ETV Bharat / state

வட தமிழகத்தில் வெப்ப அலை வீசக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்! - TN Weather Report

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 19, 2024, 2:46 PM IST

TN Weather Report
வானிலை அறிக்கை

TN Weather Report: வட தமிழக உள் மாவட்டங்களில் வரண்ட வானிலை நிலவுவதால், ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: வட தமிழக உள் மாவட்டங்களில் வரண்ட வானிலை நிலவுவதால், ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை: தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் இயல்பை விட 2 டிகிரி – 4 டிகிரி செல்சியஸ் என மிக அதிகமாக இருந்தது. தமிழக கடலோரப் பகுதிகளில் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது.

அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் 41.5 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 40.9 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 40.8 டிகிரி செல்சியஸ், மதுரை மற்றும் ஈரோட்டில் 40.6 டிகிரி செல்சியஸ், தர்மபுரியில் 40.5 செல்சியஸ் மற்றும் திருத்தணியில் 40.3 செல்சியஸ் பதிவாகி உள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38 டிகிரி – 40 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 டிகிரி – 38 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 24 டிகிரி – 30 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 38.7 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 37.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (வெள்ளிக்கிழமை) தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மேலும், நாளை (ஏப்ரல் 20) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்ரல் 21ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதைத் தொடர்ந்து, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அடுத்த ஐந்து நாட்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. நாளை (ஏப்ரல் 20) அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும். அதற்கு அடுத்த மூன்று தினங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பானது குறைவு.

அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 3 டிகிரி – 5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39 டிகிரி – 42 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34°–39° செல்சியஸ் இருக்கக்கூடும்.

இதையடுத்து, நாளை (ஏப்ரல் 20) அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும். அதற்கு அடுத்த மூன்று தினங்களில், அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

ஈரப்பதம்: இன்று தொடங்கி வரும் 23ஆம் தேதி வரை, காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில், பிற்பகலில் 30 - 50 சதவிகிதமாகவும், மற்ற நேரங்களில் 40 - 75 சதவிகிதமாகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50 - 85 சதவிகிதமாகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படும் வாய்ப்புள்ளது.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை: இன்று வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 - 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: அடுத்த 5 நாட்களுக்கு 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்! - Weather Report

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.