ETV Bharat / state

தொழிலாளர்களை காரணமின்றி பணிநீக்கிய தொழிற்சாலை.. ஆதரவாக களமிறங்கிய முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 4:55 PM IST

Former minister B.V.Ramana arrested: திருவள்ளூரில் இயங்கி வரும் தொழிற்சாலை நிர்வாகம் 172 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.

Former minister B.V.Ramana arrested
முன்னாள் அமைச்சர் பி வி ரமணா கைது

முன்னாள் அமைச்சர் பி வி ரமணா கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் கிராமத்தில் தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அந்த தொழிற்சாலை இயங்குவதற்கு நிலம் கொடுக்க முன்வந்த விவசாயிகளுக்கு தொழிற்சாலை நிர்வாகம் வேலை வழங்கியிருந்தது. இந்நிலையில் முதலில் இருந்த நிர்வாகம் கைமாறி பி.சி.ஏ நிர்வாகத்திற்கு சென்றது.

தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்ததால் தொழிற்சாலையில் 22 நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் 150 ஒப்பந்த தொழிலாளர்கள் என மொத்தம் 172 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் நிலம் கொடுத்து பணியாற்றி வந்த 172 தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கியது புதிதாக வந்த தொழிற்சாலை நிர்வாகம். இதனைத்தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 172 தொழிலாளர்களும் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி கடந்த 4 வருட காலமாக பல்வேறு கட்டங்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாலை மறியல் போராட்டம், கம்பெனிக்கு பூட்டு போடும் போராட்டம், கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம், கலெக்டர் அலுவலகத்தில் தங்களது குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் நிலம் கொடுத்த அந்த தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் இந்நாள் வரையிலும் தொழிற்சாலை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏ, எம்பி, அமைச்சர், முதலமைச்சர், தனிப்பிரிவு என அனைத்து இடங்களிலும் புகார் தெரிவித்தும் இது வரை யாரும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் தொழிலாளர்களின் குடும்பத்தினர் இன்று(பிப.12) தொழிற்சாலை முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதனையடுத்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொழிலாளர்களுக்கு ஆதரவாகச் சென்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது பாதுகாப்புக்காக சென்றிருந்த போலீசார் பேசிக் கொண்டிருந்த போதே தொழிலாளர்களையும், ஆதரவு தெரிவித்த முன்னாள் அமைச்சரையும் திடீரென கைது செய்ததால் அப்பகுதி முழுவதும் பரபரப்பானது. போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை குண்டுகட்டாக ஏற்றியதையடுத்து, போலீசார் அராஜகத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் குற்றம் சாட்டினார். கைது செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களும் தற்போது திருவள்ளூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: ரோஜ்கர் மேளா: நாடு முழுவதும் இன்று 1 லட்சம் பேருக்கு பணி ஆணை வழங்கும் பிரதமர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.