சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 3வது நாளாக அமலாக்கத்துறை சோதனை! முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Desk

Published : Jan 21, 2024, 11:42 AM IST

அமலாக்கத்துறை

ED raid: சென்னையில் பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் மூன்றாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல கட்டுமான நிறுவனத்தின் நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் மூன்றாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்களான எஸ்.கே பீட்டர் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் கருத்து வேறுபாடு காரணமாக சில தினங்களுக்கு முன்பு பிரிந்துள்ளனர்.

இதன் காரணமாக தனக்கு சேர வேண்டிய பங்கை ஸ்ரீராம், எஸ்.கே பீட்டரிம் கேட்ட நிலையில், எஸ்.கே பீட்டர் அவரது பங்கை கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த ஸ்ரீராம் இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளார். புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வந்த நிலையில், இந்த வழக்கை தனக்கு சாதகமாக சரி செய்து கொள்ள, இடைத்தரகர்கள் மூலம் சுமார் 50 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்ததாக பீட்டர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: கோயில் செயல் அலுவலர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியில் நீடிக்கிறார்களா? - தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

அதன் அடிப்படையில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாக கூறி அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை அபிராமபுரம், கோட்டூர்புரம், அசோக் நகர் உள்ளிட்ட எஸ்.கே பீட்டருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது இல்லத்தில் ஜன.19ஆம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மூன்றாவது நாளாக இன்றும் (ஜன. 21) தொடர்ந்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்று வரும் இந்த சோதனையில், முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சோதனை முடிந்த பின்னர் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தனியார் கோச்சிங் சென்டரில் இனி இதற்கெல்லாம் தடை.. மத்திய கல்வி அமைச்சகம் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.