ETV Bharat / state

கோடை மழையால் குளிர்ந்த கரூர்.. 20 ஆண்டுக்குப் பிறகு நிரம்பிய ஏரியால் விவசாயிகள் மகிழ்ச்சி! - Karur Jegadabi Lake

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 22, 2024, 6:45 PM IST

Jegadabi Lake: கரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்டம்தோறும் உள்ள பல்வேறு குளங்கள் மற்றும் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து விவரிக்கிறது இந்த சிறப்பு செய்தி தொகுப்பு.

ஜெகதாபி  ஊர் மக்கள் பேட்டி
ஜெகதாபி ஊர் மக்கள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பொதுமக்கள் அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

கரூர்: ஒரு நாட்டின் முக்கிய வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்கக்கூடிய விவசாயம், மக்களின் உணவு தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், காலநிலை மாற்றத்தால் போதுமான நீர் கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். இதனை தாங்கிக் கொள்ள முடியாத பல விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை மனை பிரிவுகளாக மாற்றி வருகின்றனர்.

விவசாயம் என்பது ஆற்று பாசனத்தை மட்டுமே இருக்கக் கூடாது என மன்னர்கள் காலத்திலே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஒவ்வொரு ஊரிலும் மழை நீரை சேமிக்க குளங்கள் அதிக அளவில் வெட்டப்பட்டது. ஆனால், போதுமான மழை இல்லாத காரணத்தால் முக்கிய ஆறுகளில் தண்ணீர் வரத்து இன்றி உள்ளூர் குளங்கள் வறண்டு காணப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக கரூரில் 113 டிகிரி வெப்பநிலை அதிகபட்சமாக பதிவான நிலையில், கோடை மழையால் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கரூர் மாவட்டத்தில் மே 20ஆம் தேதி ஒரே நாளில் 602.2 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது.

இதில் கரூரில் உள்ள எட்டு வட்டாரங்களில் 132.6 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது. இரண்டாவது நாளான மே 21ஆம் தேதியான நேற்ற ஒரே நாளில் 231 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது. இதில் கரூர் வட்டாரத்தில் மட்டும் அதிகபட்சமாக 42 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது.

நிரம்பிய ஏரி: இதனால் கரூர் வெள்ளியணை ஜெகதாபி, உப்பிடமங்கலம், பொரணி, கஞ்சமனூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக வறண்டு கிடந்த உள்ளூர் கிராமப்புற குளங்கள் நிரம்பியுள்ளன. இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு ஜெகதாபி பகுதியைச் சேர்ந்த விவசாயி சங்கர் அளித்த பேட்டியில் கூறுகையில், "ஜெகதாபியில் உள்ள குளம் நிரம்பி உள்ளதால் இதைச் சுற்றியுள்ள 22 ஊர்கள் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும்.

சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஜெகதாபி குளத்திற்கு கன்னிமார்பாளையம், லந்தகோட்டை மாணிக்கபுரம் பகுதிகளில் உள்ள குளங்கள் நிரம்பி, உபரி நீர் குளத்திற்கு வரும் என்பதால், இன்னும் இரு நாட்களில் மேலும் குளம் நிரம்பி முழுக் கொள்ளளவை எட்டும்” என தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்: மேலும் இது குறித்து சசிகுமார் என்ற இளைஞர் கூறுகையில், “கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மானாவாரி பயிர் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இந்த மழை ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

தற்பொழுது மழை பெய்து 2005-க்கு பிறகு குளம் நிரம்பி உள்ளது. இதனால் 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு உள்ள விவசாயிகள் பயன்பெறுவார்கள். ஜெகதாபி குளத்திலிருந்து பால்வார்பட்டி, கஞ்சமனூர், உப்பிடமங்கலம் உள்ளிட்ட பகுதியின் வழியாக அமராவதி ஆற்றில் தண்ணீர் கலக்கும் என்பதால், சுற்று வட்டாரப் பகுதியில் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும்" என தெரிவித்தார்.

அதே கிராமத்தில் துளசிகொடும்பு பகுதியில் உள்ள குளம் நிரம்பி உள்ளதை பார்வையிட்ட ஜெகதாபி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், “தான் முதன்முறையாக ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு மக்களுக்கு பணியாற்றி வருகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக இல்லாத குடிநீர் பற்றாக்குறை கடந்த ஓராண்டாக நிலவிவந்தது.

கடுமையான குடிநீர் தட்டுப்பாடு: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பொதுமக்களுக்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, ஜெகதாபி ஊராட்சியில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பியுள்ளன.

கடந்த 2006ஆம் ஆண்டுக்கு பிறகு தற்பொழுது தான் அனைத்து குளங்களும் அதிகளவு மழை பெய்ததால் நிரம்பியுள்ளது. கால்நடைகள் வளர்ப்புக்கு மிக முக்கிய ஆதாரமாக உள்ள விவசாய நிலங்கள் இதனால் பயன்பெறும். முன்னெச்சரிக்கையாக குளங்கள் தூர்வாரப்பட்டதால் இன்று அனைத்து பகுதிகளிலும் குளங்கள் நிரம்பி உள்ளது. தமிழக முதலமைச்சருக்கு நன்றி" என தெரிவித்தார்.

துளசிகொடும்பு குளம் தவிர ஆனந்நகவுண்டனூர், பொரணி பகுதி குளங்கள் நிரம்பி உள்ளன. இதனால் அல்லாலிகவுண்டனூர், வேலாயுதம்பாளையம், கஞ்சமனூர் உப்பிடமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு உபரி நீர் சென்று அப்பகுதி மக்களும் பயன்பெறுவர்.

கடந்த ஆண்டுகளில் பெய்த மழை போதுமான அளவு, குடிநீர் தேவை விவசாய தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு இருந்ததில்லை. தற்போது பெய்துள்ள மழையால் ஜெகதாபி ஊராட்சியில் இனி குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மோசமான வானிலை.. அந்தமான் வரை சென்ற விமானம் மீண்டும் சென்னையில் தரையிறக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.