ETV Bharat / state

பாஜக ஒரு கூஜா.. இலவசங்களுக்காக மக்கள் ஓட்டு போட்டுள்ளனர் - கடம்பூர் ராஜூ பரபரப்பு பேச்சு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2024, 1:25 PM IST

Kadambur Raju: எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது என்றும், ஆனால், தற்போது தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி: தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான நேற்று (பிப்.24), கோவில்பட்டியில் மாபெரும் பொதுக்கூட்டம், அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் என்.கே.பி வரதராஜ பெருமாள் தலைமையில் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது, “தமிழகம் முழுவதும் அனைவரும் தங்கள் இல்லங்களில் ஒரு தலைவியை இழந்தது போல் நினைத்து அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். தேர்தலை பார்த்து பயப்படும் கட்சி அதிமுக அல்ல. தேர்தல் என்பது அதிமுகவுக்கு அல்வா சாப்பிடுவது போன்றது. பாஜக டெல்லிக்கு ராஜாவாக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டுக்கு அவர்கள் ஒரு கூஜாதான்.

அதிமுகவை ஒரு சாதாரண தொண்டனாக வழிநடத்துபவர் எடப்பாடி பழனிசாமி. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போன்று அதிமுகவை தில்லோடும், தெம்போடும் வழி நடத்தக்கூடியவர் எடப்பாடி பழனிசாமி. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து, இலவசங்களுக்காக மக்கள் ஓட்டு போட்டுள்ளனர்.

இதேபோல் அரசு ஊழியர்களும் திமுகவும் ஓட்டு போட்டு ஏமாந்துள்ளார்கள். தற்போது அதை நினைத்து அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வருந்துகின்றனர். அனைவருக்கும் ரூ.1,000 வழங்குவோம் என்று கூறி, தற்போது தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் வழங்குகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது. ஆனால், தற்போது தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. மேலும், நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் போல் ஐபிஎஸ் முடித்துவிட்டு டெபிட்டேஷன் வந்த அரசியல்வாதி அல்ல ஜெயலலிதா. அவர் உயிருடன் இருந்திருந்தால், செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு யாரும் வந்திருக்க முடியாது.

தற்போது நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு பல்வேறு கட்சிகள் காணாமல் போகும். தமிழக வரலாற்றில் திமுக மற்றும் பாஜகவின் நிலையும் மாறும். திமுக ஆட்சியின் மீது தமிழக மக்கள் வெறுப்போடு இருக்கிறார்கள். பாஜக, தமிழக மக்கள் நலனில் அக்கறை கொள்ளவில்லை. தீண்டத்தகாத கட்சியாக இந்தியாவே பாஜகவை பார்த்த காலத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு சீட்டு கொடுத்து ஜெயிக்க வைத்தார்.

10 வருடம் பாஜக ஆட்சியில், இலங்கைத் தமிழர் பிரச்னையில் தீர்வு, கச்சத்தீவு மற்றும் காவேரி முல்லைப் பிரச்னை தீர்க்கப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதோடு உள்ளது. மக்களுக்கு எந்த நன்மைகளும் செய்யாத நீங்கள், தற்போது எப்படி வாக்கு கேட்பீர்கள்? முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வகுத்த பாதையில் சென்று நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: நாச்சியப்பன் பாத்திரக்கடை கப்பு போல் ஆன வானதிக்கு வழங்கிய ஐ.எஸ்.ஓ தரச்சான்று.. சர்ச்சையில் சிக்கியது ஏன்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.