ETV Bharat / state

லைகா Vs சவுக்கு சங்கர்; இடைக்கால தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 19, 2024, 2:52 PM IST

Lyca productions: லைகா நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க சவுக்கு சங்கருக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High Court
Madras High Court

சென்னை: சவுக்கு சங்கர் தனது சவுக்கு மீடியா யூடியூப் (Youtube) பக்கத்தில் லைகா நிறுவனத்தை போதை கடத்தல் கும்பலுடன் தொடர்புபடுத்தி பேசியுள்ளதாகக் கூறி, லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், தமிழ்நாடு திரை உலகிலும், உலகளவிலும் நற்பெயரைக் கொண்டுள்ள லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளதால், ரூ.1 கோடியே ஆயிரம் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தவிட வேண்டும் எனவும், இந்த வீடியோ மூலம் கிடைத்த தொகையை டெபாசிட் செய்ய உத்தரவிட வேண்டுமெனவும், யூடியூப் பக்கத்தில் உள்ள வீடியோ நீக்க உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி என்.சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, லைகா நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி மற்றும் வழக்கறிஞர் அரவிந்த் ஸ்ரீவத்சவா ஆகியோர், யூடியூப்பில் அதிக பார்வையாளர்களைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே இது போன்ற அவதூறு கருத்துகளை வெளியிடுவதாகவும், யூடியூப் பக்கத்தில் உள்ள அந்த வீடியோவை 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளதாகவும் வாதிட்டனர்.

அதனையடுத்து, லைகா நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க சவுக்கு சங்கருக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதி, இந்த வீடியோக்கள் மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த யூடியூப் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். மேலும், யூடியூப்பில் உள்ள வீடியோக்களை நீக்குவது தொடர்பாக சவுக்கு சங்கர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: அதிமுக கொடி, இரட்டை இலை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு நிரந்தர தடை.. நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.