ETV Bharat / state

முரசொலி நில விவகாரம்: தேசிய பட்டியலின ஆணையம் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 7:52 PM IST

Murasoli Trust Land Case: முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரில், முரசொலி அறக்கட்டளையின் மேல்முறையீடு குறித்து பதிலளிக்க தேசிய பட்டியலின ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Murasoli Trust Land Case
முரசொலி அறக்கட்டளை வழக்கு

சென்னை: முரசொலி அறக்கட்டளை சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1,825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன், கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் அளித்து இருந்தார்.

இந்த புகார் மீதான விசாரணைக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால், பட்டியலின ஆணையம் விசாரிக்க முடியாது எனக் கூறி, முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், முரசொலி சொத்து மாதவன் நாயர் என்கிற நில உரிமையாளரிடம் இருந்து, அஞ்சுகம் பதிப்பகத்திற்கு விற்பனைப் பத்திரம் மூலம் வாங்கப்பட்டுள்ளதாகவும், 1974ஆம் ஆண்டு முதல் அந்த நிலத்தின் உரிமை 56 ஆண்டுகளாக முரசொலி அறக்கட்டளையின் வசம்தான் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னையில் பஞ்சமி நிலமே இல்லை என அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவே சட்டப்பேரவையில் அறிவித்து இருந்ததாகவும், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பெற்ற வெற்றியை சகித்துக் கொள்ள முடியாமல், பாஜக இந்த புகாரை அளித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, விதிகளின்படி புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி, உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தேசிய பட்டியலின ஆணையத்திற்கு உத்தரவிட்டு, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, இந்த உத்தரவை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (பிப். 12) விசாரணைக்கு வந்தது. அப்போது, மேல்முறையீடு வழக்கு குறித்து தேசிய பட்டியலின ஆணையம், புகார்தாரர் சீனிவாசன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும், சீனிவாசன் அளித்த புகார் மீது தேசிய பட்டியலின ஆணையம் அடுத்தகட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் உரை நிராகரிப்பு.. 2 நிமிடங்களில் நிறைவு செய்த ஆளுநர்.. சட்டப்பேரவையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.