ETV Bharat / state

பேஸ்புக் லிங்க்கை தொட்ட சுங்க அதிகாரிக்கு ரூ.39 லட்சம் அபேஸ்.. நாடு முழுவதும் 7.5 கோடி சுருட்டியது அம்பலம்! - Facebook link cheating

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 7:31 PM IST

Online Fraud: ஆன்லைனில் டிரேடிங் செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி இந்தியா முழுவதும் 7.5 கோடி ரூபாய் சுருட்டிய மோசடி கும்பலைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரின் புகைப்படம்
கைது செய்யப்பட்ட நபரின் புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை மாங்காட்டைச் சேர்ந்தவர் மனோரஞ்சன் குமார். இவர் மத்திய சுங்கவரி மற்றும் கலால் வாரியத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் ஓய்வு நேரங்களில் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் நேரத்தைச் செலவழிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் 5ஆம் தேதி முகநூலைப் பயன்படுத்திக் கொண்டு இருந்துள்ளார். அப்போது டிரேடிங் தொடர்பான விளம்பரம் வந்துள்ளது. அதில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என்ற கவர்ச்சிகரமான வாசகங்கள் இடம் பெற்று இருந்துள்ளது.

இதனை நம்பி அந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்ட லிங்கை க்ளிக் செய்து 'ஸ்ட்ரீட் ட்ரேடிங்' என்ற வாட்ஸ் அப் குழுவில் இணைந்துள்ளார் சுங்கத்துறை அதிகாரியான மனோரஞ்சன். அதன் பின்னர் 'செஸ் செஸ்' என்ற செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார்.

இதனையடுத்து, அந்த செயலியில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி பல்வேறு பங்குகளை வாங்கியுள்ளார். இதற்காக அந்த செயலில் கொடுக்கப்பட்ட வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ஆன்லைன் மூலம் பணம் அனுப்பியுள்ளார். முதலில் சிறிய தொகையை முதலீடு செய்த அவர், பின்னர் பெரிய தொகைகளை முதலீடு செய்துள்ளார். இவ்வாறாக சுமார் 39 லட்சம் ரூபாய் இழந்த பின்னர், தான் சைபர் கிரிமினல்களால் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளார்.

பின்னர், இதுகுறித்து ஆவடி காவல் ஆணையராக மத்திய குற்றப் பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ளத் துவங்கினர். மேலும், இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் ஐபி லிங்க் முகவரியை வைத்து மோசடி கும்பல் குஜராத் மாநிலத்தவர்கள் எனக் கண்டறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையிலான போலீசார், குஜராத் மாநிலம் ஆனந்தை பகுதியைச் சேர்ந்த பிரேம் ராம் என்பவரை குஜராத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

அவரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 44 நபர்களுக்கு இந்த லிங்க் அனுப்பி, அதன் மூலம் சுமார் 7.5 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, குஜராத்தில் கைது செய்த பிரேம் ராமை சென்னை அழைத்து வந்த போலீசார், அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய சிலரைப் பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: போக்குவரத்து போலீசுடன் வாக்குவாதம்: வாகன ஓட்டி மீது பாய்ந்தது வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.