ETV Bharat / state

போக்குவரத்து போலீசுடன் வாக்குவாதம்: வாகன ஓட்டி மீது பாய்ந்தது வழக்கு! - CHENNAI TRAFFIC POLICE

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 6:12 PM IST

Police case on motorist: சென்னையில் கடந்த 6ஆம் தேதி போக்குவரத்து போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வாகன ஓட்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Motorist arguing Traffic Police
Motorist arguing Traffic Police (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை, கொளத்தூரில் கடந்த 6ஆம் தேதி செந்தில் நகர் சிக்னல் அருகே போக்குவரத்து தலைமைக் காவலர் ராமச்சந்திரன் மற்றும் காவலர் வாசுதேவன் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி வாகனத்திற்கு உண்டான அனைத்து ஆவணங்களையும் காண்பிக்குமாறு போக்குவரத்து காவல்துறையினர் கேட்டுள்ளனர். இதற்கு அந்த நபரும் ஓட்டுநர் உரிமம் இன்சூரன்ஸ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் முறையாகக் காண்பித்ததாகக் கூறப்படுகிறது.

அனைத்து ஆவணங்களும் இருந்த போதிலும் போக்குவரத்து காவலர் விதிமீறலில் ஈடுபட்டதாக 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஓட்டுநர் தன்னிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளது. எதற்கு அபராதம் விதித்து உள்ளீர்கள் என கூறி போக்குவரத்து காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை அந்த நபர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவியது. இந்த நிலையில் போக்குவரத்து தலைமைக் காவலர் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்திருந்தார்.

புகாரின் அடிப்படையில், வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்தும், வாகனப் பதிவு எண்ணை வைத்தும் விசாரணை மேற்கொண்டதில் வாகன ஓட்டுநர் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த செந்தமிழன் என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், தகுந்த ஆதாரங்களைப் போக்குவரத்து போலீசாரிடம் காட்டாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறி மூன்று பிரிவின்கீழ் செந்தமிழன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆபாசமாகப் பேசுதல், மிரட்டுதல், காவலரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், செந்தமிழனை அழைத்து விசாரணை செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பட்டாக் கத்தியுடன் வலம் வரும் ரவுடி கும்பல்.. மாமூல் தர மறுக்கும் வியாபாரிகளுக்குச் சரமாரி வெட்டு! - Rowdy Attack In Chennai

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.