ETV Bharat / state

"நீ இப்படி தான் இருப்பியா?" AI மூலம் உருவான காணாமல் போன குழந்தையின் படம் - தவிக்கும் பெற்றோர்! - Missing kid search using AI

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 22, 2024, 6:05 PM IST

Updated : May 23, 2024, 2:22 PM IST

Chennai Child Missing: சென்னையில் 13 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன குழந்தை தற்போது எப்படி இருப்பார் என செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் புகைப்படத்தை உருவாக்கி, குழந்தையை தேடும் பெற்றோர், எங்கள் குழந்தையை யார் வைத்திருந்தாலும் தங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என கண்ணீர் ததும்ப பேட்டியளித்துள்ளனர்.

Child Kavitha
குழந்தை கவிதா (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

குழந்தை கவிதாவின் பெற்றோர் (Video Credit - ETV Bharat Tamilnadu)

சென்னை: “எங்க குழந்தைக்கு வேணா எங்களை தெரியாம இருக்கலாம், ஆனா எடுத்துட்டு போனவங்களுக்கு தெரியும், தயவு செஞ்சு எங்க பொண்ண திருப்பி கொடுத்திடுங்க” என கண்களில் ததும்பி நிற்கும் கண்ணீரை துடைக்கவும் மறந்து பேசுகிறார் வசந்தி. 13 ஆண்டுகளுக்கு முன்பு தங்களின் பெண் குழந்தையை தொலைத்துவிட்டு இன்னமும் தேடிக் கொண்டிருக்கின்றனர், வசந்தி - கணேசன் தம்பதியினர்.

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த கணேசன் - வசந்தி என்ற தம்பதியினக்கு பிறந்த கவிதா என்ற பெண் குழந்தை, அதன் இரண்டு வயதில் கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி 5 மணியளவில், வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென மாயமாகியுள்ளார். இது பற்றி விவரிக்கும் கணேசன், "13 ஆண்டுகளாக குழந்தையை கண்டுபிடிக்க இடையறாது முயற்சி செய்து வருகிறேன்" என கூறுகிறார்.

முடிவு எட்டப்படாமல் நீண்டு கொண்டே சென்ற இந்த வழக்கை, கடந்த 2023ம் ஆண்டில் தீர்க்க முடியாத வழக்கு என கூறி முடித்து வைக்க முடிவு செய்தனர் போலீசார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கணேசன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசாரின் முடிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றும் கணேசன், தனது சக்தி அனைத்தையும் திரட்டி பெரும் தொகையை இது வரையிலும் செலவிட்டுள்ளதாக கூறுகிறார்.

இது பற்றி கூறும் கணேசன், " நீதிமன்றத்தின் தலையீட்டால், அதிகாரிகள் தொழில்நுட்பத்தின் உதவியை நாடினர். குழந்தை கவிதாவின் நினைவுகளாக எஞ்சியிருந்தது எங்கள் வீட்டில் இரண்டே புகைப்படங்கள் தான். வீட்டில் நடைபெற்ற திருமணம் போன்ற விழாக்களின் போது எடுத்த புகைப்படங்களை சேகரித்து அதிகாரிகளிடம் வழங்கினேன். கவிதாவின் 1 வயது மற்றும் 2 வயதின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவை. அதிலிருந்து அதிநவீன தொழில்நுட்பமான, செயற்கை நுண்ணறிவு (AI - Artificial Intelligence) தொழில்நுட்பத்தால் 14 வயதில் கவிதா எப்படி இருப்பார் என்ற புகைப்படத்தை அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர்" என்றார்.

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தனது மகளின் படத்தைப் பார்த்து தாயார் வசந்தி கண்கலங்கியது இதயத்தை உலுக்குவதாக இருந்தது. நகை மதிப்பீட்டாளர் பணியில் தற்போது வரும் ஊதியம் குடும்பத்தை நடத்துவதற்கே போதுமானதாக இல்லை என கூறும் கணேசன், மகளைத் தேடுவதற்கு செலவிட முடியாத நிலை இருப்பதாக கூறுகிறார். இந்த தம்பதியின் மற்றொரு மகன் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார்.

ஏஐ மூலம் கிடைத்துள்ள புகைப்படத்தால் தங்கள் மகள் தங்களுக்கு திரும்ப கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக நம்பும் பெற்றோர், தங்களின் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து வருவதாகவும், சமூக வலைத்தளங்களிலும் தேடி வருவதாகவும் கூறுகின்றனர். "என் குழந்தையை எங்காவது பார்த்தால், எங்களுக்கு தகவல் கொடுங்கள் ” என கண்ணீருடன் தெரிவித்தார்.

கவிதாவின் தற்போதைய புகைப்படத்தைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டவராக இருக்கும் தாய் வசந்தி பேசுகையில், “ குழந்தை கவிதாவே தற்போதைய புகைப்படத்தை பார்த்து, எங்களை தெரிந்துக்கொள்வதற்கான வாய்ப்பு குறைவு தான். குழந்தையை வைத்திருப்பவர்கள் தான் குழந்தையை எங்களிடம் கொடுக்க வேண்டும். கடந்த 13 வருடங்களாக குழந்தையை தேடி வருகிறோம். குழந்தையைப் பற்றி தெரிந்தால், கண்டிப்பாக எங்களுக்கு (இந்த எண்ணிற்கு 9444415815 அல்லது 9498179171) தகவல் கொடுங்கள்” என உருக்கமாக கேட்டுக்கொண்டார்.

சாதாரண பொருளாதார பின்புலத்தில் இருக்கும் இந்த பெற்றோர் தங்களின் பலம் அனைத்தையும் ஒன்று திரட்டி மகளின் முகத்தைக் காண தவமிருக்கின்றனர். கமல்ஹாசன் நடிப்பில் 1992-ம் ஆண்டு வெளியான சிங்காரவேலன் திரைப்படத்தில் குஷ்புவின் புகைப்படத்தை கணினி மூலம் உருவாக்குவது போன்ற காட்சி இருக்கும். கிட்டத்தட்ட அதே முயற்சியை ஏஐ மூலம் சாத்தியமாக்கியிருக்கின்றனர் போலிசார். செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கு அனுப்பியும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் குழந்தையை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கி இருப்பதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 2 வயதில் காணாமல் போன குழந்தை 14 வயதில் எப்படி இருப்பார்?.. ஏஐ மூலம் தேடும் காவல்துறை! - Missing Child AI

Last Updated : May 23, 2024, 2:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.