்கான பெரும் முயற்சிகளை மேற்கொண்டவர்கள், தங்களுக்கென சிறிய விஷயங்களைக் கூட சாதித்துக் கொள்ளத் தெரியாதவர்களாக இருந்திருக்கின்றனர். பத்ம ஸ்ரீ உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற சின்னப்பிள்ளை இன்று பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அரசின் வாக்குறுதி நிறைவேறும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

சின்னப்பிள்ளை
சின்னப்பிள்ளை

எப்படி இருக்கிறார் சின்னப்பிள்ளை

மதுரை: 2001ம் ஆண்டு டெல்லியில் நிகழ்ந்த ஒரு விருது விழா அது. கண்டாங்கி சேலை அணிந்து எளிமையாக மேடையேறிய அந்த பெண்ணிற்கு பிரதமர் விருது வழங்கினார். விருது வழங்கியதைக் காட்டிலும் தன்னை விட வயதில் இளையவரான அந்த பெண்ணின் காலை பிரதமர் தொட்ட புகைப்படம் தான் அடுத்த நாளில் அனைத்து நாளிதழ்களிலும் தலைப்புச் செய்தியானது.

யார் இந்த சின்னப்பிள்ளை: அடல் பிகாரி வாஜ்பாயிடம் ஸ்த்ரீ சக்தி புரஸ்கார் விருது பெற்ற அந்த பெண்தான் சின்னப்பிள்ளை. திட்டங்களை அரசு வகுத்துவிடலாம், அதிகாரிகளும் செயல்படுத்தலாம், ஆனால் தன் மக்களின் துயர் கண்டு செயலில் இறங்கி வழிநடத்திச் சென்ற ஒரு தலைவி உண்டு என்றால் அது சின்னப்பிள்ளைதான். மதுரை மாவட்டம் அழகர் கோயில் செல்லும் சாலையில் அப்பன் திருப்பதி (Appan Thiruppathi) அருகே அமைந்துள்ளது பில்லுசேரி கிராமம். இவ்வூரைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி தான் சின்னப்பிள்ளை. கிராமத்திலுள்ள பெண்களை ஒருங்கிணைத்து விவசாய வேலைகளுக்காக அழைத்துச் சென்று, வேலை முடிந்த பின்னர் அவர்களுக்குரிய கூலியை நில உரிமையாளர்களிடமிருந்து மொத்தமாகப் பெற்று, ஒவ்வொரு பெண்களுக்கும் பிரித்துத் தரும் கொத்துத் தலைவியாக இயங்கியவர்.

களஞ்சியம் சுயஉதவிக்குழு: இவரும் சாதாரண விவசாயக் கூலிதான். தங்களது சேமிப்புகளை எல்லாம் தனியார் நிதி நிறுவனங்களில் சேமித்து, அவர்கள் ஒருநாள் சுருட்டிக் கொண்டு ஓடியதால் ஏமாற்றமடைந்த வெள்ளந்தி மனிதர்களுள் ஒருவராகவும் இருந்துள்ளார். அச்சமயத்தில் தான் இவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக வந்து சேர்ந்த களஞ்சியம் என்ற சுய உதவிக்குழுக்களுக்கான அமைப்பால் ஈர்க்கப்பட்டார். தன்னைப்போலுள்ள ஏழை, எளிய, அடித்தட்டுப் பெண்களை எல்லாம் சிறு சிறு குழுவாக இயங்க வலியுறுத்தி தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு களஞ்சியம் என்ற அமைப்பு பெரும் விருட்சமாக வளரக் காரணமாக இருந்தார்.

ஸ்த்ரீ சக்தி புரஷ்கார்: அதன் பின் வறுமை, கந்துவட்டி உள்ளிட்ட சமூகக் கொடுமைகளிலிருந்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியே வரத் தொடங்கினர். எந்த சுயநலமும் இன்றி தன் சுற்றத்தாரும், மக்களும் படும் துயர்துடைக்க களமிறங்கிய துணிச்சல் தான், நாட்டின் உயரிய பதவியில் இருக்கும் பிரதமரை, இந்த எளிய தாயின் காலைத் தொடச்செய்தது. அந்த விழாவில் பேசிய வாஜ்பாயி, “சின்னப்பிள்ளையிடம் மகா சக்தியைக் கண்டேன்” என்ற போது தான், சுயஉதவிக்குழுக்களின் மகத்தான ஆற்றல் என்னவென்பதை உலகம் உணரத் தொடங்கியது.

பத்ம ஸ்ரீ விருது: அதற்குப் பிறகு அதே ஆண்டில் அதே மாதத்தில் மும்பையில் பஜாஜ் நிறுவனம் சின்னப்பிள்ளைக்கு ‘பஜாஜ் ஜானகிதேவி புரஷ்கார் விருது’ வழங்கியது. தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி, சின்னப்பிள்ளைக்கு பொங்கல் திருநாளில் பொற்கிழி வழங்கிப் பாராட்டினார். இதற்கிடையே முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2018-ஆம் ஆண்டு ஔவையார் விருது வழங்கி கௌரவித்தார். கடந்த 2019ஆம் ஆண்டு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சின்னப்பிள்ளைக்கு ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்கி சிறப்புச் செய்தார்.

சமூகப் பணி: பல்வேறு விருதுகள் வந்த வண்ணம் இருந்தாலும், தன்னுடைய களஞ்சியம் இயக்கத்தின் மேலுள்ள பற்றுதல் காரணமாக, அதன் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களித்த வண்ணம் உள்ளார். அவ்வமைப்பு விரிந்து பரவியுள்ள ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மகராஷ்டிரா உள்ளிட்ட 14 மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்டு ஏழை மக்களுக்காக பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

வறுமை, கந்து வட்டி, வரதட்சணை, மது போதை உள்ளிட்ட பல்வேறு சமூகத்தளைகளால் பாதிப்புக்கு ஆளாகியுள்ள பல லட்சம் ஏழைப் பெண்களை மீட்டு, அவர்களை மாபெரும் சக்தியாய் மாற்ற வேண்டும் என்ற கனவோடு இயங்கி வரும் சின்னப்பிள்ளைக்கு தற்போது 72 வயதாகிறது. ஆனாலும் கூட, ஒரு போதும் சோர்வுறாமல் சமூகப் பணி ஆற்றி வருகிறார். கடந்த 2001-ஆம் ஆண்டு ஸ்த்ரீ சக்தி விருதுக்குப் பிறகுதான், இவரது பில்லுசேரி கிராமத்திற்கு சாலை வசதியும், பேருந்து வசதியும் செய்து கொடுக்கப்பட்டன.

சொந்த வீடு இல்லை: இந்நிலையில், தனது குடியிருப்புப் பகுதியில் இருந்த பல்வேறு குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாகக் கட்டித் தருவதற்கும், அங்கன்வாடி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அச்சிறிய கிராமத்திற்கு வருவதற்கு சின்னப்பிள்ளையே முன்னின்று முயற்சி மேற்கொண்டார். தற்போது விவசாயக் கூலியாக வேலை பார்க்கும் தனது மூத்த மகன் சின்னத்தம்பியின் வீட்டில் ஒண்டுக் குடித்தனமாக தற்போது வாழ்ந்து வரும் சின்னப்பிள்ளைக்கென்று இதுவரை சொந்த வீடு இல்லை என்பதுதான் மிகுந்த வியப்புக்கும், வேதனைக்கும் உரியது.

வீடு தேடி வந்த அனைவருக்கும் வீடு திட்டம்: “ரெண்டு வருசத்துக்கு முந்தி, ஒரு பத்து பேர் என் வீட்டுக்கு வந்து மோடி திட்டத்துல ஒனக்கு வீடு கட்டித்தருவோம்னு சொல்லிட்டு எனக்கு பொன்னாடையெல்லாம் போத்திவிட்டு போட்டோ எடுத்திட்டுப் போனாங்க. அதுக்குப் பொறவு எந்த தகவலும் இல்ல. ஒருநா... மேலூர் தாசில்தாரம்மா அவங்க உதவியாளரோட வந்து இந்தப் பத்தரத்தக் கொடுத்துட்டு அப்பன் திருப்பதி பக்கத்துல வீடு கட்ட இடம் ஒனக்கு ஒதுக்கியிருக்காங்கம்மான்னு சொல்லிட்டுப் போனாங்க.

வீடு கட்டி தரல: அவங்க சொல்லிட்டுப் போயி இப்ப ரெண்டு வருசம் ஆகுதுங்கய்யா. ஆனா, இதுவரைக்கும் வீடு கட்டித் தரல. எனக்கு வீடு தாங்கன்னு நானும் கேக்கல. அவங்களா வந்தாங்க. அவங்களா குடுத்தாங்க. இப்ப எங்க போனாங்கன்னு தான் தெரியல. நானும் இதுக்காக எங்க மாத்தூர் பிரசிடெண்டுக்கிட்ட போய் கேட்டேன். அவங்க, இன்னமும் பிரதமர் வீடு கட்டுற திட்டத்துல பணம் ஒதுக்கீடு செய்யலம்மா, அது ஒதுக்கீடு ஆனதும் உடனே கட்டிக் குடுத்துர்றோம்னு சொல்லிட்டாங்க” என்று சொல்லி வீட்டுப் பத்திரத்தை நம்மிடம் காட்டி ஆதங்கப்படுகிறார்.

தினம் இரு பேருந்து தான்: அப்பன் திருப்பதியிலிருந்து சின்னப்பிள்ளை வசிக்கும் பில்லுசேரி கிராமம் சற்றேறக்குறைய 5 கி.மீ. தூரமாகும். இந்த ஊருக்கு காலை மற்றும் மாலை இருவேளைகளில் மட்டும் தான் நகரப்பேருந்து வந்து செல்லும். மற்ற நேரங்களில் இந்த 5 கி.மீ. தூரம் நடந்து தான் செல்ல வேண்டும். அங்குள்ள விவசாயக் கூலிகளுக்கு மட்டுமல்ல. பள்ளிக் குழந்தைகளுக்கும் இதுதான் நிலை. முதலுதவிக்கான ஆரம்ப சுகாதார மையம் கூட இங்கு கிடையாது.

அவசரத்துக்கு போக முடியாது: அருகிலுள்ள மாத்தூர் ஊராட்சிக்குத்தான் செல்ல வேண்டும். இதைப் பற்றி சின்னப்பிள்ளை மேலும் கூறும்போது, “கரோனாவுக்கு முன்னால எங்க ஊருக்கு நாலு தடவ பஸ்சு வரும். ஆனா, இப்ப ரெண்டு தடவதான் வருதுன்னு மக்கள் சொல்றாங்க. எனக்கு ஏதாவது மேலுக்கு முடியாமப் போனா, என்னோட பேரப்புள்ளைங்கதான் வண்டில கூட்டிட்டுப் போவாங்க. அவசர ஆத்தரத்துக்கு போக முடியாது. வர முடியாது. இப்ப இவங்க கொடுத்துருக்கற இடம், அப்பன் திருப்பதி மெயின் ரோட்டுல தான் இருக்கு.

வீடு கட்டி கொடுக்க கோரிக்கை: அதனால அங்கேயே வீடு கட்டிக் குடுத்துட்டாங்கன்னா, எனக்கு ரொம்ப வசதியா போகும். முன்ன மாதிரி நடக்க முடியல. சர்க்கரை, பிரசரு, தைராய்டுன்னு ஏகப்பட்ட நோய்ங்க வேற. அதுக்கு அடிக்கடி அப்பன் திருப்பதில இருக்கற ஆஸ்பத்திரிக்குதான் போறேன். அப்பப்ப எங்க களஞ்சியம் மூலமா நடத்துற சுகம் மருத்துவமனைக்கும் போவேன். அது மதுரைல இருக்கு. அதனால, எனக்கு ஒதுக்கியிருக்குற எடத்துல உடனடியா ஒரு வீட்ட கட்டிக் கொடுத்தாங்கன்னா புண்ணியமாப் போகும் சார்” என்கிறார் கைகூப்பி வணங்கியவாறு நம்மிடம்.

பில்லுசேரி காலனி பகுதியில் அமைந்துள்ள இந்த வீடுகளும்கூட கட்டி முடிக்கப்பட்டு 20 ஆண்டுகளைக் கடந்துவிட்டன. ஆங்காங்கே விரிசலோடு அவ்வீடுகள் அனைத்தும் சிதிலமடைந்து காணப்படுகின்றன. அவற்றையும் சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். சின்னப்பிள்ளையும் அதனை ஆமோதித்தார். மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பில்லுசேரி கிராமம், மாத்தூர் ஊராட்சியில் தான் அமைந்துள்ளது.

நிதி ஒதுக்கவில்லை: சின்னப்பிள்ளையின் வேண்டுகோளையடுத்து மாத்தூர் ஊராட்சி அலுவலகம் சென்று கேட்டபோது, “பாரதப் பிரதமர் மோடியின் வீடு கட்டித் தரும் திட்டத்தில் தான் சின்னப்பிள்ளைக்கு ஒதுக்கீடாகியுள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே இங்கு அத்திட்டத்தின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாத காரணத்தால், சின்னப்பிள்ளைக்குத் தாமதமாகிறது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் முன்னுரிமையின் அடிப்படையில் சின்னப்பிள்ளைக்கு வீடு கட்டித்தருவோம்” என அலுவலர்கள் பதிலளித்தனர்.

‘ஸ்த்ரீ சக்தி’யிலிருந்து ‘பத்ம ஸ்ரீ’ வரை பல்வேறு விருதுகளின் புகலிடமாக உள்ள மதுரை பெ.சின்னப்பிள்ளை ஆற்றிய மக்கள் பணிகளுக்கும், அடித்தட்டு ஏழை மகளிரின் மேம்பாட்டிற்காகவும் உழைத்த அம்மகத்தான பெண்மணியின் வேண்டுகோளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும். மட்டுமன்றி, அவரின் சமூகப் பணிகள் தொய்வின்றித் தொடரவும், இது போன்ற உதவிகள் பெண் சமுதாயத்திற்கு ஆற்றும் தொண்டாகவே அமையும்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல்: மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் செய்ததும்..! செய்யத் தவறியதும்..!

Last Updated : Mar 9, 2024, 11:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.