ETV Bharat / state

10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை முதல் விநியோகம்.. எப்படி பதிவிறக்கம் செய்வது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 6:55 PM IST

SSLC Hall ticket: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுத உள்ள தனித்தேர்வர்கள் வருகின்ற 24ஆம் தேதியான நாளை பிற்பகல் 2 மணி முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SSLC Hall ticket
SSLC Hall ticket

சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, 12ஆம் வகுப்பிற்கு மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையிலும், 11ஆம் வகுப்பிற்கு மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பிற்கு மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுத உள்ள மாணவர்களுக்கான அறிவியல் செய்முறைத்தேர்வு, இன்று (பிப்.23) முதல் தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பம் செய்த தனித்தேர்வர்கள், வரும் 24ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற அரசு இணையதளத்தின் மூலமாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பம் செய்தவர்கள், தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, தேர்வுக்கான நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தனித்தேர்வர்களுக்கான பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத்தேர்வு, 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில், அவர்களுக்கான செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு, இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். மேலும், உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்" என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கனிமொழி பெயரில் 30-க்கும் மேற்பட்டோர் விருப்பமனு.. விறுவிறுப்படையும் திமுக தேர்தல் பணிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.