ETV Bharat / state

சவுக்கு சங்கர் மீது பொய் வழக்கா? - சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு - SAVUKKU SHANKAR ISSUE

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 3:58 PM IST

Savukku Shankar: யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பொய் வழக்குப்பதிவு செய்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அவர் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டம் குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சவுக்கு சங்கர் கோப்புப்படம்
சவுக்கு சங்கர் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழக பெண் காவலர்களை அவதூறாக பேசியது உள்ளிட்ட காரணங்களுக்காக, பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு ஆதரவாக மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், "ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்குப் போட்டப்பட்டிருப்பதாகவும், கோவை சிறையில் அவரது கையை உடைத்து சித்தரவதை செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது குண்டர் சட்டம் ஏவியுள்ளது குறித்து உயர் நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" எனவும் அந்த கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், "தற்போது போலீசார் அவர் மீது கோவை, தேனி, திருச்சி, சேலம், சென்னை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 7 வழக்குகள் போட்டுள்ளனர். இன்னும் பல வழக்குகள் போட்டு வருகின்றனர். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர் மீது 10க்கும் மேற்பட்ட சிறைக் காவலர்கள் இருட்டு அறையில் அடைத்து தாக்கிச் சித்தரவதைச் செய்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து சவுக்கு சங்கர் நீதித்துறை நடுவரிடம் புகார் கூறியதைத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேலும், நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது கோவை சிறையில் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதென்றும், சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தன்னைத் தாக்கியதாகவும் சவுக்கு சங்கர் கூறியுள்ளார்" எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் போன்றவற்றில் சவுக்கு சங்கர் அரசுக்கும், காவல்துறைக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் வெளிப்படையாக ஆதரவாக செயல்பட்டது கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஊடகத்தை வைத்துக் கொண்டு உள்நோக்கத்தோடு தவறான, பொய்யான கருத்துகளைத் தெரிவிக்கும்போது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதைவிடுத்து சவுக்கு சங்கர் மீது தமிழக அரசும், காவல்துறையும் குண்டர் சட்டத்தை ஏவுவது போன்ற அடக்குமுறையை ஏவுவது கண்டிக்கத்தக்கது. சவுக்கு சங்கர் காவல்துறையில் உள்ள பெண்களை இழிவுப்படுத்தி யூடியூப் சேனலுக்குப் பேட்டி கொடுத்த வழக்கை நடத்தி அவருக்குச் சட்டப்படி தண்டனைப் பெற்றுத் தருவதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், பல்வேறு மாவட்டங்களில் அவர் மீது புகார்கள் அளிக்கப்பட்டு வழக்குகள் போடுவது தமிழக அரசு மற்றும் காவல்துறையின் பழிவாங்கும் நடவடிக்கையாகும்.

சவுக்கு சங்கர் கைதை தொடர்ந்து 'ரெட்பிக்ஸ்' யூடியூப் சேனல் செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்ட் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதும் பல்வேறு வழக்குகள் போட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சவுக்கு சங்கர் மீதான காவல்துறையின் பழிவாங்கல் நடவடிக்கையின் உச்சகட்டமாக தற்போது அவர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டுள்ளது.

குண்டர் சட்டம் உள்ளிட்ட தடுப்புக் காவல் சட்டங்கள் மனித உரிமைகளுக்கு எதிரானவை என்பதால் அவற்றைச் சட்டப் புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டுமென மனித உரிமை அமைப்புகள் நீண்ட காலமாக போராடி வருகின்றன. இச்சூழலில் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல.

தமிழக அரசையும், காவல்துறையையும் தொடர்ந்து விமர்சிக்கும் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட் போன்ற ஊடகவியலாளர்கள் மீது பழிவாங்கும் நோக்கில், ஊடகச் சுதந்திரத்திற்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கோவை மத்திய சிறைக் காவலர்கள், சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் தம்மை துன்புறுத்தியதாக சவுக்கு சங்கர் கூறும் குற்றச்சாட்டு குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஊடகவியலாளர்கள் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட் கைது, அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்று பேராசிரியர் அ. மார்க்ஸ், பேராசிரியர் மு. திருமாவளவன் உள்பட இருபதுக்கும் மேற்பட்டோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "மீண்டும் மணல் குவாரிகளை திறப்பது தமிழகத்தை பாலைவனமாக்கிவிடும்"- ராமதாஸ் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.